
“சுதா! என்ன இந்த வாரமும் சூப்பர் மார்க்கெட்ல கறிகாய் வாங்கிட்டியா? நம்ம வழக்கமா போற கடைக்கு போலாம்ல!” என்றார் என் கணவர்.
“எனக்கு எப்போ போகணும்னு தோணுதோ அப்ப போறேன். ஐ நீட் சம் டைம், ” என்றேன் நான்.
“அந்த விஷயத்த அவங்க மறந்திருப்பாங்க. நீயும் மறந்திடு! மூவ் ஆன்” என்றார் அவர் மறுபடியும். இந்த உரையாடல் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அந்த சம்பவத்தை மனதில் அசைபோட்டபடி அந்த கடைக்கு மறுபடியும் செல்ல என்னை மனதளவில் தயார்படுத்திக் கொண்டேன்.
அன்று ஒரு நாள், இரவு 8 மணி வாக்கில் காய்கறி வாங்க அந்த கடைக்குச் சென்றிருந்தேன். என் கணவர் காரில் அமர்ந்திருக்க, நான் மட்டும் கடைக்குச் சென்றேன். இரவு நேரமானதால் அங்கே வெகு சிலரே இருந்தனர். கடை வியாபாரியைத் தவிர வடகிழக்கு இந்திய மாநிலத்தை சேர்ந்த ஓர் சிறுவன் இருந்தான். அவனை உதவிக்காக புதிதாக பணியமர்த்தியுள்ளார் வியாபாரி என்று ஊகித்துக்கொண்டேன். அவனுக்கு சுமார் எட்டிலிருந்து பத்து வயது இருக்கலாம். ஆனால், போஷாக்கு குறைவால் சிறு உடம்பாக இருந்தான். அந்த சிறுவன் என்னை பார்த்து லேசாக சிரித்தான். பிறகு, என்னருகேயே நின்று கொண்டான். இரவு நேரம் என்பதால் கடையில் கறிகாய் வாடி வதங்கி இருந்தது. அதில் நல்லதாக பொறுக்கிக் கொண்டிருந்தேன். அவனும் அருகேயே நின்றிருந்தான். நான் கடைக்காரரிடம் கறிகாயை எடை போட்டு, கணக்கை சரி பார்த்து, பணம் தரும் சமயத்தில் தோள்பையைப் பார்த்தால் மணிபர்சைக் காணவில்லை. தோள்பையின் ஜிப்பும் திறந்திருந்தது.
சட்டென யார் மீதும் குற்றம் கூறக் கூடாது என்பதால், கடைக்காரரிடம் சிறிது அவகாசம் வாங்கி காருக்குள் பர்ஸை தவற விட்டுவிட்டேனா? என்று நோட்டம் விட சென்றேன். அங்கு அதைக் காணவில்லை. அதற்குள் என் கணவர் “என்ன விஷயம்?” என கேட்க, என் கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வந்தது.
“இதுக்கு தான் உன்ன எப்போதும் பேக் மூடியிருக்கா? பில் பே பண்ணிட்டா , கார்டு எடுத்தோமான்னு அடிக்கடி செக் பண்ண சொல்வேன்,” என்று எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல அறிவுரை அளித்தார் என்னவர்.
“இந்த கடைக்குள்ள போகும்போது பர்ஸ் இருந்ததா? பேக் மூடியிருந்ததா? யோசிச்சு சொல்லு?”
“பர்ஸ் பேக்ல தான் இருந்தது… ஆனா பேக் ஜிப் போட்டேனான்னு தெரியல…”
“என்ன இவ்வளோ அஜாக்கிரதையா இருக்க? சரி கடையில யாராவது சந்தேகப்படும்படியா பார்த்தியா?”
“அது வந்து… கடையில புதுசா ஒரு குட்டிப் பையன வேலைக்கு போட்டிருக்காங்க… அந்த பையன் என் பக்கத்துலயே நின்னுட்டு இருந்தான்… ஆனா, ரொம்ப சின்ன பையன், அவன் எடுத்திருப்பான்னு தோணல”
“இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாது. சின்ன வயசுலேயே கிரிமினல்ஸ் நெறய பேரு இருக்காங்க… வா நானும் வரேன் அவன செக் பண்ணலாம்,” என்று கூறி இருவருமாக அந்த வியாபாரியிடம் எங்கள் சந்தேகத்தைக் கூறினோம். அவர் முகம் அதிர்ச்சியில் மாறியது.
“டேய்! இவங்க பர்ஸ எடுத்தியாடா? உண்மைய சொல்லிடு” என்று மிரட்டும் தொணியில் அச்சிறுவனை கேட்டார் கடைக்காரர்.
அவனுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, ஆனால், முகத்தில் எந்த ஒரு சலனமும் இன்றி ‘எடுக்கவில்லை’ என்பது போல தலையசைத்தான். தனது பாக்கெட்களையும் காலி செய்து காண்பித்தான். கடைக்காரர் விடவில்லை, போலீஸ் தேடுவது போல அவனை தொட்டுத் துழாவி தேடினார். அப்போதும் பர்ஸ் அகப்படவில்லை. என் கணவர் ஒரு படி மேல் சென்று, “போலீஸ் கிட்ட சொல்ல போறேன், அவங்க வந்து தேடுவாங்க, நீ எடுத்தா உண்மைய சொல்லிட்டு பர்ஸ கொடுத்திடு… உன்ன ஒன்னும் செய்ய மாட்டோம்,” என்றார். அதற்கும் அவன் அமைதியாக ‘இல்லை’ என்பது போல தலையசைத்தான்.
எனக்கு அச்சிறுவனை பார்க்க பாவமாக இருந்தது. என்ன கஷ்டமோ, இந்த வயசுல வேலைக்கு வந்திருக்கு! அம்மா கூட பக்கத்துல இல்ல. ராத்திரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு, சாப்டானோ என்னவோ? என்று எண்ணிய படி, “ சரி, அவன விடுங்க! என் பர்ஸ்ல ரொம்ப பைசா இல்ல. கார்டு பிளாக் பண்ணிடறேன், வாங்க போலாம்,” என்று கூறி அங்கிருந்து கிளம்பினோம்.
கிளம்பும் நேரத்தில் கடைக்காரர், “ புள்ள எடுத்திருப்பான்னு தோணல, கொஞ்சம் வீட்ல, இல்லாட்டி நீங்க வேற கடைகளுக்கு போயிருந்தா, அங்க தேடிப்பாருங்க,” என்று வேதனையுடன் வழியனுப்பினார்.
நாங்கள் ஆயாசமாக வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது, எனது அலைபேசி ஒலித்தது. “ அக்கா! சாய்ந்தரம் கடைக்கு அளவு குடுக்க வந்தீங்களாமே, அப்போ உங்க பர்ஸ இங்க விட்டுட்டு போய்ட்டீங்க. கடை பையன் எடுத்து வெச்சிருந்தான். இப்போ தான் குடுத்தான். அதான் உடனே கால் பண்றேன். நாளைக்கு வாங்கிக்கோங்க,” என்றாள் தையல் கடை வைத்திருக்கும் மலர்.
நான் அப்படியே உறைந்து போனேன். ஒரு பக்கம் குற்ற உணர்ச்சி, மறுபக்கம் என் தவறை ஒப்புக்கொள்ள விடாமல் என் அகங்காரம், இரண்டும் என்னை அழுத்தியது. நான் மறுபடி அந்த கடைக்கு செல்லாமலேயே இருக்கலாம். பர்ஸ் கிடைத்த விஷயம் என்னையும், என் கணவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இந்த எண்ணம் மனதில் மேலோங்க, சட்டென அச்சிறுவனின் முகம் என் மனதில் தோன்றி மறைந்தது.
கடையில் அவ்வளவு இடம் இருந்த போது, ஏன் அவன் என் அருகிலேயே வந்து நிற்க வேண்டும்? ஒரு வேளை அவனது தாயின் நினைவு வரவே என் அருகில் வந்து நின்று கொண்டானோ? என் வேலை, என் வீடு, எனக்கு நேரமாகி விட்டது என்ற சுயநலத்தில் அவனிடம் கனிவாக பேச தவறிவிட்டேனோ? என்ற ஐயங்கள் மனதில் எழ இன்னும் என் மனம் கனத்துப் போனது. அவனை கட்டி அனைத்து மன்னிப்பு கேட்க என் மனம் ஏங்கியது.
“ நீ போய் உன் தப்ப ஒத்துகிட்டு அந்த பையன் கிட்டயும், கடைக்காரர் கிட்டயும் மன்னிப்பு கேட்டுடு. அப்போ தான் உன்னால நிம்மதியா தூங்க முடியும்,” என்ற என் கணவரின் குரல் என் எண்ண ஓட்டத்தைத் தடுக்க,உடனே வண்டியை திருப்பி அந்த கடைக்குச் சென்றோம். எனது பர்ஸ் காணவில்லை என்று அத்தனை பிரகடனப்படுத்திய என்னால், அது திரும்ப கிடைத்ததை அவ்வளவு எளிதாக சொல்ல முடியவில்லை. என் தடுமாற்றத்தை மீறி அவர்களிடம் அந்த விஷயத்தை சொன்ன போது அவர்கள் முகத்தில் சந்தோஷம் இல்லை.
அச்சிறுவனிடம் “ ஸாரி, ஸாரி,” என்று பல முறை கூறினேன், ஆனால் அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழியை ஏற்ற போது இருந்த அதே அமைதி தான் அப்போதும் இருந்தது.
“நீங்க ஈஸியா ஸாரி சொல்லிட்டீங்க, அந்த பையன் மனசு எவ்வளவு பாடுபட்டிருக்கும்?” என்ற கடைக்காரரின் கேள்வி என் மனதை ஈட்டி போல் தாக்கியது. என்ன ஒரு அனுபவம் இது? பர்ஸ் கிடைத்ததில் சந்தோஷமும் இல்லை. என் தவறை ஒப்புக்கொண்டதில் பெரிய நிம்மதியும் இல்லை? என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டும் விடை அகப்படவில்லை. அந்த குழந்தையின் முகம் மட்டுமே மனதில் எழுகிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு இன்று தான் மறுபடி அந்த கறிகாய் கடைக்குச் சென்றேன். எப்போதும் போல என்னை இன்முகத்துடன் கடைக்காரர் வரவேற்கவில்லை. என்னை பார்த்தவுடன், தனது முகத்தை திருப்பி, வேறு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கடையில் அந்த பையனையும் காணவில்லை.
“என்ன அண்ணா அந்த பையன் இன்னிக்கு லீவா?” என்று விசாரித்தேன்.
“அவன் அப்பவே வேலைய விட்டு நின்னுட்டான்,” என்றார் கடைக்காரர்.
