
தமிழாக்கம் : ஜெயலட்சுமி
7.
எரவாடா சிறையில், சர்தார் வல்லபபாய் படேலுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருந்தார் பாபு. “பத்திரப்படுத்தி வைத்த செத்த பாம்புகூட சமயத்துக்கு உதவும்” என்றார் காந்திஜி. தான் சொன்னது சரி என்று நிரூபிக்க ஒரு கதையும் சொன்னார்.
ஒருமுறை, ஒரு கிழவியின் வீட்டில் பாம்பு ஒன்று வந்து விட்டது. கிழவி குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டாள். அண்டை அயலார் கூடிவிட்டனர். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பாம்பை அடித்துப்போட்டுவிட்டு தத்தம் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். செத்த பாம்பை எடுத்து எறிவதற்குப் பதிலாக, கிழவி அதை தனது கூரையின்மேலே எறிந்து விட்டாள்.
வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து ஒன்றின் கண்களில் செத்த பாம்பு தென்பட்டு விட்டது. பருந்து அப்போது ஒரு முத்துமாலையை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வந்திருந்தது. அந்த முத்துமாலை அதன் வாயில் இருந்தது. பாம்பைக் கண்ட பருந்து, மாலையைக் கீழே போட்டுவிட்டு செத்த பாம்பை வாயில் கௌவிக்கொண்டு பறந்து சென்றது. கூரைமேல் வெள்ளையாக ஏதோ பளபளப்பதைக் கண்ட கிழவி, குச்சியால் அதைக் கீழே இழுத்தாள். அது முத்துமாலை என்பதைக் கண்டு மகிழ்ச்சி தாங்காமல் ஆடினாள்.
காந்திஜி இதைச் சொல்லி முடித்ததும், வல்லபபாய் படேல் ஒரு கதை சொன்னார். ஒரு வியாபாரியின் வீட்டில் பாம்பு நுழைந்து விட்டது. அதை அடிக்க யாரும் வரவில்லை. அந்தப் பாம்பைக் கொல்லுவதற்கு வியாபாரிக்குத் துணிவும் இல்லை, அத்துடன் ஒரு உயிரைக் கொல்ல விருப்பமும் இல்லை. அவன் ஒரு பாத்திரத்தை பாம்பின்மேல் கவிழ்த்து மூடி விட்டான். சந்தர்ப்பவசமாக, அன்று இரவு ஒரு திருடன் வியாபாரியின் வீட்டுக்குள் நுழைந்தான். கவிழ்ந்திருந்த பாத்திரத்தைக் கண்ட திருடன், அதன் அடியில் விலையுயர்ந்த பொருள் நிச்சயமாக இருக்கும் என்று எண்ணினான். அவன் பாத்திரத்தை மேலே எடுத்ததுதான் தாமதம். அதன் கீழிருந்த பாம்பு சடாரென்று பாய்ந்து திருடனைக் கடித்துவிட்டது. திருடன் வந்ததோ திருட, ஆனால் திரும்பியதோ உயிருக்குப் போராடிக்கொண்டு!
