நகுலன்’/ ஷண்முக சுப்பையாவின் கவிதைகள்

ஷண்முக சுப்பையா என்ற கவிஞருக்கு அறிமுகம் தேவை யில்லை-இந்தப் புதுக் கவிதை யுகத்தில் கூட
இன்று புதுக்கவிதை பற்றிப் பேசுகையில், சிக்கல், புரியாத்தன்மை என்ற வார்த்தைகள் அடிபடுகின்றன; அதாவது இவைகள், இவைகள் என்ற மாத்திரம் கவிதை உஜ்ஜீவிக்கின்றது என்ற அளவில். இந்தப் புரியர்த் தன்மை யும் சிக்கலும் எல்லாக் கவிதைகளிலும் இருக்கின்றன. எந்த வகையில், எத்தன்மையில் என்பதுதான் கேள்வி. கவிதையும்- இலக்கியத்தின் எந்த பிரிவிலும் போல-அனுபவ பரிவர்த்தனை செய்யும் ஒரு எத்தனம்தான். அனுபவம் என்ற பொழு திலேயே அது அனுபவ பரிவர்த்தனைக்கு இடங்கொடுக்குமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அனுபவ – ஒருமை இருந்தால்கூட செயல்படுகிறதா அனுபவ – பரிவர்த்தனை பரிபூர்ணமாகச் என்பதும் ஒரு பொருத்தமான கேள்வி. இங்குதான் இலக்கியம் என்பது பொது என்பது மாத்திரமன்று; சிறப்பு, அலாதி என்ற தன்மையையும் உடையதுதான். அதாவது பொது வைச் – சிறப்பாகவும். சிறப்பைப் – பொதுவாகவும் ரஸவாதம் செய்யும் ஆற்றல்தான் சிருஷ்டி போலும்.
ஷண்முக சுப்பையாவின் முதல் கவிதைத் தொகுதியின் முன்னுரையில் எழுதியிருந்தேன். இவருடைய கவிதையில் பிரத்யேகச் சிறப்பு ஒரு அபூர்வமான எளிமை என்றேன். அதையேதான் இங்கு மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இவர் கவிதையில் ஓசையுண்டு; அதனால் இவர் எழுப்பும் குரலுக்காகவே “அர்த்தத்தை” நீக்கிவிட்டுக்கூட இவருடைய பல கவிதைகளைப் படித்து அனுபவிக்கலாம்; சில கவிதைகளில் ஆங்கிலச் – சொல் – தொடர்களை மிகவும் வக்கணையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். ஆனால் இவர் அடிப்படை சுருதி ஒரு அபூர்வமான எளிமை, தெளிவு.
மிகச் சிறந்த கவிஞர்களின் படைப்புக்களில் நாம் உச்ச கட்டங்கள் என்ற இடங்கள் ஒரு அபூர்வமான விவரிக்க இயலாத எளிமை, தெளிவு – சிக்கல் படைத்திருப்பதைப் பார்க்கலாம். இத்தகைய ஒரு தன்மையை இங்கும் பார்க்கலாம். பசி. ஜடம், அணியறை, காலம், ஆராய்ச்சி, முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற கவிதைகளைப் படிப்பவர்களுக்கு சுப்பையா என்ற கவிஞன் ஒரு அனுபவமாகவே இருப்பார்.

திருவனந்தபுரம்
di 30-3-1975