கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/சமோசா

கடந்த 15 நாட்களாக வெளியில் எங்கும் சாப்பிடவில்லை! இன்று முதல் வெளியில் சாப்பிடலாம் என்று எங்கள் வீட்டிலிருந்து உத்தரவு கிடைத்தது! எனது நண்பர் நாக சொக்கலிங்கம் அவர்கள் மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில் இருந்து குட்டி குட்டி சமோசா வாங்கி வந்தார்! இந்த சமோசாவை வாங்குவதற்கே பெரும் கூட்டம் அங்கே திரண்டு இருக்கும்!!
சம்சா, சமோசா, சோமோசா என்று அழைக்கப்படும் இந்தப் பதார்த்தத்தின் பெயர் ‘சம்பூசாஹ்’ என்கிற பார்ஸி (ஈரானில் பேசப்படும் மொழி) மொழிச் சொல்லில் இருந்து வந்ததாகும்.
இது ஏன் முக்கோண வடிவத்தில் உள்ளது தெரியுமா? அரபி மொழியில் ‘பிறைபோன்ற வடிவம்’ என்பதை சன்புசாக் அல்லது சன்புசாஜ் என்பர். இது பின்னர் மருவி சம்சா ஆனது! அரபு நாடுகளில் பிறை வடிவமாக சம்சா தயாரானதால் இந்தியாவிலும் இதனை முக்கோண வடிவத்தில் கொண்டு வந்தார்கள்!! கைக்கு அடக்கமாக கை விரல்களால் பிடித்துச் சுவைப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதால் தான் முக்கோண வடிவம் ஏற்பட்டது என்று சொல்வோர்களும் உண்டு!!
பட்டாணி அல்லது சுண்டல் (வெள்ளை கொண்டகடலை) உடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், தக்காளி, மற்றும் மசாலா பொருட்களை முக்கோண வடிவ சின்ன சின்ன மைதா மாவிற்குள் உள்ளடக்கி கொழுக்கட்டை போல் மூடி எண்ணெயில் குறைந்த வேகாட்டில் உப்பலாக பொறித்தெடுத்து செய்யபடுவதாகும் “சமோசா”. ஒரு கோப்பை தேனீருடன் பிளேட்டில் வைத்து சாப்பிட்டால் அதன் அழகும் ருசியும் தனியானது…………………….