
ஜனவரி 26, 2022 – புதுடில்லி
குர்மித் தன் பீரோவிலிருந்து ஓர் காவி நிற கதர் புடவையை எடுத்து உடுத்துகிறார், பின்பு அதன் லாக்கரில் இருந்து மிகவும் நுணுக்கமான வேலைபாடு உடைய ஓர் நகைப்பெட்டியை எடுத்து பிரிக்கிறார். நாமும் உள்ளிருக்கும் விலையுயர்ந்த நகையை காண ஆவலாக அந்த பெட்டியை நோக்குகிறோம். உள்ளே இருந்தது மிகவும் பழமையான, காகிதத்தில் ஆன இந்திய தேசியக் கொடி . தொட்டால் கிழிந்து விடும் நிலையில் இருந்த அந்தக் கொடியை பத்திரமாக லாமினேட் செய்து பின் போட்டு வைத்திருந்தார் அவர் . அதனை எடுத்து கர்வத்துடன் தனது நெஞ்சிற்கு அருகில் குத்திக்கொண்டார். அதனை கண்ணாடியில் பார்த்த வண்ணம் எங்கோ சிந்தனையில் ஆழ்ந்த அவரது கண்கள் கலங்கியிருந்தந்து. நமது புண்ணிய பாரத தேசத்தின் வீரத் தாய் என்பதால் அந்த நீர் திவலைகளை வெளியே விழா வண்ணம் துடைத்துக்கொள்கிறார்.
“கெளம்பியாச்சா? பரேடுக்கு லேட் ஆகுது, குழந்தை ரஃபேல் விமானத்தை இயக்கும் காட்சிய பார்க்கணும் இல்லையா?” என்று அழைத்தார் அர்ஜூன் சிங். இருவரும் பாரத பிரதமர் கொடியேற்றும் காட்சியையும் , ராஜபாதையில் நடக்கவிருக்கும் எழுபத்தி மூன்றாவது குடியரசு தின அணிவகுப்பையும் காண ஆவலாகச் சென்றனர்.
டிசம்பர் 31, 1999: குஜராத்
“ கடத்தப்பட்ட இந்திய பயணியர் விமானம் ஐ சி 814 இல் பிணைக் கைதிகளாக சிக்கிய 155 இந்திய பிரஜைகளும் இன்று ஆப்கனிஸ்தான் நாட்டு காந்தகர் பகுதியில் இருந்து பத்திரமாக மீட்க்கப்பட்டனர். தீவிரவாத அமைப்பு ஹர்கத் – உல் – முஜாகிதின் அமைப்பு இந்த கடத்தலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்திய அரசுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த ஏழு நாள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், இந்தியாவில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த மூன்று தீவிரவாதிகள் – முஷ்தக் அஹமத் ஜர்கார், அகமது ஓமர் சையத் ஷேக் மற்றும் மசூத் அஜார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் விளைவாக இந்திய பிணைக் கைதிகளை அவர்கள் விடுவித்தனர்,” என்று தூர்தர்ஷன் அலைவரிசையில் செய்தி வாசிப்பாளர் தெரிவிக்க குர்மித்துக்கு கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
“என்ன முட்டாள்தனமான முடிவு இது? நம்ம தேசம் தானே பெரிசு! 155 பேருக்காக நம்ம நாட்டோட பாதுகாப்ப விலைபேசலாமா? உலக நாடுகள் மத்தியில எப்படி இந்தியாவுக்கு மதிப்பு ஏற்படும்?” என்று கணவர் அர்ஜுன் சிங்கிடம் தன ஆதங்கத்தை வெளிப் படுத்தினார் குர்மித்.
“குர்மித் இதெல்லாம் நீ நினைக்கற அளவுக்கு சுலபமான முடிவில்ல, பல தலைவர்கள், அதிகாரிகள் நிபுணர்கள் எல்லாம் சேர்ந்து தான் எடுத்திருப்பாங்க… உனக்கே இவ்வளவு கோவம் வரும்போது நம்ம பிரதம மந்திரிக்கு வராதா என்ன?”
“நா மட்டும் இந்திய பிரதம மந்திரியா இருந்திருந்தேனா… நம்ம இராணுவத்த வச்சு ஒரு பெரும் கடல் மற்றும் வான் வெளி தாக்குதல் கடத்தல்காரர்கள் மேல நடத்தி, 155 பேரோட உயிர் போனாலும் பரவால்ல, என் நாட்ட அடிபணிய விட்டுருக்க மாட்டேன். அந்த மாதிரி செஞ்சா பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் நம்மை சுற்றியுள்ள மற்ற தேசங்கங்களுக்கும் இந்தியா மேல ஒரு மதிப்பு வந்திருக்கும்…” என்று போர் முரசை கொட்டினார் குர்மித்.
“ஹ… ஹ… ஹா… நீ எப்போதும் இப்படி தான் உணர்ச்சி வசப்பட்டு பேசுவ… அங்க பிணைக் கைதிகளா இருக்குற இந்தியர்களை மீட்க அவங்க உறவுகள் இங்க எவ்வளவு பிரச்னை பண்ணறாங்க? உன் கொழந்தை அங்க இருந்தான்னா நீ கூட இப்படி பேச மாட்ட! இந்தியால இருக்கும் அநேக மக்கள் , நாம போர் தொடுத்தா சர்வாதிகாரமுன்னு சொல்லுவாங்க…”
“ அது தான் நம்ம நாட்டுல உள்ள பிரச்னையே… சுதந்திரம் என்கிற பேருல நாம எதை பத்தியும் கவலை படறதில்ல, அங்க எல்லையில நிக்குற இராணுவ வீரர்களும் இந்தியர்கள் தானே? அவங்க இறந்தா நாம ஏன் கோபப்படறதில்ல? அவர்களுக்கு மட்டும் தான் தேசப்பற்று இருக்கணுமா? ஒவ்வொரு இந்தியர் மனதிலும் அந்த எண்ணம் இருக்கணும். நம்ம சின்ன வயசுலயே குழந்தைகளுக்கு கூட தேசத்தை காட்டிலும் உன் உயிர் பெருசில்ல என்கிற விஷயத்த வலுவா சொல்லித்தரணும். என் பையன் கோவிந்து அந்த ஃபிளைட்ல இருந்தா, அவன் உயிர் போனாலும் பரவால்ல, தீவிரவாதிகளை விடுதலை பண்ணாதீங்கன்னு நா போராடி இருப்பேன்,” என்று உணர்ச்சி மிக்க பேசினார் குர்மித்.
“ நா செத்தா பரவால்லியா அம்மா? நீ வருத்தப்படமாட்டியா?” என்று பயத்துடன் கேட்டான் அருகில் இருந்த ஏழு வயது கோவிந்து.
“அப்படி இல்ல டா கண்ணு, ஆனா, நம்ம நாட்டுல 100 கோடி பேரு இருக்காங்க, அவங்க பாதுகாப்ப கருதும் போது நம்ம உயிர நம்ம கொடுக்கலாம் நம்ம தேசத்துக்காக… அம்மாவுக்கு வருத்தமா தான் இருக்கும்… ஆனா நம்ம தேசத்தோட நலனுக்காக நீ இறந்து போனா நா ரொம்ப பெருமை படுவேன்,” என்று கூறி கோவிந்தை அணைத்துக் கொண்டாள் குர்மித்.
“ நா மிலிட்டரில சேரப்போறேன் மா… அப்போ தானே நம்ம நாட்டுக்காக நான் பாடுபடலாம்… உனக்கும் அது ஹேப்பி தானே?”
“கண்டிப்பா ! அதுல என்ன சந்தேகம்? நீ இந்திய இராணுவத்தோட சீருடை போட்டுகிட்டு கம்பீரமா நடந்து வந்தா, அம்மா உனக்கு சல்யூட் அடிப்பேன்…” என்று கூறி கோவிந்தை பார்த்து சல்யூட் அடித்தார் குர்மித்.
அன்று நடந்த சம்பாஷனை கோவிந்து மனதில் பெரும் உத்வேகத்தை அளித்தது. சதா சர்வ காலமும் இந்திய இராணுவத்தைப் பற்றியே அவன் நினைத்துக் கொண்டிருந்தான். பாரத தலைவர்கள் பற்றி அமர் சித்ரா கதைகள் படிப்பது, தேசிய சின்னங்களைப் பற்றி தெரிந்து கொள்வது என்று மிகவும் முனைப்பாக மாறினான் கோவிந்து. தேசியம் என்ற விதை அவன் மனதில் வேரூன்றியது.
ஜனவரி 26, 2022 – புதுடில்லி
இராஜபாதையில் நடந்த பல்வேறு அணிவகுப்புகள் அங்கு கூடியிருந்த இந்தியர்களையும், பன்னாட்டு விருந்தினர்களையும் வெகுவாக கவர்ந்தன. தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் பாடல்களுக்கு மூவர்ண சீருடை அணிந்து சிறுவர் சிறுமியர் கோலாகலமாக ஆடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு மாநிலமும் அதன் சிறப்புகளை வெளிப்படுத்தி வாகனங்களில் ஊர்வலம் சென்றன. குர்மித்தும், அர்ஜுன் சிங்கும் இந்திய இராணுவத்தின் அணிவகுப்பை எதிர்நோக்கி ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தனர். தரைப்படை அணிவகுப்பு முடிந்து, விமானப் படை சாகசங்கள் நிகழ்த்திய போது, வானத்தை அன்னாந்து பார்த்து வாயடைத்து போனார்கள் இருவரும். அதுவும் போர் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ரஃபேல் விமானத்தை அவர்கள் குழந்தை ஓட்டியதைப் பார்த்த போது அவர்கள் மெய் சிலிர்த்தனர்.
அணிவகுப்பு முடிந்து, “விமான லெப்டினன்ட் தீப்தி சிங்,” என்று வர்ணனையாளர் முழங்கிய போது, தீப்தி வீர நடை போட்டு பாரத பிரதமரிடமிருந்து பதக்கத்தையும், சான்றிதழையும் கர்வமாக பெற்றுக்கொண்டாள். இதனைக் கண்ட குர்மித்தும், அர்ஜூனும் தங்கள் மகளைப் பார்த்து எழுந்து நின்று சல்யூட் அடித்தனர். குர்மித்தின் வலது கை அவளையும் அறியாது அவள் நெஞ்சில் வீற்றிருந்த தேசியக் கொடியை வாஞ்சையுடன் தீண்டியது.
ஜனவரி 26, 2001 – குஜராத்
குடியரசு தினத்தன்று காலை கோவிந்து உற்சாகமாக எழுந்தான், “அம்மா, இன்னிக்கு ரிபப்ளிக் டே, நா ஸ்கூல்ல பகத் சிங் பத்தி பேசப் போறேன், “ என்று பெருமையோடு கூறி அந்த உரையை மீண்டும் குர்மித்துக்கு சொல்லிக் காண்பித்தான்.
“கலக்கற கோவிந்து, ஜெய் ஹிந்த்! பயப்படாம சொல்லு,” என்று கூறி அவனுக்கு கதர் குர்தா அணிவித்து, அவன் சிகையை அலங்கரித்து, அவன் சிவந்த கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து வழியனுப்பினார் குர்மித்.
“ நா மார்கெட்டுக்குக் போறேங்க, நீங்க கோவிந்த ஸ்கூல்ல விட்டுட்டு என்ன கூட்டிக்கறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே, குழந்தை தீப்தியை தூக்கிக்கொண்டு அவர் நடையை கட்ட, தனது ஸ்கூட்டரில் கோவிந்தை அழைத்துக் கொண்டு அர்ஜுன் புறப்பட்டார்.
காலை, சுமார் 8: 45 மணியலவில் குர்மித் அவள் நின்றிருந்த தரைப் பகுதி பெரும் ஆட்டத்தை கண்டதை உணர்ந்தார். என்ன நடந்தது என்று அவர் சுதாரிப்பதற்குள் அருகில் இருந்த பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின…. அர்ஜுனது கண்களை கவலையுடன் நோக்கிய குர்மித், பீதியுடன் பள்ளிக் கட்டிடத்தை நோக்கினாள், அங்கிருந்த கட்டிடம் அவள் கண்ணுக்கு புலப்படவில்லை , மாறாக பெரும் தூசி படலம் அங்கிருந்து கிளம்பியது. எங்கும் அழுகையும், குமுறலும், குழப்பமும் அந்த புஜ் நகரத்தை சூழ்ந்தது.
இருவரும் பள்ளி வளாகத்தை நோக்கி ஓடினர், அங்கு அவர்கள் கண்ட காட்சிகள்…. இன்று வரை இருவரையும் உறங்கவிடாமல் படுத்தும் கோரக்காட்சிகள். பற்பல கனவுகளை மனதில் சுமந்து பள்ளிக்கு சென்றிருந்த நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கிடந்தனர். அங்கு கூடியிருந்த மக்களுடன் இணைந்து தங்கள் கைகளை உபகரணங்களாக மாற்றி அங்கு சிக்கிருந்த குழந்தைகளை மீட்க இருவரும் வெறிகொண்டு உழைத்தனர். பித்து பிடித்தவர்களைப் போல மதியம் வரை உழைத்தவர்கள் நின்றது அவர்கள் ஆருயிர் மைந்தன் கோவிந்தின் உயிரற்ற உடலைப் பார்த்தபோது தான்.
அவனது முகத்தை பார்க்க தைரியமில்லாமல் அவனது மலர் கரங்களை தொட்டார் குர்மித். “என்ன இவனது உள்ளங்கையை ஏன் இப்படி இறுக்கமாக மூடியுள்ளான்?” என்று நினைத்து அந்த கைகளை பிரித்துப் பார்த்தார். அங்கே இருந்தது அவன் சட்டையில் அணிந்திருந்த தேசியக் கொடி. குண்டூசி அவன் கையை கிழித்த போதிலும், அந்த காகித கொடியை அவன் பாதுகாக்க முயன்று தனது இறுதி மூச்சை விட்டிருக்கிறான் கோவிந்து. அந்த நொடி தன் வாழ்நாளில் என்றும் அழுதிடாத வண்ணம் குர்மித்தும், அர்ஜூனும் சேர்ந்து அலறி அடித்துக் கொண்டு அழுதனர். அப்போது, “அழாதே அம்மா, அண்ணா இல்லாட்டி என்ன? நா இந்த தேசத்துக்காக பாடுபடுவேன்,” என்பது போல குர்மித் முதுகில் கட்டியிருந்த தீப்தியின் பிஞ்சுக் கைகள் வந்து அவரது கண்ணீரை துடைத்தது.
ஜெய் ஹிந்த்!
பின் குறிப்பு: விமான லெப்டினன்ட் ஷிவாங்கி சிங், இந்திய இராணுவத்தின் 36 ரஃபேல் விமானங்களில் ஒன்றை இயக்குகிறார். இந்தியாவில் அந்த விமானத்தை இயக்கும் முதல் பெண் வீரங்கனையும் இவர் தான்.
