ஷண்முக சுப்பையா/தெருப்பாடகன்

ஆத்ம சுருதி மீட்டி
ஐம்புலனும் அதிலொடுங்க
அபூர்வ ராகத்தில்
அபூர்வ தாளத்தில்
அன்று நீ
தெருவில் நின்று
பாடிய பாட்டை நான்
மறைவில் நின்று
கேட்டேன்.
நின்பாட்டு முடிய
என் ஆத்ம சுருதி குலைய
அவ்விடம் விட்டகன்றேன்.