
மேக மூட்டமாக இருந்தது. இரண்டு நாட்களாக விட்டு விட்டுத் தூறல் வேறு போட்டுக்கொண்டிருந்தது. வானிலை அறிக்கை ‘அடுத்த 48 மணி நேரத்தில் அதிக அல்லது மிக அதிக கன மழை பெய்யக்கூடும் – பாண்டிச்சேரி, கடலூர், மயிலாடுதுறை போன்ற இடங்களில் மழைக்கு அதிக வாய்ப்பு’ என்றது.

நவம்பர் 12 -13 ஆம் தேதி மாயவரத்தில் – மயிலாடுதுறையில்தான் – காவிரி ஸ்நானம் விசேஷம் என்பதால், காரில் சாரதியுடன் செல்லலாம் எனத் தீர்மானித்தோம். துலா மாதத்தில் (ஐப்பசி) காவிரியில், தன் கறைகளைப் போக்கிக்கொள்ள கங்கையே வந்து குளிப்பதாக ஐதீகம். அதனால் காவிரியில் துலா ஸ்நானம் விசேஷம்! 12 ஆம் தேதி போகிற வழியில் தில்லையில் ஆனந்தக் கூத்தனையும் தரிசிக்கலாம்; கிருஷ்ணா விலாஸில் அரிசி உப்புமாவும் சாப்பிடலாம்; 13 ஆம் தேதி காலை துலாக் கட்டத்தில காவிரி ஸ்நானம், அரயபுரம் அக்ரகாரத்தில் டிபனோ, சாப்பாடோ சாப்பிட்டுத் திரும்பும் வழியில் பாண்டிச்சேரி ஆசிரமம் பார்த்து, சென்னை திரும்பலாம் எனப் போட்டிருந்த திட்டம் வானிலை அறிக்கையால் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது!

12ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை மழையும் இல்லை, காற்றும் இல்லை. விஜாரித்ததில், சிதம்பரத்திலும், மயிலாடுதுறையிலும் வெயில் என்று பதில் வந்தது. மிக விரைவாக முடிவெடுத்து, அவசர அவசரமாக இரண்டு நாளுக்கான உடைகளுடன், சாரதியுடன் இரண்டே கால் மணிக்கு கிளம்பிவிட்டோம். வானத்தின் தென் மேற்குப் பகுதியில் கருமேகங்கள் திரண்டிருந்தன. திண்டிவனம் தாண்டி பாண்டிச்சேரி செல்லும் வழியில் ஹாலிவுட் படங்களைப் போல, வானத்தில் மேகங்கள் திரண்டு, இருட்டிக்கொண்டு வந்தன. இடதுபுறம் தூறல்களுக்கிடையே மிகப் பெரிய வானவில்! கடலூர்ப் பகுதியில் மேகக்கூட்டம் அதிகமாக இருந்தது.

சிதம்பரம் செல்ல வலது புறம் திரும்பி, காரை சாலையின் இடது பக்க ஓரத்தில் நிறுத்தினோம் – ‘இந்த வெதருக்கு சூடா ஸ்பெஷல் வடையும், காப்பியும் சத்குருவில்…. ‘ சொல்லி முடிப்பதற்குள், உள்ளே சென்றுவிட்டோம். சூடான வடை, காப்பியுடன், குழிப்பணியாரம் கொசுறாகத் தின்று, வண்டியை எடுத்தோம். கடலூர் பிரிஜ் வரையில் வழக்கமான நெரிசல்; கடலூரிலிருந்து சிதம்பரம் வரை அருமையான சாலை, சாரதி 120 ல் வழுக்கிக்கொண்டு போனான். தில்லைக் காளி கோயில் வளைவுக்கு முன்னாலேயே சொந்த ஊர் வாசம், பள்ளிக்கூட நாட்களை நினைவுபடுத்தியது….
ஆருத்ராவில் அறையில் உடை மாற்றிக்கொண்டு, ஈரமான கருங்கல் தரையில் கவனமாகச் சென்றோம். இரண்டு காலங்களுக்கு இடைப்பட்ட நேரம். குறைவான கூட்டம். ஆனந்த நடராஜனின் தரிசனம்! ‘காண வேண்டாமோ..’ காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. சபையேறி, மிக அருகில் கற்பூர ஆரத்தி தரிசனம். இடதுபக்கம் சிவகாமி அம்மன், சற்று தள்ளி சுவர்ண பைரவர் தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தோம்! அப்படியே பிரதட்சிணமாக வந்து, பள்ளிகொண்டிருக்கும் கோவிந்தராஜனை சேவித்து, த்வஜஸ்தம்பம் சுற்றி, தூணில் தண்டாயுதபாணியை தரிசித்து, அருகில் ஊஞ்சலில் புண்டரீகவல்லித் தாயாரைச் சேவித்து வந்தோம். வெளியே மழைத் தூறலாக இருந்தது.
கிருஷ்ணா விலாசில் உப்புமா இல்லை – இட்டிலி, கொஸ்து முடித்து, மழையில் சுமாராக நனைந்து, அறைக்கு வந்துவிட்டோம்.
13 ஆம் தேதி விடியற்காலை ஐந்தரை மணிக்கு, காப்பி குடித்து, சிதம்பரம், சீர்காழி பைபாஸ் சாலையில் சென்று, மயிலாடுதுறை துலாக் கட்டம் சென்றோம். காவிரிக் கரையில், 20 அடி அகலத் தெரு – காவியும் வெள்ளையும் அடித்த வாசல், சட்டம் போட்ட ஓட்டு வீடு! தின்ணை, ரேழி, சிறிய முற்றம், மூன்று பக்க தாழ்வாரம், மரத்தில் மச்சு, அதில் மாடர்னாக ஃபேன், அதன் கீழே அழகிய ஊஞ்சல்! கொடுத்து வைத்தவர்கள், நினைத்தால், துண்டைக் கட்டிக்கொண்டு போய் காவிரியில் குதித்துக் குளிக்கலாம்! இன்னொரு காப்பி குடித்தோம். காவிரியில் முங்கி, முங்கி எழுந்தோம்….
எதிர்க் கரையில் இருபது பேருக்கும் குறைவாக குளித்துக்கொண்டிருந்தனர். காவிரியின் நடுவில் நந்தியிருக்கும் மண்டபம். கரைகளில் ஓட்டு வீடுகள், மரங்கள், தொலைவில் பாலம், மேகங்களுடன் காலை வானம் – ஓவியமாய் இருந்தது அன்றைய காலைக் காவிரி தரிசனம்! கரையில் ஒரு சிறிய சன்னதியில் காவிரி அம்மன், சற்று தள்ளி சிறிய விநாயகர் சன்னதி – துண்டி விநாயகர் – தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட விநாயகர் என்றார் உடன் வந்த உறவினர் – பார்த்து சிறிது நடந்து, காரில் கிளம்பினோம். இரண்டு கிமீ தள்ளி இருக்கும் சிறிய அழகிய அக்ரகாரம் ‘அரயபுரம்’ சென்றோம்.
சில வருடங்களுக்கு முன் இதே துலாக்கட்டத்தில், ஆழ்துளைக் கிணற்றில் காவிரி ஸ்நானம் செய்தது நினைவுக்கு வந்தது. கூடவே கிணற்றுக்குள் காவிரியும்! இம்முறை காவிரியின் துள்ளல் ஓட்டம், ‘நடந்தாய் வாழி காவேரி’ என்றது!
ஆஹா, என்ன அழகான அக்ரகார வீடும், சாப்பாடும்….
தொடரும்…

One Comment on “ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்!”
Comments are closed.