சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்

குறுகுறுவென்று மாசி நிலவு ஊர் முழுதும் படர்ந்து வீசிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த பூட்டப்பட்ட பங்களாவின் தென்னை மரங்கள் காற்றில் ‘உய்ய்’ என்று ஆடி அசைந்தன. தெருவில் போவோர் வருவோருடைய இரண்டொரு வார்த்தைகளின் சத்தம் இடையிடையே கேட்டது. அத்துடன் இராப் பிச்சைக்காரன் ஒருவன், “தாயே! ஒரு பிடி அன்னம் போடு அம்மா!” என்று தெருக்கோடியில் கத்திக்கொண்டு நின்றான்.
ஈஸி சேரில் சாய்ந்திருந்த என் கணவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவருடைய சிந்தனையைப் பிச்சைக்காரனின் தீனக் குரல் கலைக்கவில்லை. நானும் அதை ஒரு வினாடி தான் கேட்டேன். மேற்கொண்டு அர்த்தமற்ற சிந்தனையில் – எண்ணச் சுழலில் என் மனமும் அகப்பட்டுக் திண்டாடிக்கொண்டிருந்தது.
மணி ஏழுக்கு மேல் இருக்கலாம். நிலவில் விளையாடிக் கொண்டிருந்த எங்கள் பென் கிரிஜா, பாதி விளையாட்டில் திடுக்கிட்டு நின்றாள் வெளி’கேட்’டின் அருகில் போய் நின்று பயம் நிறைந்த கண்களால் தெருக்கோடியை இரண்டு தரம் உற்றுக் கவனித்தாள். பிறகு பயம் கலந்த மிரண்ட பார்வையுடன் என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
“ஏன் வந்துட்டே, அம்மா? விளையாடினது போதுமா?” என்று கேட்டேன்.
“பூச்சாண்டி, அம்மா! கோடியிலே கத்தறான்!” என்று நாக்குழறப் பதிலளித்தாள் அவள்.
“வெறுமனே பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டாயானால் அவனிடம் உன்னைப் பிடித்துக்கொடுத்துவிடுவேன்!” என்று சொல்லிக்கொண்டே, இதுவரையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்த என் கணவர் கிரிஜாவைத் திரும்பிப் பார்த்தார்.
அவருடைய மிரட்டல் அவ்வளவாக எனக்குப் பிடிக்க வில்லை. காரணம் அவரே அடிக்கடி என்னிடம் குழந்தைகளை ‘பூச்சாண்டி’ மிரட்டல் ஒன்றும் மிரட்டக்கூடாது என்று சொல்லியிருந்ததுதான்.
“பிச்சைக்காரன்னா பூச்சாண்டி இல்லை. பிச்சைக்காரன்னா…” என்று மேலே சொல்வதற்கு நான் தயங்கினேன்.
பிச்சைக்காரன் என்றால் என்ன என்று ஐந்து வயதுக் குழந்தைக்கு எப்படி வியாக்கியானம் செய்ய முடியும்? ஒரு நிமிஷம் எழுந்து நின்று பிச்சைக்காரன் எவ்விடத்தில் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காகத் தெருக்கோடியைப் யார்த்தேன். பரட்டைத் தலையும், அழுக்கேறிய துணியும், கையில் ஓடும் ஏந்தி அந்த மெலிந்த உருவம் ஒவ்வொரு வாசலிலும் மணிக் கணக்கில் நின்று ஏமாந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஏழு மணிக்கு முதலில் கேட்ட குரல் எங்கள் வீட்டருகில் வரும்போது மணி எட்டு ஆகிவிட்டது.
“தாயே! அம்மணீ! ஒரு கவளம் அன்னம் அம்மா!” என்று கத்திக்கொண்டே அவன் எங்கள் வீட்டருகில் வந்துவிட்டான்.
கிரிஜாவின் உடம்பு ஒரு நிமிஷம் நடுங்கி ஓய்ந்தது. குழந்தையை அணைத்துப் பிடித்துக்கொண்டேன்.
“இதென்ன, இப்படிப் பயப்படுகிறாளே?” என்றேன், என் கணவரைப்பார்த்து.
“அது நீ குழந்தை வளர்த்த லக்ஷணம்! ‘பூச்சாண்டி’ கதை சொல்லிப் பயமுறுத்தியிருப்பாய்!” என்றார் அவர்.
எனக்குக் கோபம் வந்தது. “சரி நான்தான் குழந்தையைப் ப யந்தாங்கொள்ளியாக்கிவிட்டேன். அப்படியே இருக்கட்டும்! இயபோது ‘பிச்சைக்காரன் என்றால் பூச்சாண்டியா?’ என்று கேட்கிறாள். அதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றேன்.
*பிச்சைக்காரன்னா பூச்சாண்டி இல்லை, அம்மா! மனுஷன்தான்!” என்று அவள் அப்பா வியாக்கியானம் செய்தார்.
“பின்னே, அவன் ஏன் அப்பா நம்மைப்போல் இல்லை?” வன்றாள் குழந்தை.
“இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?” என்று நாங்கள் விழித்துக்கொண்டிருந்தபோது, “அம்மா! தர்மலக்ஷ்மி, கொஞ்சம் ஏதாவது போடுங்க!” என்றான் அந்தப் பிச்சைக்காரன் மீண்டும்; “அவன் என்ன கேட்கிறான், அம்மா?” என்றாள் கிரிஜா என்னைப் பார்த்து.
“சாதம் கேட்கிறான், போடலாமா?” என்று கேட்டுக்கொண்டே. எழுந்தேன் உள்ளே போவதற்கு. ‘கேட்’டருகில் நின்றிருந்த அந்தப் பரட்டைத் தலை உருவத்தினிடம் போவதற்கு எனக்கும் சிறிது பயமாகத்தான் இருந்தது. சிறு வயதில் நான் கேட்ட பேய் பிசாசுகளின் கதைகள்கூட நினைவுக்கு வந்தன. ஒரு கையில் விளக்கையும் எடுத்துக்கொண்டுபோய்ச் சாதத்தை அவன் கலயத்தில் கொட்டினேன்.
“மகராஜி! நல்லா இருப்பீங்க!” என்று வாழ்த்திக்கொண்டே, “இந்தக் குழந்தை என்னா பேச்சு பேசுதம்மா!” என்று சொல்லி விட்டுக் கிரிஜாவைப் பார்த்தான் அவன்.
குழந்தையின் பயம் நன்றாகத் தெளிந்துவிட்டது.
“ஏன் நீ சொக்காய் போட்டுக்கலை?” என்று கேட்டாள் அவனைப் பார்த்து.
“எனக்கு சொக்கா யார் கொடுப்பாங்க?” என்றான் பிச்சைக்காரன்.
அவன் முகத்தையும் என் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள் கிரிஜா. அவள் பார்வையில், ‘அவனுக்கு சொக்காய் கொடுக்கலாமா?’ என்கிற கேள்வி தென்பட்டது.
“வா, போகலாம்” என்று குழந்தையின் கையைப்பற்றி அழைத்தேன்.
“போகலாம் இரு, அம்மா! அப்பாகிட்டே சொல்லி அவனுக்கு ஒரு சொக்காய் வாங்கிண்டு வரேன்!” என்று கூறி உள்ளே ஓடினாள். அவள் எண்ணம் பலிக்கவில்லை. சொக்காய் லேசில் கிடைத்துவிடுமா? அதுவும் இந்தக் காலத்தில்? பிச்சைக்காரன் ஆவல் நிறைந்த கண்களுடன் உள்ளே பார்த்துக்கொண்டு நின்றான்.
“போ, அப்பா! குழந்தை ஏதோ வெறுமனே சொல்கிறது. இராக்காலத்தில் சொக்காய் யார் தரப் போகிறார்கள், உனக்கு?” என்றேன் நான்.
பிச்சைக்காரன் நகரவில்லை. குழந்தையின் வரவை எதிர்பார்த்துக்கொண்டு நின்றான்.
குழந்தை வெறுங்கையுடன் திரும்பி வந்தாள். அவள் முகத்தில் தோல்வியின் சின்னம் காணப்பட்டது.
“போ, அப்பா! குழந்தை பேச்சைக் கேட்டுக்கொண்டு வீணாய்க் காத்திருக்காதே!” என்று நான் பிச்சைக்காரனை அனுப்பப் பார்த்தேன்.
“எதாச்சியும் பழசு பார்த்துக் குடுங்க, அம்மா!” என்றான்.
எனக்கு, கிரிஜாவின் மேல் கோபம் வந்தது. “போடி கழுதை! இல்லாததையெல்லாம் கிளப்பி விட்டுவிட்டு, என்னபாடு படுத்தறே, நீ?” என்றேன்.
பிச்சைக்காரன் முணுமுணுத்துக் கொண்டே ‘கேட்’ அருகி லிருந்த புல் தரையில் உட்கார்ந்தது, கலயத்தில் இருந்த சோற்றைப் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தான். அவன் மனத்திலிருந்து சொக்காய் கிடைக்கும் என்கிற நம்பிக்கை போகவில்லை. சாப்பாடு முடிந்ததும் கலயத்தைக் கந்தையில் சுற்றித் தலைக்கடியில் வைத்துக் கொண்டு தரையில் படுத்துவிட்டான். நிச்சிந்தையான அவன் உள்ளத்தைக் கண்டு எனக்கும் சிறிது பொறாமை ஏற்பட்டது
“இன்னும் உள்ளே வர மனசில்லையா, உனக்கு ?” என்று என் கணவர் கூப்பிட்டு என் சிந்தனையைக் கலைத்தார்.
“சொக்காய் குடுப்பா, அவனுக்கு ! குளிரப் போறது !” என்றாள் கிரிஜா.
‘ஆமாம், ஆமாம், நீ உள்ளே வா!” என்று அவளைக் கூப்பிட்டார் அவர். ‘கேட்’டை சாத்திக்கொண்டு உள்ளே வரும்போது பிச்சைக்காரன் கண்கள் பரிதாபமாக எங்களைப் பார்த்தன.
உள்ளே அழைத்தபோது, நான் பாத்திரக்காரனுக்குப் போட்டு வாங்குவதற்காக வைத்திருந்த பழைய துணி மூட்டை பீரோவின் மேலிருந்து பளிச்சென்று என் கண்ணில் பட்டது. ஒரு நிமிஷம் தயங்கினேன். மறு வினாடி விறுவிறுவென்று மூட்டையைப் பிரித்தேன். இரண்டு மூன்று ‘ஷர்ட்டு’கள் இருந்தன. அரைப் பழசு அவை. இரண்டு வேஷ்டிகள் வேறு.
“அந்தச் சொக்காயை வேண்டுமானால் அவனுக்குக் கொடேன்!” என்றார் என் கணவர்.
“குடும்மா!” என்றாள் குழந்தையும்.
“ஆமாம், கல்லாட்டமா இருக்கிற சொக்காயை இவனுக்குக் கொடுக்கிறா! பாத்திரக்காரனுக்குப் போட்டாலும் நல்ல பாத்திரமாகக் கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே மூட்டைக்குள் மறுபடி அந்தச் சொக்காயைத் திணித்துவிட்டேன் நான்.
எல்லாத் துணிகளையும் போட்டு ஒரு ‘டிபன் செட் வாங்கவேண்டுமென்பது என் விருப்பம். இது நெடு ஆசை. இந்த ஆசையை இப்போது அடக்க முடியுமா?
விடியற்காலம், தெருவில் சாணம் தெளிக்கவந்த வேலை உரத்த குரலில் யாரையோ அதட்டுவது கேட்டு விழித்துக் கொண்டேன்.
“எழுந்திருய்யா! நல்லா தூங்கறே நீ!” என்று சொல்லி- கொண்டே, சாண நீர் நிறைந்த ‘பக்கெட்’டை “நக்”கென்று ‘கேட்’டருகில் வைத்தாள் அவள்.
“பாவம்! அவனை எழுப்பாதே!” என்றேன் நான் வெளியே வந்து.
“நல்லா இருக்குது, அம்மா! எழுந்திருச்சி எங்காவது போகட்டுமே. விடிஞ்சி எழுந்திருக்கச்சே, வாசல்லே நல்லா இருக்குது இது!” என்றாள் அவள். என்ன கத்தியும் அவன் எழுந்திருக்காமற் போகவே, முகத்தருகில் குனிந்து “ஐயா, ஐயா” என்று கூப்பிட்டாள். பிறகு, நிமிர்ந்து ஒரு கணம் யோசித்தாள்; திரும்பவும் குனிந்து பார்த்தாள்.
அடுத்த கணம், “நல்லா இருக்குது இது ! ஐயாவை எழுப்பி மொதல்லே இந்தப் பொணத்தைக் கிளப்ப வழி பண்ணுங்கோ! கண்டவன்களுக்கெல்லாம் இடம்விட்டா இப்படித்தான் நடக்கும்!” என்றாள் என்னைப் பார்த்து.
என் வாயடைத்துப் போய்விட்டது.
குழந்தை சொன்ன மாதிரி அவன் குளிரில் தான் விறைத்து இறந்துவிட்டானோ? ஆம், அதில் என்ன சந்தேகம்?
அதற்குள் தூக்கம் கலைந்து அங்கே வந்த குழந்தை, அந்தப் பிச்சைக்காரனின் உடலை முனிசிபாலிடியார் அப்புறப் படுத்துவதைப் பார்த்துவிட்டு, “அவனை ஏன் அப்படித்தூக்கிண்டு போறா, அம்மா?” என்று என்னைக் கேட்டாள்.
“அவன் செத்துப் போய்விட்டான்! அதனால்தான் அப்படித் தூக்கிண்டு போறா!” என்றேன் நான்.
“ஏன் செத்துப் போனான்?” என்று கேட்டாள் குழந்தை. அவளுக்கு என்ன பதில் சொல்வது?

கல்கி, ஏப்ரல் 27, 1947

One Comment on “சரோஜா ராமமூர்த்தி/பிச்சைக்காரன்”

Comments are closed.