
வழக்கம் போல் ஜாகிங் கிளம்பினேன். பாதி தூரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு ஆசாமி என்னைக் கடந்து ஓட்டமும் நடையுமாய் கையைக் காலை இடுப்பை ஆட்டியபடி வேகமாய் சென்றார். அவ்வளவு தான். என் ஆணவம் படையெடுத்து ஆடத் தொடங்கியது. நான் மட்டும் இளிச்சவாயனா என்ன? ஒரு பத்து நிமிடம் அவரைப் போன்றே செய்து அவரைக் கடக்க முயன்றேன். என்னை மட்டம் தட்டத்தான் அவர் நடக்கிறார் என்று நினைத்தேன். எங்கிருந்தோ ஒரு போட்டியாளர் எனக்கு உருவாகி விட்டார். அவரை விடுவதா என்று வேகமாய் பாய்ந்தேன். என்ன வேகம் எடுத்தும் அவரை நான் கடக்க முடியவில்லை. அவரோ என்னை சீண்டுவதாகத் தெரியவில்லை. நடந்தபடி இருந்தார். என் போட்டியாளரை நான் வென்றே ஆகவேண்டும் என்று முடிவுகட்டி மூச்சைப் பிடித்து நடந்தேன். வழியில் கல் ஒன்று குத்தி கால் வலிக்க ஆரம்பித்தது. மூச்சு முட்டியது. நா வறண்டு `தண்ணீர் தண்ணீர்’ என்றது. தண்ணீராவது ஒன்றாவது? ஓடு.ஓடு. மூச்சு நிற்கும் வரை ஓடு. உயிர் உள்ளவரை ஓடு.
என்ன ஓடியும் அவர் என்னைக் கவனிக்கவில்லை. நான் அவரைத் தாண்டவும் முடியவில்லை. அவரும் வெகு தூரம் சென்று விட்டார். அப்போது தான் ஒன்றைக் கவனித்தேன். ஒவ்வொரு அடியையும் அனுபவித்து அவர் ஆனந்தமாக நடந்தார். சீரான அடிகள். முகத்தில் மாறாத மலர்ச்சி. ஒரே ரிதத்தில் மூச்சு. எல்லாவற்றிற்கும் மேல் அவர் யாருக்கும் போட்டியாளர் இல்லை. அமைதியாக நடந்தார். அனுபவித்து நடந்தார்.
அவரை போட்டியாக பாவித்து நான் காலை உடைத்துக்கொண்டது, ரத்தக் கொதிப்பை அதிகம் பெற்றது தான் மிச்சம். ரசனையைக் கோட்டை விட்டு விட்டு தண்டனை பெற்றது தான் மிச்சம். வாசகர்களே, வெறுமனே ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவியுங்கள். ஏற்றம் அதுவாகவே அமையும்.
