சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

  1. பெண்களின் மானம் காக்க

உத்தியோக வர்க்கத்தினரை எதிர்த்து வெற்றி கண்டதாலும், தாரகேஸ்வர் சத்தியாக்கிரக வெற்றியாலும் கல்கத்தா கார்ப்பரேஷன் நிர்வாக வெற்றியாலும் சுயராஜ்யக்கட்சி நாட்டின் அரசியல் துறையில் மிகவும் வலிமை பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் பெருந்தலைவராய்க் கொண்டாடப்பட்டார். இச்சமயத்தில் நேர்ந்த மற்றொரு நிகழ்ச்சி சுயராஜ்யக் கட்சிக்கு மேலும் பலம் அளித்தது.
வங்காளத்துப் பரீத்பூர் மாவட்டத்தில் மதாரிபூர் பிரிவில் 1924ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கலகம் நடந்தது. போலீசார் அங்குள்ள பெண்களை மானபங்கம் செய்ததாய்க் கூறப்பட்டது. இவ்வாறு குற்றம் சாட்டியதற்காகச் சுயராஷ்யக் கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்பால், டாக்காவில் போலீஸ் தர்பார் நடைபெற்றது; கவர்னர் லிட்டன் பிரபு, போலீஸ்காரர்கள் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், அவர்கள் மீது பொய்யாகக் குற்றம் சாட்டப்படுவதாகவும், போலீஸ்காரர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே பல பெண்கள் தாங்கள் மானபங்கம் செய்யப்பட்டதாய் ஜோடித்துப் பேசுவதாகவும் தம் உரையில் குறிப்பிட்டார்.
இச்சொற்கள் வங்காளிகளின் தன்மான உணர்ச்சியைத் தாக்கின. கற்பைக் காத்துக்கொள்வதற்காக நகைமுகத்துடன் தீயைத் தழுவிய ஹிந்துப் பெண்கள் கற்புக்குத் தாங்களே இழுக்குக் கற்பித்துக் கொள்வார்களா? இந்தக் கற்பனையே அவர்கள் நெஞ்சை நடுக்குமே! கவர்னர் லிட்டன் பிரபுக்கு இந்த உண்மைகள் தெரியாது போலும்; ஹிந்துப் பெண்மணிகளை இழிவுபடுத்தத் துணிந்துவிட்டார்.
கவர்னரின் உரையைக் கண்டித்து வங்காளத்தில் ஆங்காங்கு கூட்டங்கள் நடந்தன. கல்கத்தா டவுன் ஹாலில் பெரும் கூட்டம் திரண்டது; ஆறு பேர், ஆறு இடங்களிலிருந்து சொற்பொழிவு நிகழ்த்த வேண்டியிருந்தது. செய்தித்தாள்கள் கவர்னரைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. மக்களின் குமுறலைக் கண்டு அரசு அஞ்சியது; லிட்டன் பிரபு தம் உரையை வாபஸ் வாங்கிய துடன் மக்களிடம் மன்னிப்பும் கோரினார். இந்தச் சூழ்நிலையைச் சித்தரஞ்சனர் சுயராஜ்யக் கட்சியின் முன்னேற்றத்துக்கு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
மக்கள் இவ்வாறு கிளர்ந்தவுடன் பயங்கரவாதிகளின் வலிமை மிகுந்தது. காந்தி அடிகளின் செல்வாக்கினாலும், ஆன்ம பலத்தாலும் அவர்கள் ஓரளவு அடங்கியிருந்தார்கள்; ஆனால், இச்சமயம் ஒத்துழையாமை இயக்கம் தளர்வுற்றிருந்தது; ஆகையால் வன்முறைச் செயல்கள் மீண்டும் தலைதூக்கின. 1924ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் கோபீமோகன் ஸாஹா என்னும் இளைஞர் டே என்ற ஆங்கிலேயரைக் கொலை புரிந்தார். நீதி மன்றத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவு மக்களைக் கொதிப்புறச் செய்தது; அரசாங்கம் வழக்கப்படி அடக்குமுறைப் பிரயோகத்தைத் தொடங்கியது. 1924, அக்டோபரில் வைசிராயின் இசைவுடன் வங்காளக் கவர்னர் அவரசச் சட்டம் பிறப்பித்தார்; அதன் கீழ் எண்பது வாலிபர்கள் எவ்வித நீதிமன்ற விசாரணை யும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டனர்; அவர்களில் பெரும் பாலோர் சுயராஜ்யக் கட்சியை சேர்ந்தவர்கள்; சித்தரஞ்சன் தாஸின் வலக்கரமாக விளங்கிய சுபாஷ் சந்திரபோஸும் கைதானவர்களில் ஒருவர். சுயராஜ்யக் கட்சியை ஒடுக்க அரசாங்கம் முனைந்துள்ளது என்பதைத் தாஸ் புரிந்துகொண்டார். அவர் அரசினரின் அடக்கு முறையை வன்மையாக எதிர்த்தார்; ஆயினும், ஆண்டு முடிவுக்குள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், அடக்குமுறையால் எந்தக் கிளர்ச்சி ஒடுங்கியுள்ளது? நாளுக்குநாள் வங்காளத்தில் நிலைமை மோசமாகி வந்தது. அவசரச் சட்டம் ஆறு மாதம்தான் செல்லும்; அந்தக் ‘கெடு’ முடிவடையும்போது, வங்காள சர்க்கார் சட்டமன்றத்தில் ‘வங்காளக்
குற்றச் சட்டத் திருத்த மசோதா’வை வைத்தது. ஆனால், சட்டமன்றத்தில் சித்தரஞ்சனுக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் இருந்த செல்வாக்குக் காரணமாக மசோதா தோற்றுவிட்டது. கவர்னர் தம் விசேஷ அதிகாரத்தைப் பிரயோகித்து மசோதாவைச் சட்ட மாக்கினார்! சட்டமன்றத்தில் அரசாங்கத்தின் எந்த மசோதாவும் நிறைவேறாதபடி சுயராஜ்யக் கட்சி தடை செய்து வந்தது.
சுயராஜ்யக் கட்சியை அரசாங்கம் எல்லாத் திசைகளிலிருந்தும் தாக்கத் தொடங்கியது. இந்தியாவிலும் இங்கிலாந்திலும் அதிகாரிகள், சுயராஜ்யக் கட்சி வன்முறை அரசியலில் ஈடுபடுவதாய்க் குற்றம் சாட்டினார்கள். இப்பால் புரட்சிவாதிகள் கிளர்ச்சி வலுப்பதையும் சித்தரஞ்சன் கவனித்தார். அவர் 1925இல் பலாத்கார இயக்கங்களைக் கண்டித்து இரு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவர் எல்லாவித வன்முறைச் செயல்களையும் கண்டித்தார். ‘கொள்கை ரீதியில் நான் எவ்வித அரசியல் கொலைகளையும் ஆதரிக்கவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்; எனக்கும் என் கட்சிக்கும் இச்செயல்கள் வெறுப்புத் தருபவை; இச்செயல்கள் நாட்டின் அரசியல் வளர்ச்சியைக் குலைக்கும் என்று நான் நினைக்கிறேன்,’ என்று அவர் மிகத் தெளிவாகத் தம் கருத்தை வெளியிட்டார்.
தாஸின் சொற்பொழிவுகள் அதிகாரிகளுக்குச் சிறிது ஆறுதல் அளித்தன.