வளவ.துரையன்/சுரப்பு

ஒட்டக்கறந்த பிறகு
கட்ட இடமில்லாததால்
விரட்டிவிடப்பட்டவள்

ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
போய்த் தேடுகிறாள்
நேற்று மிஞ்சிய சோறும்
அழுகிய காய் பழங்களும்
இன்றும் கிடைக்குமா

ஐந்து மணிக்குள்ளாக அவசரமாகத்
தின்றுவிட்டு
அசை போட வேண்டும்.

அப்புறம் வந்திடுவார் மாலை
கறக்க ஓட்டிச் செல்ல

சுவரொட்டியின் ரசாயனம்
சுள்ளெனக்
குத்தினாலும்
பாழ்பசியில் தெரியாது.

பாலையே குடித்தறியா
பசும்புல்லும் கடிக்க முடியா
பரிதாபக் கன்றதனின்
கண்ணீர் வடிதல் கண்டு
என் மடி சுரக்கிறது.

One Comment on “வளவ.துரையன்/சுரப்பு”

Comments are closed.