
15-11-2024 கவியரங்கில் வாசித்த மூன்று கவிதைகள்
- ரயில்
எங்கள் வீட்டில்
ஏழு பேர் நாங்கள்
பள்ளி நாட்களில்
ஒருவர் பின் ஒருவர்
முன்னவர் முதுகைத் தொட்டுக்கோண்டு
தொடர் ரயில் வண்டி
ஓட்டிய அநுபவம்
முதல் ஆள் எஞ்சின்
கடைசி ஆள் கார்டு.
அக்கா திருமணம்
ஊரு விட்டு ஊரு
ரயில் பயணம்
கும்மாளம் குதூகலம்
திருப்பதி செல்ல
நிஜ ரயில் ஏறி
ஜன்னலோர சீட்டுக்கு
சண்டையிட்ட அனுபவம்
இன்றோ,
ஏழு பெட்டிகளும்
ஏழு திசைகளில்
நினைவுகள் மட்டும்
தொடர் ரயில் போல
- கால் பந்து
பள்ளி நாட்களில்
துள்ளி ஓடும் பந்தைத்
துரத்தித்துரத்தி
கால்களால் அடிக்க
அப்படியொரு ஆனந்தம்
கால்பந்தாட்ட வீராங்கனையாய்க்
கற்பனை செய்தாள் அன்று
பருவம் வந்தவுடன்
பெண்ணுக்கெதற்கு
முரட்டுப் பந்தாட்டம்?
பாட்டு கற்றுக்கொள்
பெண் பார்க்க வரும்போது
உபயோகமாகும்
ஆசைக்கு அணை போட்டு
கனவைத் துண்டித்தாள்
அம்மா அன்றே
மனைவியாய், மருமகளாய்
மதனியாய், அன்னையாய்
குடும்பத்தில் ஓடியோடி
தானே பந்தானாள்
தந் நிலை தான் மறந்தாள்
பாட்டியாய் ஆன பின்னே
மூச்சு விட நேரம் கிடைத்து
பந்தாட்டம் பார்க்க வந்தாள்
பேரன் கைப்பிடித்து
ஆண்டாண்டுகாலமாய்
அமுக்கி வைத்த ஆசைகள்
ஆழ்மனதில் புதைத்து வைத்த
அருமை லட்சியங்கள்
பொங்கி வரும் எரிமலையாய்
பீறிட்டு வந்து – அந்தக்
கால்களுக்கு வலுவேற்ற
துள்ளிக் குதித்து ஓடுகிறாள்
பந்து போகும் திசையோடே!
- பேனா
பிறந்தநாளுக்குப்
பரிசளித்த பேனாவால்
காதல் ரசம் சொட்டச்சொட்ட
எழுதிக் கொடுத்தாய்
காதல் கடிதம்.
இன்றோ,
அதே பேனாவால்
எழுதித் தருகிறாய்
பிரிவுக்கடிதம்.
தெரியுமா உனக்கு?
மரணதண்டனை
எழுதிய பேனாவின்
முனையை உடைப்பார்
நீதிபதி
நீயும்
உடைத்து விடு
உன் பேனா முனையை.
