-கு. மா. பா. திருநாவுக்கரசு

எப்போதும் போல் கருக்கலுக்கு முன் உறக்கம் களைந்து எழுந்துகொண்டார் தம்புராசு. மீன்பிடிப்பதற்குத் தேவையான வலை, அகண்டவாய் பாத்திரம், நைலான் கயிற்றுக் கட்டு எல்லாவற்றையும் அவருடைய பழைய சைக்கிளின் முன்புற கைப்பிடியில் மாட்டிக் கொண்டார். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்வரத்து அதிகமாக இருந்தது. கொட்டகையிட்ட அவரின் மண்வீட்டிற்குப் பின்புறம் தான் ஆறு சலசலவென ஓடிக்கொண்டிருக்கும். அரைகாதம் கிழக்குப் புறமாக நடந்தால் அய்யனார்குடி ஊர்ச்சுடுகாடு வரும், அதையும் கடந்து, ஒரு எட்டு நடந்தால் அந்தக்கால மதகுமேடை இருக்கும். நீர்வரத்து காலத்தில் அங்கு கெளுத்தி, கெண்டை, நெத்திலி வகை மீன்கள் துள்ளி விளையாடும். தம்புராசு கைவலை விரித்தே தேவையான மீன்களை பிடித்து விடுவார். பழக்கமாகிவிட்ட சுருட்டுகள், பீடிகள் புகைக்காமல் அவர் பணிகளைத் துவங்கமாட்டார். வாயில் சுருட்டு ஒன்றைக் கவ்விக் கொண்டு கிழக்குப் புறமாக சைக்கிளை மிதித்தார்.
தம்புராசுக்கு வயது எழுபதைக் கடந்து விட்டதால் வயதானவர்களுக்குரிய மறதி நோய் அவருக்கு அதிகமாகிவிட்டது. பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து சொல்ல முடிந்த அவரால் அண்மையில் நடந்த நிகழ்வுகள் ஏதும் நினைவில் இருப்பதில்லை. சுடுகாட்டருகே அந்த இருண்ட வேளையில் எதிரே வந்த நல்லான் “எங்க பெரிசு… கருக்கல்ல கிளம்பிட்ட..?” என்று குசலம் விசாரித்தான். “வலை மீன் புடிக்கப் போறேன்… வர்றியா கூட…” என்று அவனையும் அழைத்தார். “ஓட்டு… போலாம்..!” என்று சைக்கிளின் பின்னால் தாவி ஏறிக் கொண்டான் நல்லான். “என்ன.. இந்தக் கனம் கனக்கிற..!” என்று ஆட்டங்கண்ட சைக்கிளைப் பிடித்து நிதானமாக மிதிக்கத் தொடங்கினார். “எனக்கு ஒரு சுருட்டு இருந்தால் கொடேன்..!” என்று விரலை நீட்டினான் நல்லான். அவர் தன் இடுப்பில் சொருகியிருந்த சுருட்டையும், தீப்பெட்டியும் எடுத்துக் கொடுத்ததும், பற்ற வைத்துக் கொண்டான் அவன்.
மதகு ஓரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு, வலையை எடுத்துச்சென்று ஆற்றில் விரித்தார்; அந்த இருட்டிலும் தெளிவாக வலையைக் கட்டினார் தம்புராசு. “ஆத்து மேட்டுல.. ஒரு பாட்டு கேட்குது… ஆடுங் காத்துல.. கீத்துல.. தாளம் போட்டு… ஆத்து மேட்டுல…” நல்லான் பாடி கிட்டே வந்து அவர் பின்னாடி உட்கார்ந்தான். சுருட்டைப் புகைத்தபடி இருவரும் ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். தம்புராசு வலையில் விழுந்த மீன்களை லாவகமாகப் பிடித்து தான் கொண்டுவந்த பெரிய பாத்திரத்தில் சேகரிக்கத் தொடங்கினார். முதுகுப் புறமாக அமர்ந்திருந்த நல்லானை திடீரென்று காணவில்லை. ‘காலைக் கடன் முடிக்கப் போயிருப்பான்’ என்று எண்ணிக் கொண்டார். “மீனு… நல்ல ருசியா இருக்கு இல்லை…” என்ற நல்லானின் குரல் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பினார் தம்புராசு. அங்கு நல்லானின் உருவம் தென்படவில்லை. பத்து மீன்களுக்கு மேல் பிடித்துப்போட்ட பாத்திரத்தில் ஒரு மீன் கூட இல்லை. பூனைக் கடித்துப் போட்டதுபோல் ஓரிரண்டு மீனின் தலைகள் இரத்தத்தில் குதறிக் கிடந்தன. கருப்பு காத்து எதற்குமே அசராத தைரியசாலியான தம்புராசு சுற்றும் முற்றும் சற்று மிரண்டு பார்த்தார். இருட்டில் என்ன நடந்தது என்று அவருக்குப் புரியவில்லை. மீண்டும் ஒரு சுருட்டை எடுத்துப் பற்றவைத்து புகைத்தார். கண்கள் மட்டும் நல்லானைத் தேடிய வண்ணம் அலை பாய்ந்தன.
எதிரே ஜடாமுடியுடன் மாந்திரீகர் மாடசாமி காலைக் கடன் கழிக்க மதகுமேடையேறி ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருந்தார். தம்புராசு அவரைக் கண்டதும் “எதிரே நல்லானைப் பாத்தீங்களா… சாமி?” என்று விசாரித்தார். “நத்தம் நல்லானையா கேட்கிறீங்க? அவன் தான்… ராவுத்தர் கொலை கேசுல பொய் சாட்சி சொன்னது தெரிஞ்சதும்… சித்திரை மாசம் தூக்கு மாட்டி செத்துப்போயிட்டானே..! ” என்று கனத்த குரலில் எடுத்துச் சொன்னபோது தான் இவருக்கும் நினைவுக்கு வந்து அப்படியே உறைந்து போனார் தம்புராசு.
