ஜெ.பாஸ்கரன்.

கொஞ்சம் இருளோவென இருந்தது அந்த சந்து – சிறுநீர் வாடை துல்லியமாக விரவியிருந்தது.
அவசரமாக வலது கையிடுக்கில் சுருட்டி வைத்திருந்த மஞ்சள் துணிப் பையுடன், நெஞ்சு ‘திக் திக்’ கென அடிக்க, சுற்று முற்றும் பார்த்தபடி நடந்து வந்துகொண்டிருந்தேன். கேடிஆர் தங்க மாளிகையில் வாங்கிய ஒரு ஜோடி தங்க வளையல்களும், ஒரு சின்ன வெள்ளிப் பேலாவும் ரெக்ஸின் பைக்குள் போட்டு மஞ்சள் பைக்குள் வைத்திருந்தேன். திருட்டு பயம், நெஞ்சில் ‘திக் திக்’…
முரட்டு மீசையுடன், கையில் பளபளக்கும் பிச்சுவாக் கத்தியுடன் திடீரென என் முன்னால் குதித்தவன், ‘பெர்சு, கத்தாதே.. கத்தினா குத்திடுவேன்’ என்று சொல்லி வாணலியில் வறுப்பதுபோல் கத்தியை முன்னும் பின்னும் அசைத்தான்.
“ஆ… குத்தினா கத்திடுவேன்” என்றபடி மஞ்சள் பையை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.
“நகைக் கடைலேர்ந்து ஒன்ன ஃபாலோ பண்ணிக்கினே வரேன்.. கைல பைய வெச்சிக்கினு, அங்க நிக்கிறே, இங்கே நிக்கிறே, காய் வாங்கறே … இன்னா எங்க மேல இருந்த பயம் பூடிச்சா?”
“இல்லைங்க தம்பி…”
“தம்பியா..”
“சரி…சாரி… அண்ணே. பயமிருக்குது நெறைய்ய; இல்லேன்னா இப்படி நடுங்குவேனா?” கையை நடுங்கிக் காட்டினேன்!
“அந்தக் கைலே என்னா கட்டப் பையி?”
ஐ, மஞ்சப் பையக் கண்டுக்கவே இல்லையே என்று மகிழ்ந்து, “அண்ணே பைலெ கொஞ்சம் காய்கறி வாங்கினது இருக்குது”.
“இன்னா காய்கறி?”
கேட்குமுன், பையைப் பிரித்துக் காட்டினேன். கத்தியை முகத்தருகே காட்டிவிட்டு, காய்கறிப் பையை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான் திருடன்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று மஞ்சள் பையை ஜாக்கிரதையாக எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மஞ்சள் பையை வாங்கி நகைகளைப் பார்த்துவிட்டு, சோபா மேல் வைத்தாள் மனைவி. காய்கறிப் பையைத் தேடினாள்.
வழியில் நடந்த விபரங்களை நான் விரிவாகச் சொல்ல, அலறினாள் மனைவி.
‘அடப் பாவி மனுஷா. ஒரு கால் கிலோ தக்காளியையும், கால் கிலோ வெங்காயத்தையும் ஜாக்கிரதையா வீட்டுக்குக் கொண்டு வர முடியலே – விக்கிற வெலையிலே இப்டி தார வாத்துட்டு வந்து நிக்கிறீங்களே’ என்று கடிந்துகொண்டாள்.
மஞ்சள் பை சோபாவின் மேல் கேட்பாரற்று கிடந்தது!!

தங்கமா, தக்காளி யா என்றால் பெண்மணி கள் இரண்டாவதைத்தான் விரும்புவார்கள் போலும்! அதனால் தான் தங்கம் விலை இறங்கிக்கொண்டே வருகிறது!
நல்ல கதை போங்கள்!
ஹா ஹா ஹா ஹா.
ரெண்டும் இப்ப ஒண்ணு! த க்காளி ங்கம்!