
நீண்ட மருத்துவ அறிக்கை ஒன்றை டைப் செய்து முடித்து விட்டு அப்பொழுதுதான் என் அறையை விட்டு வெளியே வந்தேன். என் அறையை அடுத்தது செவிலிகளுக்கான பணி அறை. அதற்கு முன் பார்த்திராத ஒரு புது முகம்தென்பட்டது. ஒரு இளம் பெண். தூய வெள்ளை உடை. அழகிய குள்ளம். கருமை யான நிறம். குழந்தை போன்ற முகம். செவிலி. அன்றைக்குத் தான் வேலையில் சேர்ந்தாள் போலும்.
ஒரு மாதம். நான் அவளுக்கு wish பண்ணுவதோடு சரி. என்னுடைய இயற்கையான சங்கோஜம் அப்படி. அவள் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். அவளை மன அளவில் எப்படி ஏற்றுக் கொள்வது ? என் கூட வேலை செய்பவள், girl-friend-இதெல் லாம் என் மனதிற்குப் பிடிக்கவில்லை.
இயற்கையாகவே எனக்கு அவள்மீது ஒரு பாச உணர்வு தோன்ற ஆரம்பித்தது. அந்த உணர்வு ஒரு தந்தை மகள்மீது கொள்ளும் பாசமாகவே எனக்குப் பட்டது.
அவளை நான் child என்றே கூப்பிட ஆரம்பித்தேன். அப்படி அழைத்தபோதெல்லாம் அவள் முகத்தில் மகிழ்ச்சியின் அறிகுறிகள் தென்பட்டன. கண்களில் ஒரு திடீர்ப் பிரகாசம். இதழ்களில் ஒரு புன்முறுவல். நான் அப்படிக் கூப்பிட்டது அவ ளுக்கு மிகவும் பிடித்துவிட்டது போலும். என்னை அவள் daddy என்று அழைக்க ஆரம்பித்தாள். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.
இப்படி ஒரு 32 வயதான நானும் 22 வயதான அவளும் உறவுடன் பழகுவது என் சக ஊழியர்களுக்கு விசித்திரமாகப்பட் டது என்று எனக்குத் தோன்றியது.
இரண்டு வாரங்கள் கழிந்தன. ஒரு பையன் அவளைப் பார்க்க வர ஆரம்பித்தான். பெயர் குமார். எனக்குப் புரிந்தது, அவன் childன் boy-frier:d என்பது. வாரம் ஒரு முறை சினிமா செல்வார்கள். டிக்கெட் நான்தான் தவறாமல் reserve செய்வேன். இதில் எனக்கொரு குட்டி சந்தோஷம்.
குமாரை நான் மாப்பிள்ளை என்று அழைக்க ஆரம்பித்தேன். என்னுள் இருந்த பாசம் அதிகரிக்க ஆரம்பித்தது. அவர்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை நான் எடுத்து வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அதை child இடம் சொன்னேன். அவளுக்குக் கொள்ளை சந்தோஷம். ஒரு நாள் childக்கு விடுமுறை, வெளியே போயிருந்தாள். ஒரு ஃபோன் கால். Child பேசினாள். டாக்டரிடம் பொய் சொல்லி அனுமதி பெற்று நான் அவளை என் வீட்டுக்கு அழைத்துப் போக வேண்டுமாம். அவள் எனக்காக டெய்லர்ஸ் ரோட் பஸ் ஸ்டாப் பிங்கில் காத்திருக்கிறாளாம். டாக்டரிடம் சென்று மனதில் தோன் றிய முதல் பொய்யைச் சொல்லி அனுமதி பெற்றாகிவிட்டது.
Childஐ என் வீட்டுக்கு அழைத்துப் போனேன். அம்மா வீட் டில் இல்லை, சம்பிரதாயத்திற்கு childஐ என் தம்பி தங்கைகளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மொட்டை மாடிக்கு அழைத் துச் சென்றேன். இரவு 7-30 மணிவரை ஏதோ பேசிக்கொண் டிருந்தோம்.
Childக்கு நேரமாகி விட்டது. அவளுக்கு அன்றைக்கு இரவு நேர வேலை. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அவளை ஒரு சேட்டுக்கடைக்கு அழைத்துச் சென்று ஆடைகள் நிறைந்த மசாலாப்பால் வாங்கிக் கொடுத்து, மருத்துவமனைவரை சென்று அவளை விட்டுவிட்டு வந்தேன்.
வீட்டுக்குச் சென்றேன், அம்மாவிடம் ஒரே திட்டு. எனக்கு ஏற்கனவே வீட்டில் ‘நல்ல பெயர்.’
இருட்டு வேளையில் மொட்டை மாடியில் ஒரு கல்யாணம் ஆகாத பெண்ணிடம் என்ன பேச்சு ?
எனக்குப் புரியவில்லை. என்ன பேச்சு என்று சொன்னால் அம்மா ரொம்பவும் சுவாரஸ்யமாகக் கேட்கப்போவதில்லை. அவர்கள் கண்ணோட்டப்படிப் பார்க்கப்போனால் ஒருவேளை கல்யாணமான பெண்ணுடன் இரவு வேளையில் மொட்டை மாடியில் பேசலாமோ என்னவோ! என் அம்மா எப்பொழுதுமே எனக்கு ஒரு புதிர்.
மருத்துவமனையில் வேறு எனக்கு ‘அதி நல்ல பெயர்.’ நான் childவுடன் சுற்றுகிறேனாம். அவள் எனக்கு girl-friendஆம்.
உடுப்பிழந்த சொற்களால் இவர்களைத் திட்டலாம் என்று தோன்றியது. சமூகம், நாலு விதமாகப் பேசும் அந்த நாலு பேர்- இதற்கெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. சமூகம் ஒரு bull shit. பிறரைப்பற்றிப் பேசுவதென்றால் ஒரு தனி இன்பம். அவ லுக்கு என்ன அவ்வளவு சுவை!
Child செய்வது வேறேதோ ஒரு உறவைக் குறிப்பதுபோல் வேறு இருந்து தொலைத்தது. ஒரு நாள் உணவு இடைவேளையில் மாடியில் நோயாளிகளைப் பார்க்கவருபவர்கள் உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து Daddy I Love you என்று ஒரு சினிமாப் பாட்டின் ராகத்தில் மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தாள். ‘என்ன child’ என்றேன். ‘Daddy, அடுத்த வாரம் நீங்கள் கட்டாயம் எங்களுடன் சினிமாவுக்கு வரணும்’ என்றாள். சந்தோஷத்துடன் சரி என்றேன். ஆனால் போக மனம் இடம் தரவில்லை.
அவள் குமாருடன் மட்டும் சினிமா போனால் போதும். Daddy ஏன் ஒரு கரடியாக வேண்டும் அவர்கள் தனிமைக்கு ?
Childக்கு மருத்துவமனையில் இருக்கப் பிடிக்கவில்லை. தலைமைச் செவிலியுடன் சில சலசலப்புகள் Child பாவம்! என்னை வேறு இடத்தில் வேலை தேடித் தருமாறு சொன்னாள்.
நானும் முயன்றேன். சுலபமாகவே அவளுக்கு வேறு ஒரு மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது.
ஒவ்வொரு மாலையிலும் அவளை அந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வர ஆரம்பித்தேன். தினமும் ஏதாவது ஒரு ஸ்வீட் கொண்டு கொடுத்துவிட்டு வந்தேன்.
குமாரும் அடிக்கடி வருவான். நல்ல பையன். Childஐ விட இரண்டு வயது இளையவன். அங்கே childக்கு ஒரு தனி அறை. இவர்கள், அதாவது குமாரும் childம் வேறு விதமாகவெல்லாம் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.
திருமணமாகாமலேயே உடலுறவு கொள்வது பெரும் பாவம் போன்ற நல்லொழுக்கம்பற்றிய அறிவுரைகளை இப்பொழுது நினைவுக்குக் கொண்டுவராதீர்கள். எப்படியும் இவர் கள் கடைசிவரை ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருந்தால் சரி. ஆனால் சுமுகமாக வாழ்ந்தால் மற்றவர்களுக்குப் பிடிப் பதில்லை. எப்படியும் அம்மாவோ அப்பாவோ காதலர்களைப் பிரித்து வேறோரு பையனுக்கோ பெண்ணுக்கோ கட்டிவைத்து விடுவார்கள். அது அவர்களுக்குப் பரம திருப்தி, ஒரு ஆத்மீக ஆனந்தம், கடமை- வேறு என்னென்னவோ! இவர்களெல்லாம் பண்ணிக்கொள்வது இரண்டாம் கல்யாணம். திருமணங்கள் சொர்க்கத்திலே நிச்சயிக்கப் படுகின்றன.
குமாரின் மாமா கோபக்காரராம். Childவுடன் சுற்றுவதை மறுபடியும் பார்த்தால் கொலை விழுமாம். குமார் அடிக்கடி வருவது குறைந்தது. இது ஒரு பக்கம். இந்த child வீட்டுக்குப் போனாள். அவர்களுக்கு இவள் குமாருடன் சுற்றுவது தெரிந் திருக்கிறது. இவள் அப்பா ரொம்பவும் கடிந்து கொண்டிருக்கிறார்.
Childக்கு ஒரே சோகம். அவளைத் தேற்றினேன். அவளை ஒரு சத்தியம் பண்ணுமாறு கேட்டேன். பண்ணிக்கொண்டால் குமாரைப் பண்ணிக்கொள்ளுங்கள் இல்லையேல் யாரையுமே பண்ணிக்கொள்ளாதீர்கள் என்று. சரி என்றாள்.
இந்த மருத்துவமனையிலும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை. அவளைப்பார்க்கப் பல பேர் வருகிறார்களாம். நான், குமார், வேறு யார்! ஆம், அவளைப் பார்க்க ஒரு cousin வந்துகொண்டிருந் தான். (அப்படித்தான் அவள் சொன்னாள்.) சரி.
வேறு ஒரு மருத்துவமனையில் childக்கு வேலை கிடைத்தது. வழக்கம்போல் அங்கேயும் நான் போய்ப் பார்க்க ஆரம்பித்தேன். குமாரும் வருவான்.
அங்கே ஒரு புதுப் பையன் வர ஆரம்பித்தான். பெயர் சுந்தராம். அழகாக இருந்தான். அவனுடன் ஸ்கூட்டரில் சினிமா சென்றிருக்கிறாள். Childக்கு அவன் அண்ணன் போலவாம். ஏதோ ஒரு பெரிய ஹோட்டலில் வரவேற்பாளன் வேலையாம். Child ரொம்ப வெளிப்படையானவள். எதையுமே மறைக்கத் தெரி யாது.
குமாருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. Child என்னிடமும் குமாரிடமும் அவளுடைய விலாசத்தைப்பற்றி மழுப்பிக்கொண்டி ருந்தாள்.
ஒரு நாள் மாலை. Childக்கு வேலை முடிந்து அந்த சுந்தருடன் போய்க்கொண்டிருந்தாளாம். குமார் பின்தொடர்ந்து சென்றிருக்கிருன். ஒரு வீட்டில் முன் பகுதியில் உள்ள அறையில் அவர்கள் இருவரும் போயிருந்திருக்கிறார்கள். இரவு மணி பத்து. சுந்தர் வெளியே வரவில்லை. குமாருக்கு வீட்டுக்குப் போயாக வேண்டும்.
அடுத்த நாள் காலை குமார் அந்த அறைக்குச் சென்று child ஐக் கடிந்துகொண்டிருக்கிறான். பையன்கள் போடும் ஒரு உள்ளாடை ஒரு ஸ்போர்ட்ஸ் பனியன் கொடியில் தொங்கிக் கொண்டிருந்ததாம். மூலையில் ஆணிகள் பதித்த shoes. சுந்தர் ஒரு விளையாட்டு வீரனாம். என்ன விளையாட்டோ!
பாவம், குமாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உணர்வுகளின் கொந்தளிப்பு. மனத்தில் ஒரு பெருத்த அடி, நெஞ்சில் ஒரு கீறல். உண்மையான அன்பு கொலை செய்யப்பட்டிருக்கும் ஒரு அருவருப்பான உணர்ச்சி. அறையை விட்டுக் கஷ்டப் பட்டு வெளியே வந்திருக்கிறான்.
குமார் இன்னும் மருத்துவமனைக்கு வந்துகொண்டுதானிருந்தான்.
இரு தினங்கள். நான் childஐப் பார்க்கச் செல்லவில்லை. மூன்றாம் நாள், என் மருத்துவமனையிலிருந்து வெளியே சென்றிருந்தேன். தேனீருடனும் சிகரெட்டுடனும் உறவாடிக்கொண்டிருந்த நேரம். ஒரு ஃபோன் கால். எனக்குத்தான். ஐவி அந்தப் ஃபோனை எடுத்திருக்கிறாள். Child தான் பேசினாளாம். பஸ் நிலையத்திலிருந்து பேசினாளாம். சுந்தருக்கும் அவளுக்கும் கல்யாணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகின்றதாம். Child மூன்று மாத கர்ப்பிணியாம். அம்மாவுக்கு இது தெரிந்துவிட்டதாம். வேலையை ராஜினாமா செய்துவிட்டு அம்மாவுடன் ஊருக்குப் போகிறாளாம். Daddy வந்தால் சொல்லிவிட வேண்டுமாம். ஏழு மாதம் கழித்துக் குழந்தையுடன் daddy-யைச் சந்திக்கிறாளாம். என்ன நெஞ்சழுத்தம்! குமார் திருமண மோதிரம் செய்ய என்னிடம் கொடுத்து வைத்திருந்த வைரக்கல்லை நான் குமாருக்குக் கொடுத்துவிட வேண்டுமாம் பிறர் பொருள் நமக்கெதற்கு ? என்ன நல்லொழுக்கம்!
ஐவி எல்லாவற்றையும் என்னிடம் சொன்னாள். நெஞ்சைப் போட்டு ஏதோ ஒரு வகைக் கசப்பான உணர்வு என்னைப் பிழிந்தெடுத்தது, அன்று பூராவும் சாப்பிடவில்லை. உண்ணாவிரதம். நான் கொஞ்சம் நாடக பாணியானவன். ‘
Child கெட்டுப் போய்விட்டாள் என்று எனக்குப் பட்டது. அவள் இறந்துவிட்டதாகவே நான் முடிவு செய்தேன், என் குழந்தையின் சவத்தை என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன்’ என்று என் சக ஊழியர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். வீட்டுக்குச் சென்றேன். பெட்டியிலிருந்து வைரக்கல்லை எடுத்துக்கொண்டேன். குமார் கடைக்குப் போனேன். எல்லாவற்றையும் சொன்னேன். கல்லை அவனிடம் கொடுத்தேன். குமார் அழுதே விட்டான். கடமை முடிந்தது. வீட்டுக்குத் திரும்பினேன்.
இரண்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் child எனக்குக் கடிதம் போட்டிருந்தாள்.
காஞ்சிபுரத்தில் இருக்கிறாளாம். ஒரு மகப்பேறு மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்க்கிறாளாம். புனிதமான சேவை. Daddy-யைப் பார்க்க ஆசையாக இருக்கிறதாம்.
பாசம் அழைத்தது, வார இறுதியில் அங்கு போனேன் Child-ஐப் பார்த்தேன். ஒரே பூரிப்பு இருவருக்கும், நடந்தவைகளப்பற்றிக் கேட்டேன். அவள் எனக்குப் ஃபோன் பண்ணவில்லை யாம். எல்லாம் வதந்திகள்தானாம். நேர்த்தியாகப் புளுகக் கற் றுக்கொண்டிருந்தாள். அழகாக பொய்களைச் சரளமாகப் பேசினாள்
பேசிக்கொண்டிருக்கும்போது சாம்பிராணி போடும் ஒரு வாலிபன் வந்தான். Child அவள் அருகில் சென்றாள். என்னவோ பேசி னாள். அவன் தோள்பட்டை மீது மிகவும் உரிமையுடன் கை வைத்தாள். பிறகு அவன் போய்விட்டான். அவர்களுக்குள் ஏதோ
ஒரு கொச்சையானஉறவு இருப்பதாக என்னுள் ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது.
பிறகு, அவளுடைய தோழி, அவளுடன் வேலை செய்பவள் ஒருத்தி வந்தாள். பெயர் ஹாரியட். Child அவளுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தாள். சிறிது நேரம் பேசினோம்.
வழக்கம் போல் childக்கு ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டுத் திரும்பி னேன்.
அடுத்த நாள் வேலைக்குச் சென்றேன். லில்லியிடம் பேசிக் கொண்டிருந்தேன். Child-ஐப் பற்றிப் பேச்சு வந்தது. லில்லிக்கு என் மீது ஒரே கோபம். நான் உருப்பட மாட்டேனாம். முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்கிறேனாம். நான் childவுடன் பேசக்கூடாதாம். அடுக்கடுக்காகப் பாவம் செய்கிறாளாம்.
எனக்குச் சில வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரியாது. லில்லியிடம் பாவம் என்றால் என்ன என்று கேட்டேன். கோபமாக அவள் ஒரு முறை முறைத்தாள். லில்லியிடம் சந்தோஷமாக வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டாய்விட்டது.
லில்லி சொன்னாள், நான் child-ஐத் திருத்த முயலவேண் டுமாம், அப்பொழுதுதான் நான் என் கடமையைச் செய்வேனாம்.
ஒரு நபரை அப்படியே மன அளவில் ஏற்றுக்கொள்வதுதான் என் பழக்கம். லில்லிக்கு ஒரு உதாரணம் சொன்னேன். ஒரு ஹோட்டலில் தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறோம். இளம் பெண் ஒருத்தி எதிர் ஸீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். அவள் முகம் ரொம் பவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த மூக்கு மட்டும் நன்றாக அமையவில்லை. அதை நாம் என்ன செய்ய முடியும்?
லில்லிக்கு இதெல்லாம் பேத்தலாம். லில்லிக்கு சமாதானம் சொன்னேன். என் childக்கு மிகவும் சின்ன வயது. சின்ன வயதில் – கழுதை வாலில் டப்பா, பட்டாஸ், தும்பிக்குக் கல்லைக்
கட்டுதல், நாய்க்குக் கல்லடி-இதெல்லாம் செய்கிறோம். பெரிய வயதில் இந்த விஷமங்கள் செய்வதில்லை. Child இன்னும் சின்னவள்தான்.
ஒரு வாரம் சென்றது. ஏதோ ஒரு வேலையாக ஹாரியட் சென்னைக்கு வந்திருந்தாள். மருத்துவமனையில் என்னை வந்து சந் தித்தாள். காஞ்சிபுரத்திலும் childக்கு boy-fiends தானாம். Child ஒரு சுவாரஸ்யமான nymphomaniac.
ஒரு நாள் ரமேஷுடன் ஒரு ஹோட்டலில் காபி அருந்திக் கொண்டிருந்தேன். அவரிடம் இதெல்லாம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். கடை சியில் ‘You are a lousy pervert’ என்றார்.
நன்றி ; “மையம்”

One Comment on “கோபிகிருஷ்ணன்/இனிமையான வக்கிரம்”
Comments are closed.