ஆத்மாநாம்/மறுபக்கம்

தரையில் நான்
சுவற்றில் பல்லி

தொங்கும் விளக்கால்
ஆடும் நிழல்கள்

மங்கும் ஒலிகள்
மாலை இருளில்

தொலைவில் கேட்கும்
குழந்தையின் அழுகை

அருகில் கேட்கும்
குழாயின் ஒழுகல்

அறைக்குள் காற்றில்
வண்ணப் பூச்சிகள்

குறுக்கே பறக்கும்
வினாடிப் பிளவில்

அணைக்கும் இருளில்
சிரித்துக் கொண்டு

வானில் மிதக்கும்
கோலப் புள்ளிகள்

இடப் பெயர்ச்சி
சுழற்சியின் நடுவே

தரையில் பல்லி
சுவற்றில் நான்

(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)