ஜெ.பாஸ்கரன்/ பெட்டி நிறைய சிரிப்புகள்

சவரிமுத்துவின் சவப்பெட்டி!
‘இது எனக்காகச் செய்யப்பட்ட பெட்டிதானே?’ – சவரிமுத்து சன்னமாகக் கேட்டார். ஒரு வாரமாக ஐசியூ வில் வளைந்த புடலங்காயாய்ப் படுத்துக்கிடக்க, எல்லா துவாரங்கலிலும் இரப்பர்க் குழாய்கள்!
‘ஆமாம்’
‘என் உயரத்திற்குப் பத்தாது போல இருக்கே; காலை மடிச்சுத்தான் படுக்கணுமோ?’
‘உங்க உயரம் அஞ்சடி பத்தங்குலம். பெட்டி ஆறடி நீளம், ரெண்டடி ஆழம்’
‘ஓ.. அப்ப சரி; மேலே கீழே, பக்கங்களிலெல்லாம் மூச்சு விட சின்னச் சின்ன ஓட்டைகள இருக்கா?’ கேட்டுவிட்டு, நாக்கை இரத்தம் வராமல் கடித்துக் கொண்டார் சவரிமுத்து. ‘செத்தப்புறம் எங்கேர்ந்து மூச்சு?’
சுற்றும் முற்றும் பார்த்தார். சவப்பெட்டிக்கு அருகிலிருந்த சூசையைக் காணவில்லை.
‘அடப்பாவி, அதுக்குள்ள எங்கே போய்விட்டான்? அது சரி.. இந்த ஆஸ்பத்திரியிலேயே இன்னும் எவ்வளவு பேருக்கு அவன் ‘சேவை’ உடனடியாகத் தேவையோ?’ – தன் பெட்டியை ஒரு நோட்டம் விட்டார் சவரி.


அழகாகத்தான் இருந்தது. மனதுக்குள் பூரித்தார் மரிக்கப்போகும் சவரி. இரண்டு பக்கங்களிலும் ஸ்டீல் கைப்பிடிகள் – பக்கவாட்டில் அழகிய ஸ்டீல் பட்டைகள்!
அடியில் நான்கு சுழல் சக்கரங்கள் – ‘அப்படியே உருட்டிக்கொண்டு போகலாம், உள்ளே ஆட்டம் ஏதும் இருக்காது! வேனில் போகும்போது நம்ம ஊர் ரோடு தூக்கிப்போடும்; தலையில் இடிக்காம இருக்கணும்’ சவரி கவலைப்பட்டார்.
‘அடடா, மூடி கூட அழகான மண்டபம் போல, இழைத்த மரத்தின் டிசைனில் இருக்கிறதே…. வெளிப்புற அழகு கிடக்கட்டும், உள்ளே எப்படி இருக்குமோ?’
ஒரு பக்கம் இந்தப் பெட்டி, மறுபக்கம் பிளாஸ்டிக் குழாயில் சொட்டு சொட்டாய் உணவு – ‘இதையும் உள்ளே வைத்து அனுப்பினால் தேவலை… பாதிரியார் ஜெபித்து முடிக்கும் வரை பசிக்காமலாவது இருக்கும்!’ சவரி நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டார், ‘ இறப்புக்குப் பிறகு என்ன பசி?’
கதவு திறக்கும் ஓசை. ‘வெள்ளைக் கோட்டு போட்டு வருபவர் பாதிரியாராக இருக்க முடியாது; அவரது அங்கி இன்னும் நீளமாக இருக்குமே! பின்னே யாரிவர்? எமதூதரா? தலையில் கொம்பில்லையே…’
“சிஸ்டர், சவரிமுத்து எப்படி இருக்கிறார்? இன்னும் ஏதாவது இர்ரெலவண்ட்டா உளறிகிட்டு இருக்காரா?”
‘எமதூதர் என்ன டாக்டரா?’ சவரிக்குப் புரியவில்லை.
பக்கத்தில் நீலநிற கவுனில் இருந்த தேவ கன்னிகை புரியாத மாதிரி ஏதோ சொல்ல, கழுத்திலிருந்த பாசக்கயிற்றைக் கையில் எடுத்துக்கொண்டு சவரிமுத்துவை நெருங்கினார் தேவ தூதர்.
“ஐயோ, ஐயா.. மெதுவாகப் பாசக் கயிற்றை இறுக்குங்க. என் கழுத்தில் சுளுக்கு, நரம்பு பிசகியிருக்கிறது”
“ஸ்டெதாஸ்கோப்பைப் பாசக் கயிறுன்னு உளர்றாரு. இந்த வகை வியாதியில இப்படி வருவது சகஜம்தான். கொஞ்சம் செடேஷன் குடுங்க சிஸ்டர்.”
எமதூதர் பாசக்கயிற்றை ஆட்டியபடியே வேறொரு எமர்ஜென்ஸிக்குப் போனார். ‘அங்காவது அந்தக் கயிற்றுக்கு வேலையிருக்கட்டும்… ஆமென்’
தேவ கன்னிகை முகத்தில் புன்னகையுடன், தலையில் மலர்க் கிரீடத்துடன் அருகில் வர, ‘வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இப்படியொரு அதிர்ஷ்டமா?’ – சவரிமுத்து மூடிய கண்களுடன் அவள் ஸ்பரிஸத்திற்குக் காத்திருந்தார். வேளைகெட்ட வேளையில் கையில் கொசு கடித்தது. பெரிய கொசு. கடித்த இடத்தில் பஞ்சை வைத்துத் தேய்த்துவிட்டு, தேவ கன்னிகை மறைந்துவிட்டாள்!
மீண்டும் அறையில் சவரிமுத்துவும், சவப்பெட்டியும் மட்டும்! ‘உள்ளே மெத்தையும், தலைகாணியும் இருக்குமா?’ நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மீண்டும் அறைக் கதவு திறக்க, இப்போது வந்த தேவ கன்னிகை, மனைவி மேரி. அருகில் வந்த மேரியின் கைகளைப் பிடிக்க, அவள் கவனிக்காமல் அந்த சொட்டு உணவுப் பையை மாற்றினாள்!
‘மேரி’ மெதுவாகக் கூப்பிட்டார் சவரிமுத்து. அவள் மெதுவாகத் தன்னை விடுவித்துக்கொண்டு, வெளியே அவசரமாகச் சென்றாள்.
இப்போது அந்த சவப் பெட்டியைக் காணவில்லை! கண்கள் மெதுவாகச் சொருக, வேறொரு உலகிற்குள் வழுக்கியபடிச் சென்றார் சவரிமுத்து.
“டாக்டர், சவரிமுத்துவுக்கு இன்னும் ஹாலூசினேஷன் இருக்கிறது. என்னை மேரி என்றும், அங்கு சவப் பெட்டி இருக்கிறது ஜாக்கிரதை என்றும் உளறுகிறார்” என்றாள் இரண்டாவதாக வந்த நர்ஸ்!