ஆத்மாநாம்/இன்னும்

புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகள் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு

காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு

பாசிக்கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரைநிழல் கீழமர்ந்து

பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்வியைக் கேட்டாற்போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்

சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு

கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க்கதை பேசிக் கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்

வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்

(நாற்றங்கால் கவிதைத் தொகுப்பு – 32 கவிஞர்களின் 42 கவிதைகள் தொகுப்பு : எம்.சுப்பிரமணியன் – மே 1974ல் வெளிவந்தது)