ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்

  1. மாமியார் நாட்டுப்பெண்

இதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் – வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட – அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.
பெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.
“மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ
என்று பேசிவிடாதீர்கள்” என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.
ராஜமையர், “ஹும்.. ஹும்..” என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்” என்றான் சந்துரு.
அந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, “ரொம்ப நன்றாக இருக்கிறதே! கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா?” என்று கேட்டாள் பாட்டி.
இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ சரிக்கட்டி சமாளிக்கும் திறன் அவரிடந்தானே இருக்கிறது? அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்க்கிறார்களா? இவ்வாறு எண்ணித்தான் அவர் புன்னகை புரிந்திருக்க வேண்டும்.
ராஜமையர் காபி சாப்பிட்ட டவராவையும் டம்ளரையும் எடுத்துக்கொண்டு மங்களம், “ஒன்றுக்கும் உங்கப்பா வாயைத் திறக்கமாட்டார். வீடு பற்றி எரிந்தால்கூட, ‘அதென்ன புகைச்சல்?’ என்று கேட்கிறவராயிற்றே!” என்று கூறிக் கொண்டே விசுக்கென்று சமையற்கட்டிற்கு எழுந்து சென்று விட்டாள்.
அதற்கும் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ராஜமையர், “சீதா! அவர்கள் எல்லோரும் வருவதற்கு மூன்று மணி ஆகும். அதற்குள் சாவித்திரியின் அலங்காரமெல்லாம் முடிந்து விடும் அல்லவா?” என்று மகளைக் கூப்பிட்டு விசாரித்தார்.
சீதா ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்தவள், தகப்பனார் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் இரு கரங்களிலும் நான்கு பட்டுப் புடைவைகளை வாரி எடுத்துக் கொண்டு அவர் கேட்டதற்குத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அந்த வீட்டுக் காமரா அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அந்த அறைக்குள் சாவித்திரி, பீரோவிலிருக்கும் ஒவ்வொரு புடைவையாக எடுத்து மத்தியான்னம் பிள்ளை வீட்டார் வரும்போது எதை உடுத்துக் கொண்டால் அழகாக இருக்கும் என்று ஆராய்வதில் முகாந்திருந்தாள். அவளிடமிருந்த ஏழெட்டுப் பட்டுப் புடைவைகளில் ஒன்றாவது அவள் மனத்துக்குப் பிடித்ததாக இல்லை. கடையிலிருந்து வாங்கும்போது என்னவோ அந்தப் புடைவைகளை ஆசையுடன் தான் வாங்கிக்கொண்டாள். நாழிக்கொரு மோஸ்தரும், வேளைக் கொகு அலங்காரமுமாக மாறி மாறி வரும் புடைவை ரகங்களைப் பார்த்தபோது அந்தப் புடைவைகள் அவருக்குப் பழைய ரகங்களாகத் தோற்றமளித்தன. சலிப்புடன் அவள் பீரோவைப் பட்டென்று மூடும்போது, சீதா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கையிலிருந்த புடைவைகளைச் சோபாவில் போட்டு விட்டு, “எதையாவது சீக்கிரம் நிச்சயம் பண்ணு சாவித்திரி. எனக்குக் கொள்ளை வேலை காத்துக் கிடக்கிறது” என்று கூறினாள் தமக்கையிடம்.
சாவித்திரியும் சீதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் குணத்தில் ஒருவருக்கொருவர் அதிக வித்தியாசத்தைப் படைத்தவர்கள். எவ்வளவு ஆடை, ஆபரணங்கள் இருந்தாலும் சாவித்திரியின் மனம், போதும் என்று ஒப்புக் கொள்ளாது. சீதாவுக்கோ சாதாரண வாயில் புடைவை இருந்தால் போதும். இருவருக்கும் பெற்றோர்கள் ஒரே மாதிரி ஆடை, ஆபரணங்கள் வாங்கி அளித்திருந்தாலும் சீதாவின் பொருள்கள் தாம் சாவித்திரிக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.
சாவித்திரி, சோபாவில் கிடந்த புடைவைகளைப் புரட்டிப் பார்த்தாள். தன்னுடைய-வையாக இருந்தால் நலங்கிவிடுமே, மடிப்புக் கலைந்துவிடுமே என்று யோசனை செய்திருப்பாள். சீதாவின் புடைவைகள் தாமே அவைகள்! அவைகள் எப்படிப் போனால் என்ன! புடைவைகளை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு, “ஏண்டீ, இந்தக் கனகாம்பரக் கலர் ‘கிரேப்’ புடைவையை உடுத்துக் கொள்கிறேனே. நீயும் இதைத்தான் ’செலக்ட்’ பண்ணி இருக்கிறாயா என்ன?” என்று நிஷ்டுரமாகக் கேட்டாள் சீதாவைப் பார்த்துச் சாவித்திரி.
“ஹும்.. ஹும்.. பெண் பார்க்க வருவது உன்னையே தவிர என்னை அல்ல சாவித்திரி! உனக்குத்தான் தெரியுமே, எனக்கு இந்தப் பகட்டான புடைவை யெல்லாம் பிடிக்காது என்று”.– சாவதானமாகப் பதிலளித்த சீதா, தான் பொறுக்கி எடுத்த புடைவையை வைத்துவிட்டு மற்றவைகளைத் திரும்பவும் பீரோவில் அடுக்கி வைப்பதற்கென்று தன்னுடைய அறைக்குத் திரும்பினாள்,
இதற்குள்ளாகச் சமையலறையில் சிறு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது என்று கூறலாம். ஜப மாலையை உருட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த பாட்டி, தன் நாட்டுப் பெண் மங்களத்தைப் பார்த்துத் திடீரென்று ஒரு கேள்வி கேட்டாள்.
“என்ன உயர்வு என்று இந்த வரனை நிச்சயம் பண்ணி இருக்கிறீர்கள்? பிள்ளைக்கு வேலை இல்லையாமே! சொத்து இருந்து விட்டால் போதுமா? புருஷனாய், லக்ஷணமாய், வேலை பார்க்காமல், பொழுது விடிந்து பொழுதுபோனால் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டு! கேட்கச் சகிக்கவில்லையே!” என்று பாட்டி கோபத்துடன் கூறிவிட்டு, வேகமாக ஜபமாலையை உருட்டினாள்.
மங்களத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அந்த நாளில் ராஜமையர் உத்தியோகம் பண்ணிக் கிழித்தது அவளுக்குத் தெரிந்ததுதானே? இருந்த வேலையையும் ஒரே நாளில், ‘சத்தியாக்கிரகம் பண்ணி ஜெயிலுக்குப் போகிறேன்’ என்று ஆரம்பித்து, ராஜிநாமா செய்தவர் ஆயிற்றே! பிறகு சீதா பிறக்கிறவரைக்கும் பத்திரிகைகளுக்கு விஷய தானம் செய்தே குடும்பம் நடத்தவில்லையா? மாமியாருக்கு இதெல்லாம் மறந்து போனதைப்பற்றி மங்களத்துக்குக் கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டன. அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த நெய்யில் முந்திரிப் பருப்பையும் திராக்ஷையையும் போட்டு வறுத்துக்கொண்டே, மாமியாருக்குப் பதில் கூறாமல் இருந்தாள் மங்களம்.
உருட்டிக் கொண்டிருந்த ஜபமாலையைச் சம்புடத்தில் வைத்துவிட்டு. இரண்டு உத்தரணி ஜலத்தை ‘ஆசமனீயம்’ செய்தாள் பாட்டி. பிறகு, “கூடப் பிறந்தவர்கள் எத்தனை பேராம்?” என்று கேட்டாள் நாட்டுப் பெண்ணை.
இனிமேலும் பதில் கூறாமல் இருக்க முடியாது என்று தெரிந்து. “ஒரே பிள்ளை தான்; பிக்கல், பிடுங்கல் ஒன்றும் கிடையாது. தகப்பனார் வேண்டியது சம்பாதித்து வைத்திருக்கிறார். பிள்ளைக்குச் சங்கீதம் என்றால் ரொம்ப ஆசையாம். சீக்கிரத்திலேயே சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பிக்கப் போகிறானாம்!” என்றாள் மங்களம்.
“பாட்டுப் பள்ளிக்கூடம் வைப்பது ஒரு உத்தியோகமா! போகிறதே இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புத்தி! ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிப் பரீக்ஷை பாஸ் பண்ணிவிட்டுச் செருப்புக் கடை வைத்துச் சம்பாதிக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லையா நம்ப சுப்ரமணியின் பிள்ளை குண்டு! கர்மம், கர்மம்!” என்று தலையில் இரண்டு போட்டுக் கொண்டாள் பாட்டி.
பாட்டிக்கு வயசு எழுபது ஆனாலும் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் தனக்குத் தெரியாமல் நடக்கக்கூடாது என்கிற எண்ணம் வாய்ந்தவள். ‘பிள்ளைகளை வளர்த்துப் பெரியவர்கள் ஆக்கியாயிற்று. பெண்களும் புக்ககம் போய் விட்டார்கள். பேரன் பேத்திகள் வீடு நிறைய இருக்கிறார்கள். செய்த வேலைகள் போதும், இனி ஓய்வு பெறலாம்’ என்கிற எண்ணம் பாட்டிக்குக் கிடையாது. ‘நாம் ஒன்றிலும் தலையிடக் கூடாது: கிருஷ்ணா, ராமா என்று காலத்தை ஓட்டவேண்டும்’ என்று பாட்டி அநேக முறைகள் மனத்தை வைராக்கியத்துக்கு இழுத்து வந்திருக்கிறாள். அந்த வைராக்கியம் அரை நிமிஷங் கூட நிலைக்காது. மாமியாருக்கும் நாட்டுப் பெண்ணுக்கும் ஏதாவது ஒரு காரணத்தைப்பற்றித் தினம் சண்டையும் பூசலும் ஏற்படும். இருவரும் நாள் கணக்கில் பேசமாட்டார்கள். ஆனால், பாட்டி சாப்பிடாமல், மங்களம் அந்த வீட்டில் ஜலபானம் பண்ணமாட்டாள். வயசான மனுஷி என்கிற மரியாதையும் அபிமானமுந்தான் காரணம். ராஜமையருக்கு இலை போட்டுப் பரிமாறும்போதே, மாமியாருக்கும் இலை போட்டு விடுவாள் மங்களம், மாமியார் சொன்ன சொற்கள் மனத்தை வாட்டி எடுத்தாலும், அவருக்குச் செய்யும் சிசுருஷையில் கொஞ்சம் கூடக் குறைவு இராது.
ராஜமையர் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மனைவியைத் தனிமையில் சந்திக்கும்போதெல்லாம், “மங்களம்! நீ சாப்பிட்டாயா? உடம்பைக் கவனித்துக் கொள்ளாமல் வேலை வேலை என்று பறக்கிறாயே!” என்று அன்புடன் கடிந்து கொள்வார்.
“ஆமாம், வேலை செய்யாவிட்டால் உங்கள் வீட்டில் எனக்கு யார் சோறு போடுகிறார்கள்!” என்று நிஷ்டுரமாகக் கேட்பாள் மங்களம். “உங்கள் வீடா? அடி அசடே! வீட்டுக்கு நீதானே எஜமானி? நீதானே இந்தக் கிருகத்தில் அன்னபூரணியாக இருக்கிறாய்? நான் கூட உன்னிடந்தானே, ‘தேஹி’ என்று வர வேண்டும்” என்று கூறி, அவள் கரங்களை அன்புடன் பற்றித் தம் கைகளில் சேர்த்துக்கொள்வார். அவருடைய இன்ப ஸ்பரிசத்தில் ஆயிரம் வருஷங்களின் கஷ்டங்களை மறந்து விடுவாள் மங்களம்.
இவ்விதம் மனஸ்தாபம் மூண்டு எழுந்தாலும் அன்பு நீரால் அத்தம்பதிகள் அதை அணைத்து விடுவார்கள். மேலே பற்றி எரிய வழி இல்லை அல்லவா?
அடுப்பிலிருந்த வாணலியை இறக்கிவிட்டு மங்களம், மாமியாருக்கு இலை போட்டாள். பஞ்சபாத்திரத்தில் ஜலத்துடன் ‘நச்’ கென்று இலை முன்னால் வந்து உட்கார்ந்த பாட்டி, “ஆமாம். பிக்கல், பிடுங்கல் இல்லை என்று சொன்னாயே. உனக்கு மாத்திரம் இங்கே என்ன பிடுங்கல்? இந்த வீட்டுக்கு யார் வரக் காத்துக் கிடக்கிறார்கள்? கூப்பிட்டால் வரப்போகிறார்கள். இல்லாவிட்டால் இல்லை” என்று மனஸ்தாபத்தைப் பாதியில் நிறுத்த இஷ்டமில்லாமல் தொடர்ந்து ஆரம்பித்தாள்.
மங்களத்தின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது. சமையலறைப் பக்கம் ஏதோ வேலையாக வந்த சந்துரு தாயின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து. அவளை ஜாடையாகக் கூப்பிட்டான்.

“மாப்பிள்ளை வந்து நாளைக்குப் பேரன், பேத்தி எடுக்கப் போகிறாய். எதற்கெடுத்தாலும் குழந்தை மாதிரி அழுது கொண்டு நிற்கிறாயே அம்மா. பாட்டி சொல்வதைக் காதில் வாங்காமல் உன் வேலையைக் கவனிக்க மாட்டாயா?” என்று சந்துரு அவளை அன்புடன் கடிந்து கொண்டான்.

ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும் – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஸரோஜா ராமமூர்த்தி/இருளும் ஒளியும்”

Comments are closed.