சசிகலா விஸ்வநாதன்/பாவனாவும் அமுதனும்

               பாவனா  கைப் பையை தன் மடியில் வைத்துக் கொண்டு, எதிரில்  இருந்த  அமுதனைப் பார்த்து மெதுவாக புன்னகைத்தாள்.  அமுதனும்  மெதுவாக புன்னகைக்க, இனம் தெரியாத  அமைதி அவர்களுக்கிடையில்.கழுத்தில் வடிந்த வியர்வையை துடைத்துக்  கொள்வது போன்ற பாவனையில், பாவனா,அமுதனை ஏறிட்டுப் பார்த்தாள். அவன்  ரெஸ்டாரன்ட் வெயிட்டரை கூப்பிடும் முயற்சியில் இருந்தான். இளமை ததும்பும் கவர்ச்சியான முகம். மா நிறம் தான். கண்ணியமும் ஒரு தீவிரமும் இருந்தது; முகத்தில்."முடிவில் வெற்றி எனதே; என்று  சொல்வது போல் இருந்த  அந்த நேர்மறையான முகம் அவளுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது." " வாட் வில் யு ஹேவ்?" என்ற வினாவுடன் இவளைப் பார்த்து வினவ,அவள் தன் பார்வையைத் திருப்பினாள்; சிறு மென்னகையுடன். "ஜஸ்ட் எ காஃபி. வீ கேன் டிலே தட். ஆஃப்டர் ஆல்,வி கேம் ஹியர்  ஃபார் ஸம் அதர் பர்ப்பஸ்,; இல்லையா," என்றாள்."ஆம்! நாம் அதை  எளிதாக்க லாமே; ஒரு சிற்றுண்டியுடன்" என்று அமுதன் பதிலளிக்க; மேலே என்ன சொல்வது, என்று தெரியாமல்  மௌனமானாள், பாவனா.
              "இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கிறது;நீங்கள் முனைவர் பட்டத்திற்கான இறுதி ஆய்வுரையை முடிக்க,"என்று கேட்டான்."என் கணிப்பில் ஒரு வருடத்தில்  முடியும். ஆனால் அதை முடிப்பது என் கையில் மட்டும் இல்லை.என் பேராசிரியர்  முனைப்பும் விருப்பமும் தேவை. அவர் இன்னும் ஆராய்ச்சியை விரிவுபடுத்த நிச்சயித்தால் மேலும் ஒரிரு வருடங்கள் ஆகலாம். அதற்கான நிதிக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். எனது இப்போதுள்ள  கால திட்டத்தின்படி இன்னும் ஒன்றரை வருஷம் வரை நிதி கிடைக்கும். இதுதான் இப்போதுள்ள

நிலைமை.” என்று பதிலளித்தாள்
“உங்கள் திட்டம் என்ன?”என்ற
பாவனாவின் கேள்விக்கு அமுதன், இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பேன். இன்னும் கொஞ்சம் மூலதனம் சேர்க்க வேண்டியுள்ளது.அதன் பின் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் சிறு தொழிற்சாலை நிறுவதுதான் என் வருங்காலத்திற்கான திட்டம். இந்தியாவில் இன்னும் அநேகர் கார் வாங்கும் கனவில் இருக்கிறார்கள்.தரமான உதிரிபாகங்களுக்கு நல்ல சந்தை உள்ளது. அது நம் திருமணத்திற்கு ஒரு தடையாய் இருக்குமா? நான் ஒரு தொழிலதிபராக வேண்டும், என்பதே என் வாழ் நாளின் லட்சியம்.” என்றான்.” வாழ்த்துகள். உங்கள் லட்சியம் நிறைவேறட்டும்” என்றாள் பாவனா.
அதற்குள் சிற்றுண்டி வரவே இருவரும் அமைதியாக அவரவர் எண்ணத்தில்; சிற்றுண்டியை உண்ண ஆரம்பித்தனர்.திடீரென இருவரும் ஒரே நொடியில்” ஒரு கேள்வி” என்றவாறு இருவரும் நிமிர்ந்து பார்க்க, “சட்”என வாய்விட்டு சிரிக்கவும், சூழ்நிலை எளிதாகியது. “கேளுங்கள்!பதில் கொடுக்கப்படும்” என்று குறுஞ் சிரிப்புடன் பாவனா சற்றே நாடகத்தனமாகச் சொன்னாள். ” என் வீட்டில் என் கூடப் பிறந்தவர்கள் அதிகம் என்பதால் நீங்கள் இந்த திருமணத்தை மேலே எடுத்துச் செல்ல தயக்கமாய் இருக்கிறதா,”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்; அமுதன். ” “ஆம். அது ஒரு யோசனையாகத்தான் உள்ளது. ஆனால் எல்லோரும் படித்து அவரவர் வாழ்வில் இருப்பதால், ஒரு அளவு சமாளித்துக் கொள்வேன். எவர்; எப்படி; என்று நிதானிக்க கொஞ்சம் நாள் ஆகலாம். எல்லோரும் உங்களை விட மிகவும் வயதில் மூத்தவர்கள். அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.” என்றாள். “பிறகு என்ன? இந்த கல்யாணத்தில் உங்களுக்கு முழு சம்மதம்தானே,” என்று அமுதன் கேட்கவும்; ” இருங்கள்.நான் தெரிந்து கொள்ளவும் நீங்கள் புரிந்து கொள்ளவும் கருத்து ஒன்று உள்ளது. அதைத்தான் நான் கேட்பதாக இருந்தேன். இப்போது கேட்கலாமா?” என்று பாவனா வினா ஒன்றை வைத்தாள் அமுதன் முன்.‌” சொல்லுங்கள். மனம் திறந்து உள்ளார்ந்து பேசி முடிவெடுக்கத்தானே நாம் இன்று சந்தித்து இருக்கிறோம்.
நீண்ட மௌனத்திற்கு பிறகு பாவனா மெல்ல தன் வேண்டுகோளை சொன்னாள்.
“ஒரு அநாதை குழந்தையை நாம் தத்து எடுத்து வளர்க்க வேண்டும்; நமது குழந்தையாக, சட்டத்தால் மட்டுமல்ல; உள்ளார்ந்து மனதால் நம் குழந்தையாய் நினைத்து ஸ்வீகரிக்கவேண்டும். இதற்கு உங்களுக்கு சம்மதமானால் இந்த திருமண ஏற்பாட்டை மேலெடுத்துச் செல்லலாம். இது எனது வேண்டுகோள்.” என்றாள் அமுதன் திடுக்கிட்டு விட்டான்.” சத்தியமாக,நான் இதை உங்களிடமிருந்து இந்த வித்தியாசமான விருப்ப வேண்டுகோளை எதிர்பார்க்கவே இல்லை. என் மதிப்பில் நீங்கள் உயர்ந்து விட்டாலும், இதை என் மனது எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளும் என்று என்னால் அனுமானிக்க இயலவில்லை. இன்று உங்களிடம் உடனடியாக” சரி” என்று சொல்வதில் சிக்கல் ஒன்றும் இல்லை. வாழ் நாள் முழுக்க கொண்டு செலுத்த வேண்டிய பொறுப்பு; அல்லவா?அதை நான் சரியாக நிர்வகிக்க வேண்டாமா? உங்கள் நிலைக்கு நான் உயர்ந்து இருப்பேனா;என்ற ஐயம்,என் மனதில் உள்ளது. எனக்கு யோசிக்க இரண்டு வார அவகாசம் வேண்டும்” என்றான்.
” உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விட்டேனோ” என்று என் மனம் உறுத்துகிறது. மன்னிக்கவும். நானே இதை தனித்தே செய்ய முடியும். எனது திருமணத்திற்குத் தடையாக இருக்கும்; என்று என் பெற்றோர் நினைத்ததால்,என்னால் இதை செய்ய முடியவில்லை. இதற்கு சம்மதிக்காத மணவாழ்வு வேண்டாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஓரிரண்டு வரன்களும் இதனால்தான் தட்டிப் போயிற்று. அவரவர் விருப்பம், இதில் மிகவும் முக்கியம்; இல்லையா. இதை உங்களிடம் சொல்லி உங்கள் எண்ணத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே நான் பாலு அண்ணா மூலம் இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
“இதில் உங்கள் நிலைப்பாட்டை சிந்தித்து முடிவெடுக்க வேண்டுகிறேன். இது தான் நான் உங்களிடம் கேட்க இருந்த வினா. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா,” என்று விநயத்துடன் உறுதியாகக் கேட்டு; ஆவலுடன் அமுதனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்
‌. “இந்த திருமணத்திற்கு வேறு ஏதாவது இடையூறு இருக்கிறதா” என்று அமுதன் கேட்க, ” இது ஒன்று போதாதா,” என்று கேட்டு மென்மையாக புன்முறுவல் செய்தாள்.
இப்போது வெயிட்டர் காஃபி கொண்டு வர இருவரும் மௌனமாக காஃபியை அருந்தினார்கள். ” எனக்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுங்கள். நானே உங்களை மீண்டும் தொடர்பு கொள்கிறேன்”என்றான். “அமுதன்! எனக்கு எந்த ஒரு அவசரமும் இல்லை. உங்களுக்கும் எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவகாசம் கேட்டதும் இந்த விஷயத்தின் ஆழத்தை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே, என்றும் எனக்கு விளங்குகிறது. அது உங்கள் நேர்மையான அணுகுமுறையை எனக்கு சுட்டுகிறது. த பால் இஸ் இன் யுவர் கோர்ட். லெட் அஸ் ப்ளே எ ஹானஸ்ட் அன்ட் ஹானரபிள் கேம்.இந்த திருமண ஏற்பாட்டின் முடிவு எப்படி இருந்தாலும்; வீ வில் ரிமைன் அஸ் குட் ஃப்ரெண்ட்ஸ்” என்று,பாவனா,கைப் பையில் இருந்து தன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்து, கையசைத்து,விடை பெற்று,வண்டியைக் கிளப்பினாள்‌. அவள் போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்த அமலனின் முகத்தில் புன்னகை பூத்தது.தானே தன் பெற்றோரின் வளர்ப்பு மகன் என்பது அவளுக்கு
தன் வீட்டார் அவளுக்கு இன்னமும் சொல்லவில்லை; போலும். அது சரிதான்! அவர்கள் ஒரு நாளும் அவனை வேறு விதமாக நினைத்தே இல்லையே; எப்படி சொல்வார்கள்?