செ.புனிதஜோதி

அவ்வப்போது
தன்னிச்சையாய்
வந்துவிடுகின்றன
கவிதை போலும் வரிகள்.

ஏன் வந்தது?
எதற்குச் சென்றது?
என்பது
ஏனோ புலப்படவில்லை.

ஆனாலும்

சில
மௌனம் பூசியதாகவும்…
இன்னும் சில
சிக்கிமுக்கி கல்லைப் போன்றும்.

பூ பூத்தலைப்போன்றும்
ஏதோவொன்றை
நிகழ்த்திவிட்டுச்
செல்கின்றன.

நானோ
சுவரில் வரையும்
சிறு குழந்தையின்
பிஞ்சு விரலின்
நெளிவு,
சுளிவிற்கு ஏற்ப
தன்னை ஒப்படைத்த
ஓவியமாகிறேன்.