
பகல் போஜனத்திற்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். கீழே அவர் எதிரே தர்மாம்பாள் ராமாயணப் புஸ்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு படிப்பதில் முனைந்திருந்தாள். இன்று காவிரி நதி பாய்ந்தோடும் குக்கிராமங்களில் ஒன்றாகிய பூந்தோட்டத்தில் இரண்டு பக்ஷிகள் போல் இருக்கும் இவர்கள் ஐந்தாறு குழந்தை குட்டிகளை பெற்ற சம்சாரிகள். சாப்பிட்டு, நிம்மதியாகத் தூங்கக்கூட பொழுதில்லாமல் தர்மாம்பாள் தவித்திருக்கிறாள். காலையில் எழுந்தால் ஓயாமல் இரவு வரையில் உழைத்துச் சலித்துப் போயும் இருக்கிறாள். சதா வேலையென்று தள்ளாமையைப் பாராட்டாமல் குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் உழைத்தும் இருக்கிறாள். சாமிநாதனும் அலுப்புச் சலிப்பின்றி கைநிறைய சம்பாதித்தும் குழந்தைகளுக்கு வேண்டியது செய்திருக்கிறார். குழந்தைகள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். தாய், தந்தை இருவரின் தயவு இல்லாமல் அவர்களே சம்பாதித்துப் பிழைக்கக்கூடிய நிலைக்கு இத்துவிட்டார்கள். குஞ்சுப் பறவைகளுக்கு இறக்கைகள் முளைத்தவுடன் பறந்து செல்வதுபோல் வேலை நிமித்தமாக
வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆசார சீலத்திலும், காவிரி நதியிடமும் கொண்ட பிரேமையால் சாமிநாதனும் தர்மாம்பாளும் மட்டும் பூந்தோட்டத்திலேயே தனியாகத் தங்கிவிட்டனர். இதனால் பிள்ளைகளுக்குப் பொற்றோர் மீது மனஸ்தாபம்கூட.
உண்டு. நிமிஷம்கூட ஒழிவில்லாமல் அடுப்பங்கரையிலேயே தர்மாம்பாள் அடைந்துகிடந்த காலம் வேறு. இப்பொழுது பொழுதை எப்படிக் கழிப்பது என்று புரியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள் தர்மாம்பாள். காலையில் எழுந்தவுடன் காவிரி ஸ்நானம், பிறகு பூஜை புனஸ்காரங்கள். கணவருக்குத் தேவைகளை கவனிப்பது. பிறகு சாப்பாடு, மத்தியான வேளைகளில் ராமாயணம் படிப்பது, மாலையில் கோவிலுக்குப் போவது, இரவு சாப்பிடுவது.
இந்த வாழ்க்கை அலுத்துவிட்டது. வீடு நிறைய குழந்தைகள் இருந்தபோது ஒழிவு வேண்டுமென்று நினைத்த மனம் இப்பொழுது ஓய்வை வெறுக்கிறது. நாலு குழந்தைகளுக்குச் சமைத்துப்போட்டு அவைகளைக் கவனித்து வளர்ப்பதில் இருக்கும் ஆனந்தம் வேறெதிலும் இல்லை என்றே தர்மு இன்று நினைத்திருக்க வேண்டும். அரைக்கண் தூக்கத்தில் இருந்த கணவரை ஏறிட்டுப் பார்த்தாள் தர்மாம்பாள். செக்கச்செவேலென்று ராஜா மாதிரி இருந்தவர் உடல் தளர்ந்து, சோர்ந்து படுத்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் தன் தனிமையின் வெறுப்பு அதிகமாகியது. ராமாயணத்தைப் ‘பட்’டென்று மூடிவிட்டு, “ஏன்னா தூங்குகிறீர்களா?” என்று அவரை எழுப்பினாள் தர்மாம்பாள்.
“ம்… ம்… ம்…” என்று முனகினார் அவர்.
“தூங்குகிறீர்களா என்கிறேன்?” என்று திரும்பவும் கேட்டாள் தர்மாம்பாள் சற்று உரத்த குரலில்.
சாமிநாதன் விழித்துக்கொண்டுவிட்டார். சற்று கடுமையாக மனைவியைப் பார்த்து, “என்னடி இது குறைத் தூக்கத்தில் எழுப்பிவிட்டாய்?” என்று அதட்டினார் அவர்.
“திடீரென்று நினைத்துக் கொண்டேன். அடுத்தவாரம் தீபாவளி வருகிறதே, தலைக்கொன்று பட்டு வேஷ்டியும், பட்டுப் புடவையும் குழந்தைகளுக்கு அனுப்பி வைப்போமா என்று உங்களைக் கேட்பதற்குத்தான் அவசரமாக எழுப்பினேன்’ என்றாள் தர்மாம்பாள்.
“யாருக்கு? உன் பெண்களுக்கா? இல்லை, உன் பிள்ளைகள், நாட்டுப்பெண்களுக்கா?” என்று சாமிநாதய்யர் கேட்டார்.
“எல்லோருக்கும்தான்! எல்லோரும் நம் குழந்தைகள் தானே? அவர்கள் எல்லோரும் சிறிசாய் இருக்கும்போது பட்டுப் பாவாடை வேண்டும், ஜரிகை வேஷ்டி வேண்டும் என்று நச்சரிப்பார்கள். இப்பொழுது நம்மை யார் கேட்கிறார்கள்” என்றாள் தர்மாம்பாள்.
அவள் கண்களில் குழந்தைகளின் பேரில் அவளுக்கு ஏற்பட்டிருந்த எல்லை மீறிய அன்பு சுடர்விட்டது.
சாமிநாதன் தன்னுடைய முக பாவத்தை இன்னும் கடுமையாகச் செய்துகொண்டார்.
“போடீ! வேலை கெட்டவளே! பெரியவன் ராமு மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்கிறான். போடுகிறதெல்லாம் ‘ட்வீட் சூட்’தான். கோபு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். உன் வேஷ்டிக்கும், புடவைக்கும்தான் அவன் காத்துக் கிடக்கிறான் ! பாலுவுக்கு முன்னூறு ரூபாய் சம்பளம். குஷிப் பேர்வழிடி அவன். அவன் மனைவி அதற்குமேல். வேளைக்கொரு புடவை, நாழிக்கொரு அலங்காரமுமாக இருக்கிறாள். உன் புடவைக்கும் துணிக்கும்தான் அவர்கள் எல்லோரும் காத்துக்கிடக்கிறார்களோ?”
சாமிநாதன் பேசிய ஒவ்வொரு பேச்சும் ஊசியால் குத்துவது போன்ற வேதனையைத் தர்முவுக்கு அளித்தது. தான் பெற்று சீராட்டி வளர்த்த குழந்தைகள் தன்னிடமிருந்து ஒன்றும் எதிர்பார்க்கமாட்டார்களா? அவர்கள் தேவை அறிந்து அவர்களுக்காகவே வாழ்ந்துவந்த அவளிடமிருந்து இனிமேல், அவர்கள் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லையா?
தர்முவின் மனத்தில் வேதனை பொங்கி வழிந்தது. அவள் தாய் உள்ளம் அதை நம்ப மறுத்தது. ஆனால், பிள்ளைகளும், பெண்களும் மட்டும் என்ன ? குழந்தைகளாக இருந்தபோது, “அம்மா! அது வேண்டும், இது வேண்டும்” என்று நச்சரித்து வந்தார்களே. இப்பொழுதெல்லாம் அம்மாவிடமிருந்து என்ன கேட்கிறார்கள்? பெரியவன் ராமு லீவில் வந்திருந்தபோது டப்பா நிறைய வடகமும், வற்றலும் நிரப்பி அவனிடம் தர்மாம்பாள் கொடுத்தபோது, “என்னம்மா இதெல்லாம் ? யார் தூக்கிக்கொண்டு போகிறது?” என்ற கூறி திருப்பி அம்மாவிடமே கொடுத்து விட்டான். எத்தனை தினுசு பொரியல்கள் இருந்தாலும் வற்றல் இல்லாமல் அவன் சாப்பிடமாட்டான். தர்மாம்பாள் தன்னிடம் அடம் பிடித்து அது வேண்டும் இது வேண்டும் என்று தொந்தரவு செய்து சாப்பிட்ட ராமுதான் அவன் இன்றைக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள். புது புது சூழ்நிலையில் மகன் மாறிவிட்டான் என்று அவள் உணரவேயில்லை.
கோபு ஒருதரம் கிராமத்துக்கு வந்திருந்தபோது முருங்கக் கீரை போட்டு செய்த அடையைச் சுடச்சுட அவன் எதிரில் கொண்டுபோய் வைத்தாள் தர்மு.
“ஐயையே! இதெல்லாம் யாரம்மா சாப்பிடுகிறது? உடம்புக்கு ஒத்துக் கொள்ளுமா என்ன?” என்று கூறி சிறிதாக ஒரு முலையில் பிட்டு வாயில் போட்டுக்கொண்டு தட்டை அம்மா விடம் கொடுத்துவிட்டான் அவன். முருங்கைக்கீரை அடை என்றால் பிராணன் கோபுவுக்கு! சிறுவனாக இருந்த போது அம்மாவுக்குக்கூட வைக்காமல் அடுப்பங்கரையில் புகுந்து திருடித் தின்றுவிட்டுப் போய்விடுவான் அவன். இப்பொழுது கேக்’குகளும் பிஸ்கோத்துகளும் சாப்பிட்டு சாப்பிட்டு வழக்க மாகிவிட்டது அவனுக்கு! முருங்கைக்கீரை அடை சாப்பிடுவதென்றால் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒருவனுக்கு அகௌரவமாக இருக்காதா?
தர்மாம்பாள் பெருமூச்செறிந்தாள். பூமியில் விழுந்த நாட்களாகக் குழந்தைகளுக்கு இது பிடிக்கும் அது பிடிக்கும் என்று அவர்களோடு மனம் ஒன்றி உழைத்து வந்து அவள் கண்ட பலன் என்ன? குழந்தைகள் அவளையே பைத்தியக்காரி யாக்குவது போல், “இதென்னமா இது?” என்று திருப்பிக் கேட் கிறார்கள். சாமிநாதன்தான் விவேகி. தன்னுடைய கடமையைச் செய்து முடித்துவிட்டு இருக்கிறார். பிள்ளைகள் ‘ஹாய்’யா எப்பொழுதாவது கிராமத்துக்கு வந்தாலும் ‘வந்தாயா’ என்று கேட்பதில்லை. கிராமத்தைவிட்டுப் போனாலும் கேட்ப தில்லை. அவரவர்கள் வழி அவர்களுக்கு என்று இருந்துவிடுகிறார் அவர். ஆனால், தர்மாம்பாளின் மனம் அப்படி இல்லை. குழந்தைகள் தன்னை லட்சியம் பண்ணவில்லையே என்று அவளுக்கு மிகவும் வருத்தம். வடகம் பிழிந்து உலர்த்திவிட்டு சாமுவை ஆயிரம் தடவை நினைத்துக் கொள்வாள். முருங்கைக் கீரை அடை சுட்டுவிட்டு கோபுவை வெறுமனே நினைத்துக்கொள்வாள். பிஞ்சுக் கத்தரிக்காயைப் பொரிச்ச கூட்டு செய்துவிட்டு பாலுவை நினைத்துக்கொள்வாள். தொண தொணவென்று பிள்ளைகளைப்பற்றியும் பெண்ணைப்பற்றியும் அவள் எதாவது பேசிக்கொண்டிருந்தால், “ஏண்டி! என்னைப் பார்த்தால் உனக்கு மனுஷனாகத் தோன்றவில்லையா?” என்று சாமிநாதன் மனைவியைப் பார்த்துக் கேட்பார்.
“அவர்களுக்கெல்லாம் வேண்டாதவளாக ஆனமாதிரி உங்களுக்கும் வேண்டாதவளாகப் போய்விடுவேனோ என்னவோ ஒரு நாள்!” என்று சலித்துக் கொண்டே அவர் கேட்பதற்குப் பதில் கூறுவாள் தர்மாம்பாள்.
“சரியான பைத்தியம் நீ!” என்று சிரித்துவிட்டுப் போய் விடுவார் சாமிநாதன்.
தீபாவளி சமீபித்துக்கொண்டே வந்தது. பெற்றோருக்குத் தீபாவளிச் செலவுக்காக சாமுவிடமிருந்து நூறு ரூபாய் பணம் வந்தது. கோபு வேறு ஐம்பது ரூபாய் அனுப்பி இருந்தான். பாலு புது மோஸ்தரில் ஜரிகைக் கரை போட்ட புடவை ஒன்று அம்மாவுக்கு அனுப்பி இருந்தான். நல்ல வேளையாக அம்மா ஆறு கெஜம் புடவை உடுத்தமாட்டாள் என்பது அவனுக்கு நினைவு இருந்திருக்க வேண்டும் ! ஒன்பது கெஜப் புடவையையே அவன் வாங்கி அனுப்பி இருந்தான். அம்மாவும், அப்பாவும் சந்தோஷமாகத் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று வேறு பிள்ளைகள் எழுதி இருந்தார்கள்.
அவர்கள் பெற்றோரிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க வில்லை. ஒன்றும் கேட்டு எழுதவில்லை. தர்மாம்பாளின் மனம் குறைபட்டுக்கொண்டே இருந்தது. அகத்துக்காரரிடம் சொன்னால் அவளைப் பைத்தியம் என்று ஏசுகிறார். குழந்தை களுக்குத் தீபாவளியன்று தன் கையால் ஏதாவது அனுப்ப வேண்டும் என்று தோன்றியது. அந்த அபிலாஷையை அவளால் ஒதுக்க முடியவில்லை. பெட்டியைத் திறந்து தான் சேமித்து வைத்திருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக்கொண்டு அந்த ஊரிலேயே பெரிது என்று யாவரும் மதிக்கும் ஜவுளிக்கடைக்குச் சென்றாள் தர்மு. பிள்ளைகளுக்கு சாதாரண ‘மில்’ வேஷ்டிகளும், நாட்டுப்பெண்களுக்குச் சாதாரண நூல் சேலைகளும் வாங்கினாள். தன் கணவருக்குத் தெரியாமல் கடைக்காரரையே அவாவர்கள் விலாசத்துக்கு அனுப்பும்படி கூறிவிட்டு வந்தாள் தர்மு. சாமிநாதனுக்குத் தெரியாமல் தைரியமாக முதன் முதலாக அவள் செய்த வேலை இதொன்றுதான்.
தீபாவளி இரண்டு தினங்கள் இருக்கும்போது சாமிநாதன், மட்டும் “ஏண்டி! குழந்தைகளுக்கு எதாவது அனுப்ப வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு இருந்தாயே, திடீரென்று அந்தப் பேச்சையே நிறுத்திவிட்டாயே என்றுகூடக் கேட்டார்.
“ஆமாம்….. நீங்கள்தான் கேலி செய்தீர்களே என்னைக் கர்நாடகமென்று! கர்நாடகத்தின் பேச்சென்றால் யார் காதில் போட்டுக் கொள்ளுகிறார்கள் ?” கணவருக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தாள் தர்மு. கணவர் மட்டுமா அவளை படு கர்நாடகமாக மதித்திருக்கிறார்? பிள்ளைகளும் பெண்களும் கூடத்தான் அவ்விதம் நினைத்து அவளை ஒன்றும் கேட்பதில்லையே! தீபாவளிக்கென்று அம்மா அனுப்பி இருக்கும் புடவைகள் துணிகளைப்பற்றித் தூஷித்து அவர்கள் கடுதாசி எழுதாமல் இருந்தால் அதுவே விசேஷமல்லவா? என்ன வேண்டுமானாலும் அவர்கள் எழுதட்டும். அதைப்பற்றி தர்மாம்பாளுக்கு அக்கறை இல்லை. அவளுக்குக் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும் என்கிற அபிப்பிராயம் இருந்தது; செய்தாள். இனிமேல் அவர்கள் பாராட்டினாலும் சரி, தூஷித்தாலும் சரி, அதைப்பற்றிக் கவலை இல்லை.
தீபாவளி அன்று மத்தியான்ன விருந்துக்கு அப்புறம் சாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அடுப்பங்கரை அலுவல்களை முடித்துக்கொண்டு தர்மு வாசலுக்கு வந்தபோது சாமிநாதன் அவளைப் புன்சிரிப்புடன் பார்த்தார்.
“ஏண்டி! எனக்குத் தெரியாமல் பேரம் செய்யக் கற்றுக் கொண்டு விட்டாயோ! எப்பொழுதடி உனக்கு சாமர்த்தியம் வந்தது?” என்று கேட்டார் மனைவியைப் பார்த்து.
“என்னது?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் தர்மு.
“இதோ பார்? உன் பிள்ளைகள் கடுதாசி எழுதி இருக்கிறார்கள்.” தர்மாம்பாள் மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தாள். ராமு எழுதி இருந்தான்.
பிரியமுள்ள அம்மாவுக்கு ராமு அநேக நமஸ்காரங்கள். நீ அனுப்பிய வேஷ்டியும், புடவையும் மிகவும் நன்றாக இருந்தன. நூறு ரூபாயில் உன் நாட்டுப் பெண்ணுக்குப் புடவை வாங்கி இருந்தேன். இருந்தாலும் தீபாவளி அன்று நீ அன்புடன் அனுப்பி இருந்த புடவைதான் விலை மதிக்க முடியாத பரிசு என்று சொல்லி அவள் அதை உடுத்திக் கொண்டாள்.
கோபுவின் கடிதத்தை தர்மு எடுத்தபோது அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.
“அன்புள்ள அம்மாவுக்கு கோபு நமஸ்காரம். சின்ன வயசிலே நீ அன்புடன் வாங்கிக் கொடுத்துக் கட்டிக்கொண்ட சாய வேஷ்டியை உடுத்திக்கொண்டது போன்ற திருப்தியும், பெருமையும் அடைந்தேன். என்னதான் நான் ‘ட்வீட்’ சூட்டு களாகத் தைத்துக் கொண்டாலும் அம்மாவின் அன்பளிப்பாக இருக்குமா அவைகளெல்லாம்?”
தர்முவின் கண்களிலிருந்து ஆனந்தபாஷ்பம் பெருகியது. பாலுவுக்கும் அம்மா பரிசனுப்பியதைப்பற்றித் திருப்திதான். அவன் கடிதத்தைப் படிக்காமலேயே கணவரிடம் திருப்பிக் கொடுத்துவிட்டாள் தர்மாம்பாள்.
சுதேசமித்திரன் தீபாவளி மலர், அக்டோபர் 24, 1954

One Comment on “சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு”
Comments are closed.