சுரேஷ் கண்ணன்/கங்குவா

ஒரு திரைப்படத்தை ஊரே கழுவி ஊற்றினாலும் சரி, தூக்கி வைத்துக் கொண்டாடினாலும் சரி, என் மனதிற்கு என்ன படுகிறதோ அதைத்தான் நான் எழுதுவேன். என் தரப்பிற்கு முற்றிலும் எதிராக ஒருவர் எழுதினாலும் அவரும் என்னைப் போலவே நோ்மையான கொம்பனாக இருக்கக்கூடும் என்கிற மதிப்பும் நம்பிக்கையும் எனக்குண்டு.

‘எனக்குப் பிடிச்சது. உனக்கு ஏண்டா பிடிக்கலை?” என்று குடுமிப்பிடிச் சண்டையிடுவதைப் போன்ற அபத்தம் இருக்க முடியாது.

ஒரு திரைப்படத்தின் புறக்காரணிகளை நான் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. அந்த நோக்கில், சூர்யா, ஜோதிகா, ஞானவேல் ராஜா, க்ரீன் ஸ்டுடியோ, இதன் வியாபாரம், அதன் உள்குத்துகள், இணைய வெறுப்பரசியல் போன்றவற்றில் எனக்கு முழுக்க முழுக்க நம்பிக்கையும் இல்லை. ஆர்வமும் இல்லை. படம் தந்த அனுபவம் என்ன என்பதுதான் என்னளவில் முக்கியம்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது – கமர்சியல் ஃபேண்டஸி சினிமா – என்கிற வகையில் ‘கங்குவா’ எனக்குப் பிடித்திருந்தது. இது போல் பிரம்மாண்டமாக உருவாகும் சினிமாக்கள், அதன் வெற்றிகள் போன்றவற்றால்தான் சினிமா வாழும்.

*

மெல் கிப்ஸனின் ‘Apocalypto’ பல இயக்குநர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது. எனவே அந்தப் பாணி சினிமாவை நகலெடுக்க முயன்ற இயக்குநர்களில் ‘சிறுத்தை’ சிவாவும் ஒருவர்.

படத்தின் துவக்க நிமிடங்கள் உண்மையிலேயே திராபை. தப்பான இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று எரிச்சலாக வந்தது. இத்தனை கேனத்தனமான bounty hunters எங்கேயும் இருக்க மாட்டார்கள்.

இந்தப் போர்ஷனை சீரியஸாக உருவாக்கியிருந்தால் பார்வையாளர்கள் மெல்ல உள்ளே வந்திருப்பாார்கள் என நம்புகிறேன். ஆனால் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, திஷா படானி, சூர்யா ஆகியோர் இணைந்து கேலிக்கூத்தாக்கி விட்டார்கள்.

ஆனால் -1070-க்குள் படம் பாயும் போது இன்னொரு நிறத்திற்கு மாறி விடுகிறது. ஒரு ஃபேண்டஸி உலகத்தை எழுத்தால் உருவாக்குவதும் அதை காட்சிகளாக மாற்றுவதும் பிரம்மப் பிரயத்தனமான விஷயம்.

சிவாவின் டீம் தங்களின் அசுரத்தனமான உழைப்பைக் கொட்டியிருக்கிறது. குறிப்பாக இதன் டெக்னிக்கல் டீம் அசத்தியிருக்கிறார்கள்.

ஒரு கேரக்டருக்காக இத்தனை மெனக்கிடும் நடிகரைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. அந்த வரிசையில் கமல், விக்ரம் போன்றவர்களின் தொடர்ச்சியாக சூர்யா மிரட்டியிருக்கிறார்.

ஃபேண்டஸி கதைக்குள் செல்ல ஒரு கட்டத்தில் குழந்தையாக மாற வேண்டும். அந்த வகையில் இது ஆக்ஷன் நிறைந்திருப்பதால் வளர்ந்த குழந்தையாக மாற வேண்டும் எனலாம்.

அப்படி மாறி விட்டால் இந்தப் படத்தை ரசிக்க முடியும். சமகாலத்தை தவிர்த்து விட்டு பீரியட் படமாகவே இதை எடுத்திருக்கலாம்.

என்னென்னவோ காரணங்களுக்காக நிறைய போ் வெறுத்த அளவிற்கு இது அத்தனை மோசமான படமில்லை என்பதே என் அனுபவம்.