
—-
ஞாயிறு இரவு என் மனைவி அருணாச்சல பிரதேசத்திலிருந்து திரும்பி வந்தபோது அவருடைய ஊரிலிருந்து கறுப்பு ஏலக்காய், பெரிய காட்டு சுண்டைக்காய், பனிச்சை பழங்கள் (Persimmon), நாட்டு ஆரஞ்சுப் பழங்கள், மூங்கில் குருத்து, அரிசி ரொட்டிகள் இவற்றோடு ஒரு கைப்பிடி ருத்திராட்ச மர இலைகளும் எடுத்து வந்திருந்தார். அவருடைய வீட்டைச் சுற்றி ருத்திராட்ச மரங்கள் நெடிதுயர்ந்திருக்கின்றன. என் மாமனாரும் மாமியாரும் இன்னும் பல என் மனைவியின் உறவினரும் எங்களைப் பார்க்க சென்னை வரும்போதெல்லாம் ருத்திராட்சங்கள் எடுத்து வருவார்கள். இன்று என் வீட்டில் மூட்டை மூட்டையாய் இப்படியாக ருத்திராட்சங்கள் சேர்ந்துவிட்டன. அப்பா ருத்திராட்சங்கள் வீட்டில் தானாக வந்து சேர்வதை பெரிய செல்வமும் புண்ணியமும் சேர்வதாகக் கருதினார்கள். அந்தக் கைப்பிடி அளவு ருத்திராட்ச மர இலைகள் எனக்கு இன்னதென்று சொல்ல முடியாத ஆனந்தத்தை அளித்தன. அவை தேக்கிலைகள் போல பெரியவை ஆனால் அகலமானவை அல்ல. தேக்கிலைகளின் வறண்டதன்மை அவற்றில் இல்லை; தண்டங்கீரையின் செழுமையான சாறு நிரம்பிய பச்சையை அவை கொண்டிருக்கின்றன. விரிவாகிக்கொண்டே போகும் பிரபஞ்சத்தின் எண்ணற்ற கதைகளில் ஏதோ ஒன்றில் நானும் இவ்விலைகளும் கதாபாத்திரங்களாக சந்திக்க விதிக்கப்பட்டிருக்கிறோம். நான் அவற்றை என் டைரியின் பக்கங்களில் மயிற்பீலிகள் போல சேமித்து வைத்துக்கொண்டேன். அவற்றில் இமயமலைத் தொடரின், கஞ்சன்ஜங்கா சிகரத்தின், பனி மூடிய பொக்கிஷங்கள், அதன் ஐந்து கொடுமுடிகள் என்னோடு பச்சைய வாசனையாய் கலந்திருக்கின்றன. வெண்சங்கு ஆழ்கடலின் சப்தத்தைத் தன்னுள் கொண்டிருப்பது போல.
All reactions:
84You and 83 others
