மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்

கையில் ஒரு ஊதப்பட்ட பலூன்
வண்ணங்கள் பற்றிய அக்கறை
ஒருபோதும் இல்லை
ஆனாலும் கறுப்பைத் தேடுகிறது.

மிச்சமிருக்கும் பலூன்களையும்
ஊதி மிதக்கவிட வேண்டும் காற்றில்.

எந்தவொரு கூர்நுனியும்
சுள்ளென்ற ஒளியும் படாமல்
மேலே மேலே பறத்தலைப் பார்த்தல்
மிகப் பெரிய ஆசுவாசம்,
பித்தநிலையும் கூட.

கட்டவிழ்க்கப்படாமலேயே
ஊதப்பட்ட பலூன் சுருங்கிச் சுருங்கி
மீண்டும் பழையநிலைக்குத் திரும்புதல்
ஒரு கைவிடப்பட்ட பிரார்த்தனை.

பலூனை உடைப்பது விளையாட்டல்ல
அதுவொரு சுவாரஸ்யமான பதட்டத்திற்குப் பழக்குதல் என்கிறார் நவீன ஆசிரியர்.

அவசரம் அசுர வேகம்
அந்த பலூன் மட்டும் விரியாதிருந்தால் என்னவாகியிருக்கும்?

உங்கள் அலங்கார நிகழ்வில்
கடைசியில் பலூனையும்
சேர்த்துவிட்டீர்களே…

யாருடைய அதட்டலையும் பொருள்படுத்தாமல்
கீழே விழும் பலூனைக் கையிலெடுக்கும் குழந்தை
அதன் காதில் படும்படி
மூன்றுமுறை சொல்கிறது:

அன்பு
அன்பு
அன்பு.

One Comment on “மா. காளிதாஸ் ஒரு ஊதப்பட்ட பலூன்”

  1. யாருடைய அதட்டலையும்,
    பொருட்படுத்தாமல்,
    கீழே விழுந்த பலூனை கையிலெடுத்த
    குழந்தையின் கையில், தவழும் வாழ்க்கை.
    அன்பை புத்தன் மட்டும் பாதிக்கவில்லை.
    குழந்தைகளுக்கான.

    காளிதாஸ் கையில் அன்பு கிடைத்துவிட்டது.
    நம் மனதில் தவழவிட்டார்.

    ஜெயானந்தன்.

Comments are closed.