ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (2)

மேகத்துக்குள் மறைந்திருந்த சூரிய பகவானைப் பார்த்து, காவிரியில் முங்கியது மனதுக்குள் டிசம்பர் மாத பறங்கிப் பூ பூத்து விரிந்தது போல இருந்தது! (நில்லுங்கள் ராஜாவே, கவிதையெல்லாம் கிடையாது!). தூறலுடன் மயிலாடுதுறை தெருக்களில் செல்வது சுகமாக இருந்தது. பச்சைப் பசேலென்ற கீரைக் கட்டுகள், வாழைப் பூ, முருங்கை, வெண்டை தாங்கிய கூடைகளைத் தூக்கிய பெண்களின் நடையில் ஒரு நளினம் இருந்தது. ஒரு சில டீக்கடைகளைத் தவிர மற்றவை மூடிக்கிடந்தன.
அரயபுரம் ஓர் அழகான அக்ரகாரம். பத்து பதினைந்து வீடுகள், இரண்டு வரிசையில் எதிர் எதிராகப் பார்த்தபடி! அங்கங்கே பெயர்ந்த தார் சாலையின் மிச்சங்களுடன், மண் கலந்த அக்ரகாரத் தெரு. அன்று கூடுதல் போனஸாக, மண் வாசனை, மழையின் கொடை!
கலாவின் மன்னி வழியில் சொந்தம். கூடவே இருந்து துலா ஸ்நானம் செய்து வைத்து, அரயபுரம் அழைத்துவந்த சுமதிக்கு மயிலாடுதுறையும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும் அத்துப்படி! கிமீட்டருக்கு ஒரு கோயில் பற்றிய விவரணைகள் – சுவாரஸ்யமான மனுஷி!
சட்டமடித்த, திண்ணையுடன், ஓட்டு வீடுகள். நாங்கள் சென்ற வீடும் ஓட்டு வீடுதான். அழகிய வேலைப்பாட்டுடன் சட்டங்களினால் ஆன முகப்பு. கிரில் கேட்டைத் தாண்டினால், இடது புறம் சின்ன திண்ணை, வலது புறம் பத்து பேர் அமர்ந்து வெற்றிலை பாக்கு போடக்கூடிய இடம் – மெரூன் கலர் டைல்ஸில் பிங்க் நிற வட்டம், பூக்கள் என டிசைன் போட்ட கலைடாஸ்கோப் தரை! ரேழியைத் தாண்டினால் மூன்று பக்கமும் தாழ்வாரம், சார்பிறக்கிய ஓட்டுக் கூரை, நடுவில் அழகிய முற்றம். வெளிச்சம் வரக்கூடிய, மழைநீர் ஒழுகாத பிளாஸ்டிக் கூரை, இரண்டு சீலிங் ஃபேன், நடுவில் பொன்வண்ணச் சங்கிலிகளில் ஆடும் ஊஞ்சல்! முற்றத்தின் ஒன்றரை அடி சுவற்றில் காவி, வெள்ளைப் பட்டைகள்! இடைவெளி விட்டு அழகிய தூண்கள். சிறிது ஏமாந்தால், கண்ணயர்ந்துவிடும் அபாயம்!


நேர் எதிரில், தாழ்வாரத்தை ஒட்டிய ஆளோடி, ரெடாக்ஸைட் வண்ணத்திலேயே டைல்ஸ், நடுவில் பெரிய சுவாமி அலமாரி – நடுநாயகமாகத் தஞ்சாவூர் ஓவியத்தில் இராமர் பட்டாபிஷேகம், மற்றும் மற்ற சுவாமிகளின் படங்கள். செம்பருத்தி, அரளி, துளசி என தோட்டத்தில் பறித்த பூக்களின் மாலை, முத்துப்போல் ஆடாது எரிந்துகொண்டிருக்கும் எண்ணை விளக்குகள். மனதில் அமைதியும் சாநித்தியமும் தானாக வந்து அமர்ந்து கொள்ளும் அழகு!
ஹாலில் ஒரு சாய்வு நாற்காலி, அருகில் ஒரு சிறு படுக்கை, மூலையில் டிவி, ஒரு புறம் படுக்கையறை, எதிர்ப்புறம் ஸ்டோர்ஸ். கும்மோணம் அடுக்குகள், சம்புடங்கள் நேர்த்தியான அழகுடன் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வீட்டின் அடுத்த கட்டில் டைனிங் டேபிள், ஆறு நாற்காலிகள், ஒரு தொட்டி முற்றம்! தரையில் பதிக்கப்பட்டுள்ள அம்மி, கல் உரல், குழவிகள், அன்று காலை பறித்த வாழைப் பூக்கள் (பார்த்தாலே வாழைப்பூ உசிலியும், வாழைப்பூ வடையும் மனதில் நிழலாடுகின்றன!). சமையலறையைத் தாண்டி அடுத்த கட்டில், குளியல் அறைகள், கழிப்பறைகள் தனித்தனியாக, அதையும் தாண்டி கொல்லைப் புறம்….அட்டாச்சுடு பாத்ரூம் என்ற வீட்டுக்குள் கழிப்பறைகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட வீடு!
உள்ளுக்குள் எவ்வளவு நவீன வசதிகள் இருந்தாலும், பாரம்பரியம் மாறாத நம் கலாச்சார மிச்சங்கள் வசீகரிக்கவே செய்கின்றன. நகர சந்தடிகளிலிருந்து ஒதுங்கி, ஒரு வாரமாவது தங்கிவிட மாட்டோமா என்ற ஏக்கம் வந்தது உண்மை!
சுமதியின் அம்மா எண்பது ப்ளஸ் வயது. அமைதியும், சாந்தமும், புன்னகையுமாக ஆசீர்வதித்ததை மறக்க முடியாது. அந்தக் காலப் பெண்மணி. அருகில் அமர்ந்து, உணவு பரிமாறுவதை மேற்பார்வை! விருந்தினரைப் பாசாங்கில்லாமல் உபசரிக்கும் நேர்த்தி…. இந்த வயதிலும் அவர்களது நினைவாற்றல் வியக்க வைத்தது! தன் பாரம்பரிய வீட்டினையும், கலாச்சாரத்தையும் விடாமல், தனியாகவே இருக்கும் அவருக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்!
காலையில் பத்து மணிக்குத் தயாராகி விட்ட ‘லஞ்ச்’ பற்றி சொல்லியே ஆகவேண்டும். வாழை இலையில் சாப்பாடு. இளங்கீரை – முளைக்கீரை – சீரகம், தேங்காய் எல்லாம் அரைத்துவிட்ட, பெருங்காய வாசனையுடன் கீரை மசியல், நீளமான பாகற்காய் ‘ஸ்டஃப்ட் ஃப்ரை’ (1 – 1 1/2 இன்ச் நீளத்தில், உள்ளே விதைகளை எல்லாம் நீக்கி, எல்லாவித பருப்புகள், இன்ன பிற பொடிகள் எல்லாம் சேர்ந்த கலவையை உள்ளே அடைத்து, மிகக் குறைவான எண்ணையில் வறுத்தெடுக்கப்படும் பாகற்காய் ஸ்டஃப்ட் வஸ்துவுக்கு, சொத்து முழுவதையும் எழுதி வைக்கலாம்!), மாங்காய் ஊறுகாய், வடாம், சுண்டைக்காய் பிட்ளை, தக்காளி ரஸம், பசுந்தயிர் – சாப்பிட்ட பிறகு, மேலே நான்காவது பாராவில் குறிப்பிட்டுள்ள ஊஞ்சலின் பக்கம் போக கால்கள் இழுத்தாலும், மனம் கைக் கடியாரம் பார்த்து, தாழ்வாரத்திலேயே நின்றது!
அருகில் இருக்கும் (3 கிமீ கிழக்கே) குத்தாலம்தான் (குற்றாலம் அல்ல) எல்லாம் கிடைக்கும் டவுன். பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகள் என எல்லாமும் உள்ள டவுன்.
‘மேற்கே இரண்டு கிலோமீட்டர் சென்றால், அத்தி வரதர் – சீனிவாசப் பெருமாள் என்கிற வானமுட்டிப் பெருமாள் கோயிலுக்குச் சென்றுவிட்டுப் போகலாம் – அத்திமரத்தில் செதுக்கிய 14 அடி உயரப் பெருமாள்’ என்றார் சுமதி. சாரதியைப் பெருமாள் கோயிலுக்கு விடச் சொன்னோம்…… காஞ்சியில் அத்தி வரதரைத் தரிசிக்கப் பட்ட சிரமங்களை நினைத்துக்கொண்டேன்… இடது பக்கம் திரும்பி, குளத்தையும், ஆக்கிரமித்த வீடுகளையும் தாண்டினல், நேரே வானமுட்டிப்பெருமாள் திருக்கோயில்……

ஜெ.பாஸ்கரன்/துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! – விருட்சம் நாளிதழ்
தொடரும்.