
“ஆஹா! அருமையான கட்ட அமைப்பு. உங்க பொண்ணு சென்ற இடமெல்லாம் செல்வம் கொழிக்கும். யோகக்கார ஜாதகம்! இவ தன யோக ஜாதகி!” இப்படி குடும்ப ஜோசியர் நம்ம கதாநாயகி ஜனனி என்கிற ஜானும்மா ஜாதகத்தைப் பார்த்து சொல்ல, காக்கா உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா, ஜானு பொறந்த நேரத்துல அப்பா ஶ்ரீனிவாசனுக்கு வியாபாரம் கொழிக்க, அம்மா ரேவதிக்கு பூர்வீக சொத்து கிடைக்க, நம்ம தன யோக ஜாதகி ஜானுவுக்கு மவுசு கூடிப்போச்சு.
செல்வ செழிப்பும், அதீத செல்லமும் ஒரு பயங்கர கலவை தானே? அதன் தாக்கத்துல வளரும் ஜானும்மாவுக்கு, எல்லா விஷயங்களும் தன்னைச் சார்ந்தே நடக்குதுன்னும், நல்ல விஷயங்கள் நடந்தா தன்னோட அதிர்ஷ்டம் தான் காரணம் என்றும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை முன்னிலைப் படுத்தி பேசும் ஒரு அல்ப குணம் வந்துடுச்சு. அதே போல ஶ்ரீனிவாசனும் ‘ஜானு உன் கையால இந்த பேனாவ தொட்டுக் கொடு, நீ ராசியானவ. ‘ ‘ஜானு, முதல்ல இந்த வீட்ல நீ அடி எடுத்து வை.’ ‘ஜானும்மாவுக்கு பிடிச்ச ஹோட்டல் போகலாம்.’ ‘ஜானும்மா கேட்டு அப்பா இல்லன்னு சொல்லுவேனா?’ என்பது போல ஏத்தி விட, ஜானும்மாவ கையில பிடிக்க முடியல.
ஏதாவது ஒரு விழாவுக்கு போகும்போது, அங்க யாராவது ஜானுவோட அதிக ஜரிகை வைச்சு புடவை கட்டிட்டா! இல்ல லேட்டஸ்ட் டிசைன்ல ரவிக்கை போட்டுட்டா! அவ்வளவு தான்… ஒண்ணு ஜானுவும் போய் அதே போல புடவை எடுத்துடுவா, இல்லன்னா அங்க எல்லார்கிட்டயும் போய் ‘என்ன பார்த்து தான் இந்த தீபா இந்தப் புடவைய வாங்கினா!’ ‘நான் சொன்ன டெய்லர் கிட்ட போய் தான் சுதா டிசைனா ப்ளவுஸ் தச்சிக்கறா!’ அப்படீனு தன்னையே மிகைப்படுத்தி பேசுவா.
ஒரு சில பேரு ஜானு என்ன சொன்னாலும் பதிலுக்கு பேச மாட்டாங்க. பிடிக்குதோ, பிடிக்கலையோ அமைதியா ஜானுவை சகிச்சுக்கிட்டு போவாங்க. ஒரு சில பேரு இன்னும் மோசம், ஜானுவ முகஸ்துதி பண்ணிடுவாங்க. அது இன்னும் ஆபத்து. இதுல தப்பித் தவறி யாராவது “ஜானு நீ சொல்றது தப்பு! எப்போதும் உன் பேச்சை கேக்க முடியாது!” அப்படிங்கற மாதிரி ஜானுவ சொல்லிட்டா அவ்வளவு தான்… அன்று முதல் அவங்க ஜானுவோட எதிரி ஆயிடுவாங்க. உதாரணத்துக்கு, ஒரு முறை ஜானுவோட பெரியப்பா பொண்ணு ராஜிய பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க. அப்போ அங்க இருந்த ஜானு வழக்கம் போல ஒரே அலட்டல் பேச்சும், பந்தாவும் என அவள் அவளாக இருந்தாள். இதுல, நல்லவேளையா மாப்பிள்ளை பையனுக்கு ராஜிய பிடிச்சுப் போக, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிச்சுட்டாரு. ஜானு வழக்கம் போல “என் ராசி தான் ராஜி உனக்கு இவ்வளவு நல்ல சம்பந்தம் கிடைச்சிருக்கு,” ன்னு சொல்ல , ராஜிக்கு வந்ததே கோவம்… “எல்லாம் உன்னால நடக்குதுன்னு பேசறத மொதல்ல நிறுத்து ஜானு” ன்னு ஒரு போடு போட்டாள்… அன்னிக்கு வீட்டுல அழுது, ஊரையே கூட்டி, ஒரு பெரிய நாடகத்தயே அரங்கேற்றிட்டா ஜானு. “ரெண்டாம் கிளாஸ் படிக்கும் போது ராஜிக்கு அம்மை வந்திச்சு, அப்போ நான் தான் நோட்ஸ் கொடுத்து உதவினேன்…” ல தொடங்கி, “இன்னிக்கு மாப்பிள்ளை வீட்ல என்னைப் பார்த்துத்தான் அசந்து போய், இப்படி ஒரு எடத்துல சம்பந்தம் வச்சுக்கிறது எங்க அதிர்ஷடம்,” என்று சொன்னாங்கன்னு சொல்லி, ” ராஜி இப்படி நன்றி மறந்து என்ன அவமானப் படுத்திட்டா!” என்று அழுது புரண்டு அதகளம் பண்ணிட்டா.
தன்னை மிகைப்படுத்தி பேசுறதுல ஜானு ஒரு டாக்டரேட் பட்டம் வாங்கினவன்னு சொன்னா மிகையாகாது. பார்க்க சுமாரா இருந்தாலும், சதா சர்வ காலமும் ஒப்பனை போட்டுக்கிட்டு அவ பண்ணுற அலும்பல பார்த்தா, “அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாஹ, ஜப்பான் ல ஜாக்கி சான் கூப்பிட்டாஹ… என்னடி கலர் கலரா ரீல் சுத்துற?” ன்னு நமக்கு கரகாட்டக்காரன் பட வசனம் தான் நினைவுக்கு வரும். ஒரு சில நேரத்துல ஶ்ரீனிவாசன பார்த்தா மகாபாரதத்துல வருகிற திருதராஷ்டிரன் ஞாபகம் வரும். எப்படி அவர் துரியோதனன் மேல உள்ள அதீத பாசத்தால அவன் செய்யற தப்புகளை எல்லாம் உணர மறுத்தாரோ, அதே போல ஜானுவின் தவறுகளை ஶ்ரீனிவாசன் உணரலையோன்னு தோணும்.
இவ்வளவு அல்டாப்பு ராணியாக இருக்குற நம்ம தன யோக ஜாதகி ஜானுவுக்கு ஒரு நல்ல குணமும் உண்டு. அது அடுத்தவங்களுக்கு உதவுறது. சரி, இரக்க குணம் இருக்குற காரணத்துனால கொஞ்சம் பிளஸ் மார்க் போடலாம்னு பார்த்தா… கூடவே அத விளம்பரப் படுத்தும் பீத்த குணமும் தொத்திக்கும் என்ற உயரிய சிந்தனை உள்ள நம்ம நாட்டுல, ஜானு உதவி செய்யறதே விளம்பரத்துக்காகத் தான். ‘நான் ஓரு தொண்டு நிறுவனத்துல சேர்ந்து இவ்வளவு பேருக்கு உதவி பண்ணினேன்.’ ‘ நான்தான் என் தொடர்புகள பயன்படுத்தி இவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். இவரு வீட்டுல அடுப்பு எரியுறதே என்னாலத்தான்.’ என்பது போல சகலமும் விளம்பரம் தான். இதன் காரணமாவே ஜானு கிட்ட உதவி கேட்க பயப்படும் மக்களும் உண்டு.
இந்த திமிரு பிடிச்ச பொண்ணுங்கள எல்லாம் அடக்க சினிமாவுல ரஜினி காந்த் வருவது போல, ஜானுவோட கொட்டத்தை அடக்க ஒரு பையன் வரமாட்டானா? என்று நாம் நினைக்க, ஜானுவே தன்னுடைய சுபாவத்துக்கு ஒத்துழைக்கிற மாதிரி ஒரு அமைதியான, பணக்கார வீட்டுப் பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டா. அப்பவும் தன் கணவர் மற்ற சகோதரிகளின் கணவர்கள விட சிறந்தவர் என்பது போல தன் குடும்பத்தாரிடம் ஒரே பந்தா தான்.
என்னதான் உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப ஜானுவின் புகுந்த வீட்டுல ஒரு சம்பவம் நடந்துச்சு. பிறந்த வீட்டுல ‘தான் வெச்சது தான் சட்டம்!’ என்று வாழ்ந்த ஜானு, புகுந்த வீட்டுல தன்னுடைய ஆளுமைய நிலைநாட்ட தகுந்த சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருந்தா. அந்த சந்தர்ப்பம் அவ மாமனாரின் அறுபதாம் கல்யாணத்தோட ரூபத்துல அவளுக்கு கெடச்சுது. மூத்த மருமகளான ஜானு இந்த அல்வா வாய்ப்ப நல்லா பயன்படுத்திக்கிட்டா. சொந்தகாரங்க வீட்டுக்கு எல்லாம் வரிய வரியப் போய் பத்திரிகை வைச்சு அழைச்சா . அழைச்சது மட்டுமில்லாம “நான்தான் இந்த பத்திரிகை டிசைன் தேர்ந்தெடுத்தேன்,”என்று ஆரம்பிச்சு…. அவ இல்லாம அந்த விழாவே நடக்காது என்ற அளவுக்கு உறவுகாரங்க கிட்ட பேசினா. ஜானுவின் குணத்துக்கு அப்படியே நேர்மாறா, ரொம்பவும் அடக்கமான புகுந்த வீட்டு மக்கள் ஜானுவின் இந்த குணத்தை கவனிச்சாலும் செய்வதறியாது தவிச்சாங்க.
விழாவுக்கு முன்னாடியே இத்தனை ஆட்டம் என்றால் விழாவன்று கேட்கவா வேணும்? ஜானு அடிச்சது எல்லாமே சிக்சர் தான். புகுந்த வீட்டுப் பெரியவர்கள் முன்னாடி இழுத்து போட்டுக்கிட்டு வேலை செய்வது போல சத்திரத்தில அங்கும் இங்கும் ஓடினா. பந்தியில பரிமாறுவது போல ஒரு ஸ்வீட் எடுத்து முக்கியமான பத்து பேருக்கு போட்டுட்டு ரொம்ப பரபரப்பா அடுத்த வேலையை செய்ய ஓடுவது போல நாடகம் ஆடினா.”மாமியார் அறையில ஒரே துணியும், அடைசலுமா இருக்கு, நான்தான் போய் சுத்தம் செய்யணும்” என்று சொல்லி ரெண்டு புடவைய மடிச்சுட்டு அந்த குளிர் சாதன அறையில இளைப்பாரினா. “நான் தாம்பூலம் தரேன்,” என்று மாமியாரிடம் சொல்லிட்டு, “தாம்பூலம் தருவதுக்கு கூட யாரும் வர மாட்டேங்குறாங்க. நானே எல்லா வேலையும் செய்யறேன். காலையில மூணு மணிக்கே எழுந்துட்டேன், காலெல்லாம் வலிக்குது,” என்று மாமியார் வீட்டு முக்கிய விருந்தாளிகளிடம் புலம்பினா.
ஒருவழியா விழா முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு வந்தவுடன், “அம்மா இன்னிக்கு முழுக்க நான் துளி நிக்கல, எல்லாரையும் நல்லா கவனிச்சுக்கிட்டேன். எல்லாரும் என்கிட்ட விழாவ நல்லா ஜமாய்ச்சுட்டியே! லதா ரொம்ப பாக்கியசாலி இப்படி ஒரு மருமகள் கெடைச்சதுக்குன்னு சொன்னாங்க,” என்று மாமியாரிடம் நீட்டி முழக்கினாள் ஜானு. “அட அண்ணி, நான்தான் பார்த்தேனே, ஃபோட்டோ, வீடியோ எடுக்குற இடமா போய் வேலை செய்யுற மாதிரி நல்லா நடிச்சீங்க. நெஜமாவே வேலை செய்யணும்ங்கற போது நீங்க ஆளையே காணுமே!” என்று ஜானுவின் நாத்தனார் வித்யா சொன்னாளே பார்க்கணும்… ஜானுவுக்கு முகத்துல ஈயாடல. முகத்தை தன் கணவர் பக்கம் திருப்பி “ராம் உங்க தங்கை என்ன இப்படி பேசறா நீங்க பார்த்துட்டு சும்மா இருக்கீங்களே?” என்று அவமானத்திலும், கோவத்திலும் கண்களில் நீர் ததும்ப முறையிட்டா. நம்ம மாப்பிள்ளை ராம் தான் ரொம்ப சாந்த குணமாச்சே, ஜானுவின் கேள்விக்கும் அமைதி காத்தான். வெறும் அமைதியா மட்டும் நிக்காம ஒரு நமுட்டு சிரிப்பும் சிரிச்சான். ஜானுவுக்கு கோவம் தலைக்கு ஏறியது. இதுவே அவள் பிறந்த வீடா இருந்தா அங்க நடக்கும் கதையே வேற. எல்லாரும், “ஜானு உன்னப்போல வருமா! எப்படி பம்பரமா வேலை செஞ்ச. நீ இல்லாட்டி இந்த விழாவே நடந்திருக்காது,” என்று ஏகத்துக்கு புகழ்ந்திருப்பார்கள்.
ஜானு, ராம் தந்த ஏமாற்றத்திலிருந்து சுதாரித்து, ” பாருங்க அம்மா வித்யா என்ன எப்படி பேசறா?” என்று அழுது முறையிட்டாள். இயல்பிலேயே பொறுமையான குணமுள்ள மாமியார் லதா “ச்சீ… என்னம்மா… வித்யா சின்ன பொண்ணு, அவ சொல்றதுக்கெல்லாம் அழுதுகிட்டு? நீ செய்யற வேலை எனக்குத் தெரியாதா? போய் இப்போ இங்க இருக்குற எல்லாருக்கும் ராத்திரி டின்னர் பண்ணு!” என்று சமாதானப் படுத்தி, “இந்த ஜானு எப்போதும் என்னை கிச்சனுக்கே போக விடமாட்டா! எல்லா வேலையும் அவதான் இழுத்து போட்டுட்டு செய்வா!” என்று ஊரிலிருந்து விழாவுக்கு வந்திருந்த தன் தங்கையிடம் சொன்னா லதா. ” இது என்ன … நம்ம வித்தைய நமக்கே செஞ்சு காட்டறாங்களே,” என்று திடுக்கிட்ட ஜானு, வீட்டில் எஞ்சி இருக்கும் சுமார் இருபது பேருக்கு இரவு டிபன் செய்ய மனதில் குமுறிக்கொண்டே சென்றாள்.
