கோபிகிருஷ்ணன்/குற்றமும் தண்டனையும்

5-1-85. முற்பகல். முக்கியமான ஒரு கடிதத்தை டைப் செய்து கொண்டிருந்தேன். தொலைபேசி மணி அடித்தது. சகஊழியர் க்ளமென்ட் அதை எடுத்தார். செய்தி அனைவருக்கும் தெரி விக்கப்பட்டது. அன்றைக்கு இரவு 10-45-க்கு டாஸ்டாவஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ என்ற புதினத்தின் திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்போகிறார்கள். தவறவிட வேண் டாம். ஒரு இலக்கிய நண்பர் அறிவித்திருந்தார். எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது, தொலைக்காட்சி எப்பொழுதாவது இந்த மாதிரி நல்ல காரியங்கள் செய்து கொண்டிருக்கிறது என்று.
மணி பிற்பகல் 1-15. இப்பொழுது நண்பர் ரமேஷ் சாப்பாட் டிற்கு வீடு திரும்பியிருப்பார். நான் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து மிகவும் அருகாமையில்தான் அவர் வீடு. அவரிடம் போய்ச் சொன்னதில் அவருக்கும் மிகவும் மகிழ்ச்சி. அவர் முன் தினம் தொலைக்காட்சியைப் பார்க்காததால் அது அவருக்குத் தெரிந் திருக்கவில்லை.இரவு 9-30க்கு அவர் வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டு அலுவலகம் திரும்பிப்பணியைத் தொடர்ந்தேன்.
எனக்கு மாலை இரண்டு சந்தோஷங்கள் காத்துக்கொண்டிருக் கின்றன என்று அகமகிழ்ந்து கொண்டிருந்தேன். ஒன்று மாலை அலுவலகத்திலிருத்து சீக்கிரமே கிளம்பி ஜே.கே.யின் உரையைக் கேட்பது. இரவு ஒரு பெரிய படைப்பாளியின் படைப்பின் படக் காட்சியைக் கண்டுகளிப்பது.
மாலை மணி 4-45. அப்பொழுது கிளம்பினால் பஸ் பிடித்து வஸந்த் விஹாரை 5-30க்குள் வந்தடைந்து விடலாம். இன்னும் வேலை முடியவில்லை சற்று எரிச்சலாக இருந்தது. எல்லாம் அவசரமாகச் செய்து முடிக்க வேண்டிய அலுவல்கள். .
நடுவில் விட்டு விட்டு நகர முடியாது. கடைசியாக அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது சரியாக மணி 6-30. ஜே.கே. உரையை முடித்திருப்பார். ‘மனிதனுக்குக் கடமைதான் முக்கியம்,’ என்று சொல்லிப்பார்த்துக்கொண்டேன். ‘செய்யும் தொழிலே தெய்வம், வேறு எல்லாச்செயல்களும் இரண்டாம் பட்சம்’ என்று தேற்றிப் பார்த்துக் கொண்டேன். ‘தொழில் மூலமாக நீ கடவுளைத் தரிசிக்கிறாய்’ என்ற கார்லைலின் கூற்றை மனதிற்குக் கொண்டுவந்து நிறுத்திப் பார்த்தேன். எனக்கு எரிச்சல்தான் அதிகரித்தது. உண்மையிலேயே எந்தக் கடவுளின் உருவத்தையும் நான் வணங்காதவனாகையாலும், கடவுளைத் தரிசிக்க வேண்டிய எந்தவித நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டதில்லையாலும், கடவுள் என்று தனியாக வெளியில் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகையாலும் எனக்கு எல்லாச் சமாதானங்களும் சப்பைக்கட்டு மடத்தனங்களாகத் தோன்றின. ஜே.கே. சொல்லும் முறையைக் கையாண்டும். என்னுள் ஏற்பட்ட எரிச்சலை அகற்ற முடியவில்லை. மனம் அதீத்தமாகத்தான் இயங்க ஆரம்பித்தது. கடைசியில் ஜே.கே. மீதே சிறிது எரிச்சல் ஏற்பட ஆரம்பித்தது. இவர் ஏன் தன் உரையை 7-15-இலிருந்து 8-15 வரைக்கும் நிகழ்த்தக் கூடாது? அனைவருக்கும் சௌகரியமாக இருக்குமே. கடைசியில் எனக்கு ஒன்று நன்றாகவே தெரிந்தது. நான் உணாச்சிவசப்பட்டிருந்தேன். சீரான மனநிலை கொஞ்சம் குலைந்துதான் போயிருந்தது. வீட்டுக்குத் திரும்பும் வழியில் நான் வாடிக்கையாகச் செல்லும் டீக்கடையில் ஒரு நான்கு க்ளாஸ் தண்ணீரை மடமடவென்று குடித்துவிட்டு, டீயையும் குடித்து விட்டு, ஒரு சிகரெட்டைப் பிடித்துக்கொண்டே வீட்டை வந்தடைந்தேன். வீட்டில் தாரா கொடுத்த டீயையும் குடித்து ஒரு சிகரெட்டையும் முடித்தபிறகுதான் என் எரிச்சல் கணிசமாகக் குறைந்திருப்பதை உணர்ந்தேன். இன்னொரு சிகரெட்டைப் பற்ற எவத்துக்கொண்டு உட்கார்ந்தேன். ஜே.கே. யை நான் அறிவு ரீதியாக மட்டும்தான் ஓரளவு, மிகவும் ஓரளவு மட்டுந்தான் புரிந்து கொண்டிருக்கிறேன், ஆழமாக ஒன்றும் அறிந்து கொள்ளவில்லை என்று உணர்ந்தேன். இந்த உணர்வு என்னுள் என்னைச் சித்திர மீண்டும் எரிச்சலைத்தான் கொடுத்தது. நான்
சித்திரவதை செய்துகொண்டிருக்கிறேன் என்று உணர நீண்ட நேரம் ஆகிவிட்டது. நான் சஞ்சலமாகவும் ஒருவித மனக்கசப்புடனும் இருப்பதைத் தாரா புரிந்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை. என் குழந்தை வாணி பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். புறச் சூழலின் பிரக்ஞை ஓரளவுதான் இருந்தது. தாரா டீ கொடுத்ததும், ஏதோ ஓரிரு வார்த்தைகள் பேசியதும், என் குழந்தையின் குரலும் அடுத்த வீட்டுக் குழந்தையின் குரலும் லேசாகக் கேட்டதும் நனவா இல்லை கனவா என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மனதின் பகுத்தறியும் திறன் சக்தியிழந்திருந்தது. தாராவுக்கு என் மௌனம் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், என் தோள்களைப் பிடித்து உலுக்குவதை உணர்ந்தேன் இப்பொழுது தாரா என் அருகில் நின்றிருந்தாள். வீட் டில் நான் இருக்கிறேன் என்பதைப் பரிபூரணமாக மிகவும் கஷ்டப்பட்டுத்தான் உணர முடிந்தது. . ஏதோ தோன்றியது. கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 9-00. தாராவிடம் உணவு பறிமாறச் சொல்லி, ஏதோ கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அவளிடம் விஷயத் தைச் சொல்லி, அவளை இரவு கண்விழித்திருக்குமாறும், இரவு தான் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்புவேன் என்றும், தான் நட்டியதும் வெளிக்கதவை வந்து திறந்துவிடும்படியும் கேட் டுக்கொண்டு, அவளிடம் சொல்லிக்கொண்டும், வாணிக்கு டாட்டா சொல்லிவிட்டும் வீட்டைவிட்டுக் கிளம்பினேன்.
வழியில் யாரோ என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டமாதிரி இருந்தது. காதில் நன்றாகவே விழுந்தது. ஏனோ அதை நான் மனப்பிரமை என்று எண்ணி புறக்கணித்துவிட்டு நடந்துகொண்டிருந்தேன். சிறிது தூரம் நடந்திருப்பேன். ‘ராஜ்’. இப்பொழுது குரல் என் வலது காதின் மிகச் சமீபத்திலிருந்து கேட்டது. எந்த எண்ணமும் தோன்றுமுன்னமேயே ரமேஷும் அவருடைய நண்பர் ஒருவரும் என் அருகில் இருந்தனர். அவர் மூன்று முறை என் பின்னாலிருந்து அழைத்திருந்தாராம். என்னை யாரோ அழைத்ததை நான் ஒரு முறை நன்றாகவே கேட்டதையும், பிறகு நான் ஏன் திரும்பிப் பார்க்கவில்லை என்ற காரணத்தையும் சொன்னேன். ரமேஷுக்கு என் அர்த்தமற்ற கற்பனைகளும், விசித்திரமான மனப் போக்கும் புதிதல்ல என்பதால் அவருக்கு நான் சொன்னது எந்தவித ஆச்சரியத்தையும் உண்டுபண்ணவில்லை.
யாரும் வழியில் டாஸ்டா வஸ்கியின் எழுத்துபற்றி பேசிக்கொண்டு அவர் விட்டை வந்தடைந்தோம். தொலைக்காட்சியில் 10-45க்கு அந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு எதுவும் இல்லை. வேறு எதையோ தான் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை அந்த இலக்கிய நண்பர் ஏதாவது கலாட்டா செய்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது. கடைசியில் அன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸை மீண்டும் ஒரு முறை கவனமாகப் பார்த்ததில் தொலைக்காட்சிக்காக ஒதுக்கப் பட்டிருந்த நிகழ்ச்சிநிரல் பகுதியில் கடைசி வரியாக 10-45 : Crime and Punishment-foreign film என்று போட்டிருந்தது. அக்கறையுடன் செய்தி கூறிய நண்பரைத் தவறாக நினைத்ததில் குற்ற உணர்வு ஒரு கணம் தோன்றி ஓரளவு நன்றாகவே சங்கடப்படுத்தி மறைந்தது. 10-45க்கு மேலேயே ஆகிவிட்டது. வேறு நிகழ்ச்சி தான் நடந்துகொண்டிருந்தது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு நாளில் இரண்டு ஏமாற்றங்கள்.
ரமேஷிடமும் அவருடைய நண்பரிடமும் சொல்லிக்கொண்டு அவருடைய வீட்டிலுள்ள கதவு, வெளிக்கதவுகள் இரண்டு, மற்ற குடித்தனக்காரர்களுக்கு அசௌகரியமாக இருக்குமோ என்ற ஒரு சிறு மனக்கலக்கத்தை என்னுள் உண்டுபண்ண, ரமேஷ் திறந்து விட, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு 11-00 மணி அளவில் ஒரு டீக்கடையில் ஒரு ப்ளம் கேக்கும் டீயும் சாப்பிட்டுவிட்டு சாலையை வந்தடைந்தேன். சிகரெட் ஒன்றைப் புகைத்தவாறே ஏன் வீட்டை நோக்கி நடந்தேன்.
11-30 மணி சுமாருக்கு வீட்டை வந்தடைந்தேன். கதவின் தாழ்ப்பாளை மூன்று முறை தட்டினேன். எங்கள் வீடு வெளிக்கதவிலிருந்து மிகவும் உள்ளே தள்ளி இருந்தது, தாரா அவள் சொன்னது மாதிரி நைலான் கூடை பின்னிக்கொண்டிருப்பாள். வந்து கொண்டிருப்பாள் கதவைத் திறக்க: சிறிது நேரம் காத்திருந்தேன். நடைவிளக்கைப் போடுவதைக் காணோம். ஒருவேளை தாராவுக்குக் கேட்காமல் இருந்திருக்கலாம். மீண்டும் மூன்று தடவை தட்டினேன் : இந்தத் தட்டுதல்-காத்திருத்தல் ஐந்து முறைகள் நிகழ்ந்துவிட்டன. நான் பொறுமையிழந்தேன். யாராவது வந்து கததைத் திறக்க வேண்டும். இல்லை இரவுப் பொழுது நடைபாதை ஒரத்தில்தான் கழிக்கவேண்டி வரும். சந் தேகக் கேஸ் என்று போலீஸ்காரர் யாராவது என்னைக் காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டும் போகலாம். என் பாடு திண்டாட்டமாக ஆவதற்குச் சகலவித சௌகரியங்களும் ஏற்பட லாம். ரமேஷ் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும் மனம் விழையவில்லை திடீரென்று என் எண்ணங்கள் கலைந்தன. நடைவிளக்கு எரித்தது. மனதிற்குச் சிறிது ஆசுவாசம். ஆனால் இந்தத் திடீர் ஆறுதல் இடைக்கால நிவாரணமாகத்தான் அமைந்தது; அதுவும் கற்பனை மனம் நிகழ்த்திய ஒரு தந்திரச் சதி. வந்தது தாரா வீட்டுக்காரம்மாள். அவள் ஏதாவது கத்துவாள் என்று எனக்குத் தெரியும். அப்படிச் செய்யாவிட்டால்தான் அவள் எப்படி வீட்டுக்காரம்மாளாக இருக்க முடியும்? கதவைத் திறந்து கொண்டே ‘மணி என்னா பன்னெண்டு…’ என்று ஏதோ ஒரு பெரிய பத்தியை ஆக்ரோஷத்துடன் ஆரம்பித்தாள். மணிகாட்டியில் 12 இலக்கங்கள் மட்டுமே இருப்பதால் அவள் ‘மணி 5549’ என்று சொல்ல எந்தவித வாய்ப்பும் அமையவில்லை. நான் என் எரிச்சலை அடத்திக்கொண்டு தாமதமாக வந்ததற்கும், எங்களுக்கு இருப்பிடம் தந்து புகலிடம் அளித்துக்கொண்டிருக்கும் பரோபகாரியான அவளே வந்து கதவு திறந்துவிட வேண்டிவந்த துர்ப்பாக்கியஅசெளகரியத்திற்கும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உள்ளே சென்றேன்,
என் வீட்டுக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருத்தது. ‘தாரா தாரர் தாரா’ மூன்று கத்தல்கள். மூன்று தடவை கதவிடிப்பு. கடைசியாக கதவு ஒருவழியாகத் திறக்கப்பட்டது. எங்கள் தாம்பத்தியத்தில் காரசாரமாக அதுவரை எதுவும் நிகழ்ந்ததில்லை. தரசாவைப் பார்த்ததும் அவளை வார்த்தைகளால் சிறிது சப்தம் போட்டே சாடினேன். ஆண் ஆதிக்கத்தின் அயோக்கியத்தனமான உச்சகட்ட வெறிச் செயல். கத்தலின் முக்கிய நோக்கம் (கூச்சல் போடுவதில் ஏதாவது நோக்கம் இருக்குமா என்று தெரியவில்லை): வீட்டுக்காரம்மாள் காதில் அது விழ வேண்டும். அவளுக்குப் பாம்புச் செவி என்று ஏற்கனவே தெரியும். நான் என் மனைவியைக் கடித்துகொள்வது தெரிந்தால் அவள் இந்தச் சமாச்சாரத்தை அன்றைகே மறந்து விடுவாள். இல்லையேல் அடுத்த நாள் தாரா விடம் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துச் சொல்லி அறிவுரை வழங்க ஆரம்பித்து விடுவாள். எந்த உணர்ச்சியுடன் ஒருவன் பேசுகிறான் என்பது தெரிய மொழி புரிய வேண்டிய அவசியமில்லை. ஜூலுவோ, ஸ்வாஹிலியோ வேறு எந்தமொழியோ இதற்கு விதிவிலக்கல்ல என்று கொள்ளலாம். ஆகையால் என் மொழியில் நான் கத்தினேன் என்றாலும் நான் தாராவைக் கோபித் துக் கொண்டது வீட்டுக்காரம்மாளுக்குத் தெரிய எந்தவித இடையூ ஓம் இருந்திருக்காது. எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது, நான் வீட்டுக்காரம்மாளிடம் மன்னிப்புக் கோர நேர்ந்தது தன்மானதிற்கு ஏற்பட்ட இழுக்காகவே அதை எடுத்துக் கொண்டேன்.
வாணி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தாரா உடனே தூங்கிவிட்டாள். படுக்கையில் கிடந்து 2-30 வரைக்கும் உறக்கம் கொள்ளாமல் புகைத்துக் கொண்டும் தண்ணீர் அருந்திக்கொண்டும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். தாரா எழுந்ததும் அவளிடம் முதல் காரியமாக கத்தியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
முழிப்பு வந்தது மிகவும் தாமதமாக. மணி 7-15. தாரா எனக்குச் சூடாக டீ கொடுத்தாள். சம்பிரதாய முறைப்படி வாழும் சராசரி ஹிந்துப் பெண் கணவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதுவதாலும், என்னைப் போன்ற கல்லோ புல்லோகூட ஒரு நல்ல பெண்ணுக்குக் கணவனாக வாய்க்கும்பொழுது அவை எந்தக் குறையுமில்லாமல் பவித்திரப்படுத்துப்பட்டுக் கௌரவிக்கப் பட்டுவிடுவதாலும், சில மணி நேரங்களுக்கு முன் நான் கத்தியது எங்கள் உறவைப் பாதித்துவிடவில்லை. ஆண்கள் முறைகேடாக
நடக்க நம் சமூகம் மகத்தான சௌகரியங்கள் செய்து கொடுத்திருக்கிறது. வண்டிக்காரன் சாராயம் குடித்துவிட்டு வந்து தன் மனைவியை உதைத்து வதைத்து நம் உயரிய பண்பாட்டைச் சீர் குலையாமல் காத்து நிற்கும் காட்சி ஒன்றும் அரிதல்ல. கோரத்தைச் சகிக்க முடியாமல் வெளியாட்கள் யாராவது வெளியே கணவனை இழுத்துத் திட்டி இரண்டு உதைகள் கொடுக்க ஆரம்பித்தாலோ, சிறிது நேரம் முன்வரை வதைபட்டுக்கொண்டிருந்த சகதர்மிணி ‘அவரெ அடிக்காதீங்க. பொண்ஜாதி புருஷனுக்குள்ளே ஆயிரம் இருக்கும். நீங்க இதில் எல்லாம் வர வேணாம். நாங்க இண்ணெக்கி அடிச்சிக்குவோம். நாளைக்குச் சேந்துக்குவோம்’ என்று கணவனுக்கு வக்காலத்து வாங்கும் சம்பவமும் புதிதல்ல. இவர்கள் அடித்துக்கொண்டுதான் பிறகு சேர்வார்கள். ஊடலில் தான் என்ன சுவை! நம் சடங்கு-சார் புனிதப் பெண்கள் மகோன்னத மகிமை வாய்ந்தவர்களே. இந்த அன்னியோன்னிய லட்சிய தம்பதிகள் இல்லாமல்தான் நம் கலாச்சார தர்மங்கள் எப்படி செழித்தோங்க முடியும்? புரியாத சுப மந்திரங்கள் ஏதோ ஓரு விளங்காத புனிதச் சூழலை உண்டுபண்ண, முன்பின் தெரியாத எவனோ ஒருவன் தன் கழுத்தில் கட்டும் பவித்திரத்தாலி சிலபல வேளைகளில் சுருக்குக் கயிறாக மாறும்போது ஏற்படும் வேதனையின் இன்பத்தை நன்றாகச் சுவைத்தே அனுவித்துக் கொண்டிருக்கும் ஓரு வக்கிரம்பிடித்த பொறுமையின் சிகரம் ஒரு masochist. காந்தி நம் சம்பிரதாய மகளிர்களில் இன்னும் உயிரோடு நிலவி வருகிறார். சடங்குகளால் பிணைக்கப்பட்ட உறவு இறுதிச் சடங்குவரை நிலைத்திருப்பது நம் கலாச்சாரத்தின் பிரத்தியேக சிறப்பம்சம். கலாசாரம் ஏனே அதி முக்கியமாகத்தான் கருதப்பட்டுக் கொண்டு வருகிறது.
இந்த இடத்தில் பெண் விடுதலை இயக்க வீராங்கனை யாரகவது எனக்கு மாலைசூட்டி கௌரவிக்க முன்வரலாம். அவள் சிறிது பொறுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என் உற்ற நண்பன் கதை மிகவும் பரிதாபத்துக்குரியது. காலை 7-00 மணிக்கு அவன் தொழிற்சாலைக்குச் செல்ல பஸ் பிடிக்க வேண்டும். மனைவியோ குறைந்தது 7-00 மணிவரை தூங்குபவள். அவள் தூக்கத்தைக் கலைப்பது அசாத்தியம். முன் தூங்கி பின் எழுபவள். இந்தக் காலத்து ஜன்மங்கள் அனைத்துக்கும் எழுந்ததும் சூடாக காப்பியோ டீயோ தேவைப்பட்டுத்தொலைக்கிறது. இந்த விஷயத்தில் ஜாதி மத பேதம் இல்லாமல் ஒருவித சந்தோஷமான ஒருமைப்பாடு இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிறது. வீட்டிலுள்ள சுவரையோ ஜன்னலையோ உசுப்பி காப்பி போட்டுத் தரச் சொல்ல முடியாத நிலை. மனைவி சுகமாகப் படுத்து ஆனந்தித்துத் தூங்கும் அழகிய அவலட்சணக் கண்கொள்ளாக் காட்சியை ரசிக்கத் தெரியாத மூர்க்கன் அவன். அழகுணர்வு கொஞ்சமும் இல்லாத எழுத்ததும் வீட்டின் அருகில் இருக்கும் டீக்கடைக்குச் சென்று குடித்துவிட்டு, வீடு திரும்பி, தற்சுகாதாரச் செயல்களை அவசரமாகச் செய்து முடித்துவிட்டு அலுவலுக்கு விரைவான்.
பொருளாதாரப் பிரச்சினைகள் தவிர வாழ்வில் வேறு எந்தப் பிரச்சினைகளுக்கும் விடிவுகாலம் நிகழ்வதில்லை. வாழ்க்கைப் பிரச்சினை. வாழ்க்கையே பிரச்சினை. பழகிப் போவதால் பிரச்சினைகள் வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக அமைந்து விடுகின்றன.பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை சலிப்பை உண்டாக்கும். மிகவும் சரி என்றே நினைக்கத் தோன்றுகிறது, ஆனாலும் பிரச்சினைகள் இருப்பதால் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதில்லை
தலைமுடியைப் பிய்த்துக் கொள்ளா மல் இருப்பதற்கு ஒரு தனி பிரயாசை தேவைப்படுகிறது. மரவுரி ஆடைகள் தரித்து, மரப் பொந்துகளிலும், குகைகளிலும் வாழ்ந்தபோது மனிதனின் வாழ்க்கை சுவை மிகுந்ததாக இருந்திருக்கலாம், அப்பொழுதைய வாழ்க்கை நிலையில்லாததாக அமைந்திருத்தாலும்கூட. இப்பொழுதும் அதே நிலைதான். ஆனால் ஒரு வேறுபாடு, வாழ்க்கையில் சுவை குன்றி விட்டது, இல்லையேல் அது அறவே ஒழிந்துவிட்டது. அடிப்படைப் பாதுகாப்பு உணர்ச்சி அமைய எவ்விதச்சாத்தியப்பாடுகளும் இல்லை. சும்மா இருக்கும்போதே ஒருவனின் தலை தாராளமாக உருள்வது சர்வசா தாரணமான விஷயம்.
தார்மீக சிந்தனை வீட்டில் தான் ஆரம்பிக்கிறது. மனிதனுக்கு எரிச்சலும் அங்கேதான் துவக்கி வைக்கப்படுகிறது. அதுவும் விடியற்காலையில். குடும்பம் நடத்தப் பொருள் வசதி தேவை. எல்லாக் காரியங்களையும் தானே செய்து கொண்டு, தனக்கென்று சொர்க்கத்தில் வாய்த்த மனைவி எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொள்பவளாக இருப்பதை நொந்துகொண்டு, எரிச்சலை அடக்கப் பழகிக்கொண்டு, கடைசியில் வாழ்க்கையே எரிச்சலாகி, எரிச்சலே வாழ்க்கையாகி, ‘Behind every successful man, there is a wo- man’ என்பதை எங்கோ படித்தது, நினைவுக்கு வந்து, சொன்னவனின் கழுத்தை நெரிப்பது ஒரு நல்ல காரியமாகத் தோன்றி, சொன்ன ‘சான்றோன்’ யாரென்று மறந்து போய், நியாயமான காரியத்தைச் செய்ய முடியாத இயலாமைக்கு வருந்தி, எரிச்சல், குழப்பம், கையாலாகாத்தனம், சயஇரக்கம், பைத்தியம் எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பிடித்து, உருக்குலைந்த நிலையில் தெருவுக்கு வந்து வானத்தைப் பார்த்து சிறிது ஆசுவாசம் தேடிக்கொள்ளும் அபாக்கிய ஆண்மகன் அந்த நண்பன். இதில் ஐயம் இல்லை. எந்தக் கண்ணராவிக்கு இந்த அலைச்சல், சிரமம் என்று விடைகாண முடியாத கேள்வி ஒன்று என்றைக்கோ எழுந்து, குடும்பம் நடத்துவதற்குத்தான் என்ற ஒரு தவறான பதில் வந்து, இப்பொழுது அதை நடத்தாவிட்டால் என்ன கேடு விளைந்துவிடும் என்று அலசி, இவையனைத்தும் என்றைக்கோ நடந்து முடிந்து, மனதின் அடித்தளத்தில் போய் மறைந்துவிட்டு-தினமும் செய்யும் எல்லாமே சடங்காக ஆகிவிடுவதால், தொழிற்சாலைக்குச் செல்வதும் ஒரு தின சரிச் சடங்காகவே ஆகிவிட்டது அவனுக்கு. உண்மையில் மனைவி சுகமாக ஒய்வெடுத்துக் கொள்ள போதுமான வசதி செய்து தரத் தான் அவன் வேலைக்குப் போகிறான்.
எதையும் சொல்வதற்கில்லை. ஆண்-பெண் உறவே பல வேளைகளில் ஒருவகைச் சுரண்டலாகத் தோன்றுகிறது. ‘எங்கள் பெண்ணை உங்களிடம் ஒப்படைக்கிறோம். கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள், மாப்பிள்ளை’. ஓ, தாராளமாக. பெண் ஆணின் கண்களைக் கலக்குகிறாள் அன்றாடமும். பையனின் பெற்றோர் மணப்பெண்ணிடம் எந்த வேண்டுகோளையும் விடுப்பதில்லை. ‘என் பையனின் மனதை நோகடிக்காமல் பார்த்துக் கொள்ளம்மா’. அது நம் கலாச்சாரத் திற்குப் புறம்பானது. திருமணமாகி பையன் பெண்ணை அழைத் துக்கொண்டு குடித்தனம் நடத்த ஒரு அடி எடுத்துவைக்கும்போதே, அது அழுகையில் தான் ஆரம்பிக்கிறது: கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்து பெற்றோரை விட்டுப் பிரிந்து எதோ கொலைக்களத்திற்குச் செல்லும் தோரணையில்தான் கணவனுடன் செல்கிறாள். பிறகு, ‘எல்லாம் அவள் செயல்’ ஆகி விடுகிறது: தம் கலாச்சாரம் பைத்தியம் பிடித்து, சட்டையைக் கிழித்துக்கொண்டு வலம் வந்து, நம்மைப் பார்த்து, அட்டகாசமாகக் கொக்கரித்து அனைவரையும் ஒரு விதத்தில் உற்சாகமாக ஹிம்சிதுக்கொண்டிருக்கிறது. எனினும் அது அத்தியாவசியமாகவே இருத்து வருகிறது.
சில சந்தர்ப்பங்களில் அவள் கேட்பதுண்டாம்: ‘பாக்டரியில் என்ன அப்படி வெட்டி முறிக்கிற வேலை! கொஞ்சம் சீக்கிரம் வத்திருந்தால் இன்றைக்கு ஒரு சினிமாவுக்குப் போயிருந்திருக்கலாம். தூக்க முடியாத பெரிய ஒரு
பாறையை முதுகின் மீது ஏற்றி வைத்துக்கொண்டு ஒரு இடத்திலிருந்து நீண்ட தூரம் – தூக்கிச்ச் சென்று இறக்கிவைப்பது அவன் பணியாக இருந்தால் ஒரு வேளை வெட்டி முறிக்கும் வேலையைத்தான் தன் கணவன் செய்கிறன் என்று அவள் ஒப்புக்கொள்ளக்கூடும்.
‘சாமி! என்னைப் பூவும் பொட்டுமாகக் கொண்டு போய்விடு’- மனுஷன் தனியாகக் கிடந்து அவஸ்தைப்படட்டும்-இது நல்லொழுக்கம் படைத்த பத்தினிகள் தெய்வத்திடம் செய்யும் பிரார்த்தனை வன்முறைக்கும் சாமி துணை தேவைப்படுகிறது.
அந்த நண்பனை நான் குறைந்தது வாரம் ஒரு முறை பார்த்து ஒரு தடவை அவன் மனைவி நலன் (துக்கம்) விசாரிப்பேன். அவன் மனைவியைப் பத்திக் நான் ஏதோ கேட்கப் போய், அவன் எரிச்சலின் உச்சகட்டத்தில் ‘அவள்தானே, சுகமாக இருக்கிறாள். நண்பர்களுக்குக் காட்ட அலங்கார அழகான காட்சிப் பொருள், you know, a very beautiful show-piece’ என்று கூறினான். அவன் துக்கம் என் தொண்டையை அடைத்த சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. உண்மையிலேயே யாரும் யாரையும் தேற்ற முடியாது. அவன் தற்கொலை வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவன் வாழவில்லை. வாழ்க்கை அவனுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது.

தாரா கொடுத்த டீயைச் சுவைத்துக்கொண்டே நினைத்துப் பார்த்தேன். நான் செய்த குற்றம்: என்றைக்குமில்லாமல் அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட தொலைக்காட்சி பார்க்கும் நப்பாசை. கிடைத்த தண்டனை: மன உளைச்சல்+வேண்டாத சிந்தனைகள்.