
ஆற்றங்கரை மணல் சூரிய வெப்பத்தால் வெந்தழல்மாதிரி சுட்டது. ஆற்றங்கரையில் இருந்த மரங்கள் சூரியனின் கடுமை தாங்கமுடியாமல்சலனமற்று நின்றன. காக்கை, குருவிகள் கூட அயர்ந்து வானைப் பார்த்து ஓங்கின. சில்லெனறு ஒரு சொட்டு ஜலம் தங்கள் வாயில் விழாதா என்று குருவிகள் வாயைப் பரிதாபமாக மூடித் திறந்தன. ஆனால், ஆகாயம் நிர்மலமாக இருந்ததது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே நீலமயம். ஒரு சிறு வெண் மேகம் கூடக் காணோம். அப்படி இருக்கும்போது மழை எங்கிருந்து பெய்துவிடப் போகிறது.
ஆற்றின் நடுவில் ஜீவநதி மணலை அரித்துக்கொண்டு ஓடியது. தண்ணீருக்குக் கீழே கிடந்த மணல் சூரிய ஒளியில் வைரங்களைப்போல் மின்னியது. ஆற்றிலே ஜலம் திரட்டிப் போவதற்காகக் கரையில் இருந்த கிராமத்திலிருந்து இரண்டு பெண்கள் இடுப்பில் குடத்துடன் வந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்திக்கு நடுத்தர வயசாக இருக்கலாம். மற்றொருத்தி இளம்பெண். முந்தியவள் நிதானமாகவும் பணிவாகவும் நடந்துவந்தாள். இளம் பெண் துருதுருவென்று நடந்து குதி போட்டு ஓட்டமும் நடையுமாக வந்தாள். வியர்க்க விறுவிறுக்க இருவரும் ‘உஸ் உஸ்’ என்று சொல்லிக்கொண்டே நிழல் இருக்கும் இடங்களில் பாதங்களை மாறி மாறி வைத்துக்கொண்டே நடந்தார்கள். கால்கள் வெயிலின் கடுமை தாங்காமல் செக்கச் செவேலென்று சிவந்து இருந்தன.
“போயும், போயும் இந்த வேளையைப் பார்த்து ஜலத்துக்குக் கிளம்பினோமே மாமி?” என்று இளம் பெண் சிறிது மனத்தாங்கலுடன் பெரியவளைப் பார்த்துக் கேட்டாள்.
“என்ன செய்கிறது ஜகது? காலையில் கொண்டு வந்த ஜலமெல்லாம் ஆகிவிட்டது பள்ளிக் குழந்தைகள் போக வர ஜலம் சாப்பிட என் வீட்டிற்குத்தான் வருகிறார்கள். இந்த மாதிரி வெயில் நெருப்பாய் எரிக்கிறதே! குடிக்க ஜலம் இல்லை என்று சொல்ல முடியுமா?” என்றாள் நாகலக்ஷ்மி என்கிற அந்தப் பெண்.
“ஹும்” என்று ஆயாசத்துடன் இருவரும் ஓடும் நதியில் இறங்கினர் ஜலம் திரட்டுவதற்காக. மறுபடியும் நாகலக்ஷ்மியே பேசினாள்.
வருஷம் நான்காகிறது நல்ல மழை பெய்து. பூமியே வரண்டு கிடக்கிறது பார்; பாளம் பாளமாக வெடித்து ஈரப்பசை இல்லாமல், பூமியின் வறட்சி அடங்குவதற்கே எவ்வளவு மழை பெய்தாலும் போதாது. பூமாதேவி பச்சைப் பசேல் என்று பசுமை போர்த்திப் பூவும் காயும் தானியமும் மலருமாய் இருப்பதைப் பார்த்து எவ்வளவோ காலமாச்சு ஜகது. நான் சிறியவளாக இருக்கும் போது பூமியில் எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று புல் முளைத்திருக்கும். வயல்களில் கண்ணுக்கெட்டிய தூரம்வரைக்கும் பயிர்கள் மரகத வண்ணத்தில் காட்சி அளிக்கும். வாய்க்காலில் சதா சல சலவென்கிற சத்தத்துடன் ஜலம் அரித்துக் கொண்டு நொப்பும் நுரையுமாக ஓடும். வயல்களைப் பாரேன் தாயில்லாத குழந்தைகள்மாதிரி, கள்ளி முளைத்துக் கரம்பாகிக் கிடப்பதை! அதனால்தான் ஜனங்களும் கிராமங்களை விட்டு நகரங்களுக்குப் போய்விட்டார்கள். மழை இல்லாமல் அவர்கள் வயல்களில் என்ன வேலை செய்ய முடியும்?”
“வர வர கொல்லைக் கிணற்றில் ஜலம் பாதாளத்தில் போய்விட்டது மாமி” என்றாள் ஜகதா வருத்தத்துடன்.
“இந்தச் சமயத்தில் நல்ல மழை பெய்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் ஜனங்கள் குடி தண்ணீருக்குக்கூட அவதிப்படவேண்டியதுதான்” என்றாள் நாகலக்ஷ்மி.
இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் ஆற்றங்கரையை அடைந்தார்கள். ஆற்று மணல் பொடிப்பொடியாகக் கால்களில் ஒட்டிக் கொண்டது. இருவரும் ஆற்றில் இறங்கி நான்கு கை குளிர்ந்த ஜலத்தை அள்ளிக் குடித்தார்கள். அந்தக் கடுங் கோடையில்கூட நதியின் ஜலம் குளிர்ச்சியாகத்தான் இருந்ததது. துன்பத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் எழும் கடவுளின் கருணையைப்போல. பிறகு, ஜலத்தைக் குடங்களில் நிரப்பிக்கொண்டு வந்த வழியே வீடு திரும்ப ஆரம்பித்தார்கள் இருவரும். சிறிது தூரம் மெளனமாக நடந்துசென்ற ஜகதா ஏதோ நினைத்துக்கொண்டவள்போல், “ஏன் மாமி, மழை பெய்வதற்கு ஏதாவது விழா நடத்தக் கூடாதா?” என்று கேட்டாள்.
“இந்திரனுக்கு மழையை வேண்டி அந்த நாளில் விழா நடத்துவார்கள். பாரதக் கதையில் விராட பர்வம் வாசித்தால் மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துவிடும்.”
“அதெல்லாம் பெரியவர்கள் முயற்சி செய்து செய்யவேண்டிய விஷயங்கள், நாம் ஏதாவது செய்ய முடியுமா மாமி?” என்று விசாரித்தாள் ஜகதா. படை பதைக்கும் வெயிலில் நடக்கும் போதுதான் நிழலின் அருமையும், மழை வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகம் ஏற்பட்டது.
“ஓ! பேஷாகச் செய்யலாமே. பெண் குழந்தைகளுக்கும் பள்ளிக் கூடம் லீவு விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கும் பொழுது போனமாதிரி இருக்கும். எங்கள் ஊரில் சிறுமிகள் கண்ணனுக்கு உற்சவம் ஒன்று நடத்துவார்கள். வீடு வீடாகச் சென்று அவன் புகழ் பாடிக் கும்மியும் கோலாட்டமும் போடுவார்கள். ஒரு ஊர் இல்லாமல், அருகில் இருக்கும் கிராமங்களுக்கும் சென்று கோலாட்டம் போட்டு வசூல் ஆகும் பணத்தைக் கொண்டு கண்ணனுக்கு விழாக் கொண்டாடுவார்கள். நான்கூடக் கோலாட்டம் போட்டு ஜரிகைக்கரை பாவாடை பரிசாக அடைந்திருக்கிறேன், ஜகது !”
“பரிசு கிடக்கட்டும் மாமி! மழை பெய்ததா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் ஜகதா.
“அப்பொழுது என்னவோ உற்சவம் முடிந்த தினம் மழை நன்றாகப் பெய்தது நினைவிருக்கிறது. எதிலும் நம்பிக்கை வேண்டும்மா” என்று சிறிது நிஷ்டூரமாகப் பதிலளித்தாள் நாகலக்ஷ்மி.
இருவரும் அத்துடன் தத்தம் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
2.
கோடை விடுமுறைக்காகப் பள்ளிக்கூடங்களை மூடிவிட்டார்கள். குழந்தைகள் பொழுது போகாமல் வீட்டில் கொட்டமடித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஆற்றங்கரையில் உருவான யோசனை நாகலக்ஷ்மியின் மனத்தில் நிலை பெற்றுவிட்டது. அதை ஒரு தினம் தன் கணவனிடம் மெதுவாக வெளியிட்டாள்.
“ஊரிலே வம்பளப்பு, பிரமாதமாகக் கிளம்பிவிடுமே” என்றார் கிருஷ்ணமூர்த்தி.
ஜனங்கள் எதைப்பற்றித்தான் குறை கூறாமல் இருக்கிறார்கள்?” என்று நாகலக்ஷ்மி கேட்டாள்.
“உனக்கு எதற்கெடுத்தாலும் ரோஸம் பொத்துக்கொண்டு வருமே?” என்றார் அவர்.
“நல்ல விஷயம் என்று ஏதாவது செய்தால் நம்ம ஜனங்கள் அதிலிருக்கும் குறைகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதிலேயே கருத்தாக இருப்பார்கள். நீ ஆரம்பிக்கப் போவது என்னவோ நல்ல காரியம்தான். இருந்தாலும் ஜனங்கள் இதைப்பற்றி வம்பளக்காமல் இருக்கவேண்டுமே ?” இருக்கவேண்டுமே?” என்று மேலும் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை செய்தார் நாகலக்ஷ்மிக்கு. அவர் பேச்சில், மனைவியின் கோழை மனத்தைப் பரிகாசம் செய்யும் அர்த்தம் நிரம்பி இருந்தது.
“யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் கண்ணனுக்கு உற்சவம் ஆரம்பிக்கத்தான் போகிறேன்” என்று அழுகை கலந்த சிரிப்புடன் கூறிவிட்டு, நாகலக்ஷ்மி
அன்றே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். அவளுக்குக் கூடமாட உதவிக்காக ஜகதாவையும் சேர்த்துக் கொண்டாள். விஷயம் ஒரு நொடியில் எல்லா வீடுகளுக்கும் பரவிவிட்டது. பெண் குழந்தைகள் கோலாட்டக் கழிகளுடன் நாகலஷ்மியின் வீட்டில் குழுமிவிட்டனர்.
வீட்டில் இருந்த சிறு மேஜை ஒன்றின் நடுவில் சிறிய பலகையைப் பொருத்தி அதன் நடுவில் மாடு மேய்க்கும் கண்ணன் உருவத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். மேஜையின் நாற்புறமும் வாழைக் கன்றுகள் கட்டி, மாவிலைத் தோரணங் களும் கட்டினார்கள். ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் பூமாலைகள் வந்துசேர்ந்துவிட்டன.
ஆயிற்று, அடுத்த தினத்திலிருந்து பெண்கள் வீடு வீடாகச் சென்று கோலாட்டமும் கும்மியும் போட்டுச் சம்மானம் பெற வேண்டும். இந்த ஆட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கடைசி நாளன்று ஏதாவது பரிசு அளிப்பது வழக்கம். பெண் குழந்தைகள் உற்சாகமாகக் கலந்து கொண்டார்களே தவிர, அவர்கள் வீட்டார் ஏதாவது சொல்லாமல் இருப்பார்களா?
“ஆமாம், இந்த வேகிற வெயிலில் வீடு வீடாக அலைந்து படுத்துக் கொண்டால் என்ன செய்கிறது?” என்று ஒருவர் ஆட்சேபணையைக் கிளப்பினார்.
“இதிலெல்லாம்தான் மழை பெய்துவிடப் போகிறது! நம்ம தேசத்தில் இந்த பழைய வழக்கத்தில் இருக்கும் நம்பிக்கை போகவேண்டும். மேல் நாடுகளைப் போல நாமும் விஞ்ஞான முறையில் இதற்கெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கடவுளையே மறந்துவிட்டுக் கூறினார் ஓர் ஆராய்ச்சியாளர். “நாகலக்ஷ்மியா? நாலு குழந்தைகள் இருந்து, வீட்டில் வேலை இருந்தால் ஆட்டமும் பாட்டமும் இருக்காது. ஒரே குழந்தை. அந்தப் பெண்ணுக்கும் பத்து வயசுக்கு மேலே ஆகிறது. வீட்டிலே வேலை இல்லை; கிடந்து திண்டாடுகிறாள்” என்று கிராமத்து ஸ்திரீகள் ஆற்றங்கரையில் சுடுகிற வெயிலையும் லக்ஷ்யம் செய்யாமல் வம்பளந்தார்கள். சிலர் வம்பும் அளந்து வீட்டு நாகலக்ஷ்மியிடம் போய் மற்றவர்கள் கூறுவதைக் கயிறு திரித்தும் கூறினார்கள் !
பெரியவர்களின் மனம்தான் ஏற்றத் தாழ்வுகளையும் குற்றங் குறைகளையும் ஆராய்ந்ததே தவிர விழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் மனம் நிர்மலமாக இருந்தது. பகலெல்லாம் பாட்டுப் பாடிக் களித்தனர். இரவில் மோகன
கிருஷ்ணனுடன் கற்பனை உலகில் புன்முறுவல் தவழ விளையாடினர். தூங்கும் அவர்கள் முகத்தில் தவழும் சாந்தியும், புன்முறுவலுமே அதற்குச் சாட்சியாக அமைந்திருந்தன.
“இத்தனை கஷ்டப்படுகிறோமே; கடவுள் கிருபை செய்யப் போகிறானோ? இல்லை முகத்தில் சேற்றைப் பூசப் போகிறானோ? நாளைக்குக் கடைசி நாள். கிருஷ்ணனுக்குப் பூஜை செய்து முடித்ததும், குழந்தைகளுக்குச் சம்மானம் தர வேண்டும். யார் எது சொன்னாலும் அவர்கள்தான் இந்த விழாதில் முகத்தைக் கோணாமல் கலந்து கொண்டவர்கள்!” என்று மனத்தில் கவலையுடன் தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள் நாகலஷ்மி.
“பாரேன்! தினத்தை விட இன்று வெயில் அதிகம். டவுனில் 107 டிகிரிக்கு மேலாகப் பேப்பரில் போட்டிருந்தான். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆற்றில் ‘ஜீவநதி’ கூட வற்றிவிட்டது. அணுகுண்டு எதுவுமில்லாமல் சூரிய பகவானே உலகத்தை எரிக்கப் புறப்பட்டிருக்கிறானோ என்னவோ என்றுகூட எனக்குத் தோன்றியது” என்றார் அவள் கணவர். இருவரும் நிர்மலமான ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தனர். வான வீதியில் தாரகைகள் வைரங்களைப்போல் சுடர்விட்டன. நீல நிற ஆகாயத்தில் பதித்த வெண்கற்கள்போல் அவை ஜ்வலித்தன. எங்கேயும் தப்பித் தவறிக்கூட ஒரு வெண் மேகமோ ஒரு சிறு சலனமோ இல்லை.
“எனக்கு அப்பவே தெரியும் நாகு! இந்தக் காலத்திலாவது, விழா செய்தால் மழை பெய்கிறதாவது! நீதான் பைத்தியம்மாதிரி கிடந்து அலைந்தாய். பாரேன்; நாளைக்கு என் சிநேகிதர்க ளெல்லாம் என்னைக் கேலி செய்யப்போகிறார்கள்” என்றார் அவள் கணவர். மனமுடைந்து நாகலஷ்மி நிராசை அடைந்தாள். ‘கடவுளை நம்பினால் இப்படியா அவன் கைவிடுவது?” என்று கடவுளை நிந்தித்தது அவள் மனம்.
3
அன்றுதான் விழாவின் கடைசி நாள். அதிகாலையில் எழுந்து நாகலக்ஷ்மி ஆற்றில் ஸ்நானம் செய்யப் புறப்பட்டாள். வெள்ளி மட்டும் கீழ்த் திசையில் முளைத்திருந்தது. இருள் இன்னும் நீங்கவில்லை. கூடத்திலே சிறு பந்தலின் கீழே கண்ணன் வேய்ங்குழல் இசைத்துக்கொண்டு நின்றான். நந்தாவிளக்கின் ஒளியில் நீல மேகவண்ணனை ஒரு முறை நீர் தேங்கும் கண்களால் பார்த்தாள்.
கோவர்த்தன கிரியைக் குடையாய்ப் பிடித்தவன்டீ” என்று குழந்தைகள் கோலாட்டம் போட்ட பாட்டு அவள் நினைவுக்கு வந்தது. மலையையே குடையாகப் பிடிக்கும் அளவுக்கு அவன் அருளால் அந்த யுகத்தில் மழை பொழிந்தது. இன்று அவன் அருளும் வற்றிவிட்டதோ?
“நாகு! நாகு!” என்று அவள் கணவன் இரண்டு முறை கூப்பிட்டான். “ஏன், இதோ இருக்கிறேன்” என்றள் நாகலக்ஷ்மி. “தனியாக ஆற்றுக்குப் போகாதே. நான் வேண்டுமானால்துணைக்கு வருகிறேன்” என்றார் அவர். அவர் குரலில் பச்சாதாபமும் இங்கிதமும் கலந்து ஒலித்தன.
ஆனால், அன்று அவள் மனம் தனிமையைத்தான் நாடியது. ஏகாந்தமாக அந்தப் பரம்பொருளிடம் முறையிட்டு வேண்ட அவள் தனிமையைத்தான் நாடினாள்.
விழாவின் விருந்துச் சாப்பாட்டைத் தயாரிப்பதற்காகச் சமையற்காரன்கூட வந்துவிட்டான். “அம்மா! அண்டாக்களில் ஜலம் நிரப்பவேண்டுமே? கிணற்றிலே சேறும் சகதியும்தான் இருக்கிறது. பண்ணையார் வீட்டு ஊரணியில்தான் ஜலம் கொஞ்சம் தெளிவாக இருக்கிறது. யாராவது கொஞ்சம் என்னுடன் வந்து சிபாரிசு செய்தால் போதும். கொண்டு வந்து நிரப்பி விடுகிறேன்” என்றான் அவன்.
“இதோ பாருங்கள்! கொஞ்சம் போய்ச் சொல்லிவிட்டு வாருங்களேன்” என்றாள் நாகலக்ஷ்மி.
‘அவரிடமா? வெறும் வாயை மெல்லுகின்றவருக்கு ஒரு பிடி அவல் கிடைத்தமாதிரின்னா இருக்கும் இப்போது? அவர் உன்னைப்பற்றியும் என்னைப்பற்றியும் கொஞ்சமாகவா பேசுகிறார்?” என்றார் அவர். தம்பதியின் சச்சரவைக் கவனித்த சமையற்காரர் பேசாமல், வருகிறது வரட்டும் என்று நினைத்து, குடத்துடன் பண்ணையார் வீட்டை நோக்கி புறப்பட்டுவிட்டார். யாரும் சிபாரிசு செய்யாமலேயே. அங்கே கிணற்றங்கரையில் பண்ணையார் உரத்த குரலில் தம் அண்டை வீட்டுக்காரிடம் பேசிக் கொண்டிருந்தார். “இவர்கள் மழைக்கு விழாக் கொண்டாடப் போக என் வீட்டுக் கிணற்றில் சேறுதான் மிஞ்சப் போகிறது!” என்று.
ஆற்றில் ஸ்நானத்தை முடித்துக் கொண்டு வரும் வழியில் ஜகதாவைச் சந்தித்தாள் நாகலக்ஷ்மி.
“நீயும் வராமல் இருந்து விடாதடி ஜகது! என்னவோ பைத்தியம்மாதிரி ஆரம்பித்துவிட்டேன். முடித்துத்தானே ஆக வேண்டும்?” என்று சலிப்புடன் பேசினள் நாகலக்ஷ்மி அவளிடம்.
“என்னவோ பார்க்கலாம் மாமி” என்றுவிட்டு அசிரத்தை யுடன் போய்விட்டாள் ஜகதா.
அன்று விழாக் கொண்டாட்டம் அமர்க்களப்பட்டது. கொளுத்துகிற வெயிலையும் லக்ஷியம் பண்ணாமல் எல்லோரும் சாப்பாட்டுக்கு வந்திருந்தார்கள்.
“இந்த வெயிலிலே பானையில் பானகத்தைக் கரைத்து வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்”
‘அடி அப்படியே மணலிலே ஒட்டிக்கொண்டுவிட்டது! ஆற்றங்கரையிலே நெருப்புக் கட்டி வீசறது” என்று சொல்லிக் கொண்டே ஒருவர் விசிறியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து விசிறிக்கொண்டார்.
அன்று வந்திருந்த ஒவ்வொருவரும் வெயிலைப்பற்றிப் கேலி செய்வதாகவே பேசும்போதெல்லாம் தன்னை நினைத்துக்கொண்டாள் நாகலக்ஷ்மி.
“மழையாவது பெய்கிறதாவது! என்னவோ லீவிலே குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்காக ஆச்சு” என்று சொல்லிக்கொண்டே தொன்னையுடன் பாயசத்தை உறிஞ்சினார் ஒருவர். எல்லோரும் வயிறாற உண்டனர். மறைமுகமாகக் கேலி செய்தார்கள். “உஸ்! வெயில், வெயில்!” என்று சமயம் நேர்ந்தபோதெல்லாம் பேசினார்கள்.
விழாவின் அமர்க்களம் குறைந்த பிறகு நாகலக்ஷ்மி பகவானின் பிரசாதமாக ஒரு டம்ளர் பாயசம் மட்டும் சாப்பிட்டாள். வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகக் கொள்ளவேண்டும் என்பது கண்ணனின் வாக்கல்லவா? கடமையைச் செய்துவிட்ட பெருமை அவள் முகத்தில் நிரம்பி இருந்தது. ஆனால் எங்கேயோ ஒரு சிறு குறை தோன்றி அவள் மனத்தை அரித்துக்கொண்டே இருந்தது.

One Comment on “சரோஜா ராமமூர்த்தி/ மழை”
Comments are closed.