சரோஜா ராமமூர்த்தி/கௌரி

நீலத் துகிலிலே வரைந்த அசோகச் சக்கரம்போலக் கதிரவன் குண திசையிலே எழுந்தான். சுப்பையா பிள்ளை அன்று கருக்கலிலேயே மாட்டுச் சந்தைக்குப் பறப்பட்டுவிட்டார்.
“பையன் ராஜு மெலிந்து இருக்கிறானே டாக்டர், பார்த்து ஏதாச்சும் மருந்து கொடுங்க…” என்று முதல் நாள் தன் மகனை வைத்தியரிடம் அழைத்துச் சென்ற சுப்பையா கேட்டார்.
பையன் உடலிலே கோளாறு ஒன்றுமில்லை. கொஞ்சம் பலக்குறைவுதான் என்பதைக் கண்டுகொண்டார் வைத்தியர்.
“பிள்ளைவாள்! பையனுக்கு நோய்நொடி ஒன்றுமில்லை. பால் நிறையக் கொடுங்கள்… மழுமழுன்னு ஆய்விடுவான்” என்றார் வைத்தியர்.
வீட்டுக்கு வந்து மனைவியிடம் கூறியதும் அந்த அம்மாள், “பாலா இந்த ஊரிலே விக்குது? பச்சைத் தண்ணியைப் பாலுன்னு ஊத்தி துட்டு பறிக்கிறாங்களே. ஒரு மாட்டை வாங்கியாந்து கட்டுங்க… குழந்தைக்கு நல்ல பாலாக் கொடுத்துட லாம்…” என்று அபிப்பிராயம் கூறினாள்.
சுப்பையா ராஜுவை அழைத்துக்கொண்டு திருவொற்றியூர் சந்தைக்குப் போயிருந்தார்.
ராஜுவின் தாய் முத்தம்மாவுக்கு அன்று ஒரே மகிழ்ச்சி. வேப்பமரத்தடியைப் பெருக்கி, மெழுகிக் கோலம்போட்டுக் கடைக்குப் போய் தவிடும், பிண்ணாக்கும் வாங்கி வந்து ஊறவைத்திருந்தாள். பித்தளைச் செம்பைத் தங்கம்போல மினுமினுவென்றுதுலக்கினாள்.மகனுக்காகவும்,கணவனுக்காகவும் காப்பியும் சிற்றுண்டியும் செய்துவைத்தாள். கருக்கலிலே கிளம்பியவர்கள் ஒன்பது மணிக்குள்ளே வீட்டுக்கு வந்து விடுவதாகச் சொல்லிப்போயிருந்தார்கள். மேலும், அன்று வெள்ளிக்கிழமை. ராகு காலத்துக்கு முன்பே மாட்டுடன் வந்தாகவேண்டும்.
முத்தம்மாவுக்கு உள்ளே இருப்புக் கொள்ளவில்லை. வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். வீடு நிறையக் கட்டு கட்டாகக் கோலம் புனைந்தாள். வாசற்படிகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்தாள். வெள்ளிக்கிழமை இல்லையா? நினைவு தெரிந்த நாட்களாகச் செய்து செய்து பழகியவளாயிற்றே.
சரியாகப் பத்து மணிக்குப் பிள்ளையும், ராஜுவும் வந்தார்கள். மாட்டை ஆள் ஓட்டி வருவதாகச் சொன்னான் ராஜு. வெள்ளையும் சிவப்பும் கலந்த நிறமாம். சின்னஞ்சிறு வளைந்த கொம்புகளாம். மை பாய்ந்த விழிகளாம். அவனுக்கு மாடும் கன்றும் பிடித்துவிட்டனவாம்.
முத்தம்மாவுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. மெலிந்த மகன் பயில்வான் ஆகிவிடுவான் என்று இறுமாந்தாள். ராகுகாலம் போய்விட்டது. உச்சிவெய்யில் மண்டையைப் பிளந்தது. மாடும். கன்றும் வந்து சேரவில்லை.
“திருவொற்றியூருக்கும், இதுக்கும் பதினாறு கல் இருக்கும் புள்ளே. விளக்கோடதான் மாடு வரும்…”
ராஜுவுக்கு அன்று பள்ளிக்கூடம் செல்வதற்குப் பிடிக்க வில்லை. தாயிடம் மாட்டை வர்ணித்தவாறு சுற்றி சுற்றி வந்தான்:
“ஏலே! சாயங்காலம் மாடு வர்றத்துக்கும் நீ பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போடறதுக்கும் என்னடா சம்பந்தம்? போடா! மணி பத்துக்கு மேலே ஆகல்லே” என்று சந்தையிலிருந்து திரும்பியவுடன் கூப்பாடு போட்டார் பிள்ளை.
ராஜு பள்ளிக்குச் சென்றானோ இல்லையோ? மாலை ஊர் மதகடியிலிருந்து மாடு, கன்றுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான். வேப்பமரத்தடியில் அதைக் கட்டியதும் தவிடும் பிண்ணாக்கும் வைத்தான்.
முத்தம்மா செம்பை எடுத்து வந்தாள். அவள் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவளாதலால் பால் கறக்கத் தெரிந்தவள். கன்றுக்கு ஒரு காம்பை விட்டுவிட்டுக் கறந்தாள்.
“இந்தா புள்ளே!” என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் சுப்பையா. “படி தேறிச்சா?…” என்று கேட்டுச் செம்பைக் குனிந்து பார்த்தார்.
“இருக்குங்க… கண்ணு குடிக்கிற பாலையும் நாம கணக்குப் போட்டுக்கோணும். அப்ப ஒண்ணேகால் படி தேறுங்க…”
“கண்ணுக்குக் கால்படி உட்டியா? நல்ல பொம்பளை நீ… பணத்தைச் சொளை சொளையா இருநூறு எண்ணிக் குடுத்துட்டு வந்திருக்கேன்… ஹும்…”
வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பசு திரும்பிப் பார்த்தது. ‘அட கடவுளே! இருநூறு ரூபா கொடுத்து என்னை வாங்கிப்பிட்டா என் குழந்தை பால் குடிக்கக்கூடச் சொந்தமில்லையாமே! ‘
அது நினைத்ததோ என்னவோ, ராஜுவின் இளம் மனம் தந்தையைப்பற்றிப் பசு அவ்வாறு நினைத்திருக்கும் என்று எண்ணியது.
மாட்டை விலை கொடுத்து வாங்கிவருகிறவர் அத்துடன் பாசம், அன்பு எதையும் வாங்கி வருவதில்லை. வியாபாரக் கண்ணோட்டத்துடன் வாங்கிவருகிறார். தீனி வைத்துக் கறக்கிறார். பாலை விற்கிறார் அல்லது தம் குடும்பத்துக்குப்
பயன்படுத்திக்கொள்கிறார். அந்த மாட்டிற்குப் பால் குறைந்து போனால், அதை மாற்றி இன்னொன்று வாங்குகிறார். பாசத்தையும் அன்பையும் அதன் மீது வைத்துவிட்டால் பிறகு விற்க மனம் வருமா? அடிக்க மனம் வருமா?
சுப்பையா மகனின் வளர்ச்சிக்காகப் பசுவை வாங்கி வந்தார். போட்ட விலைக்கு லாபம் தேறுமா என்று பார்க்கிறார்.
முத்தம்மா அதைத் தன் வீட்டுக்கு வந்த லட்சுமியாக நினைக்கிறாள். அதன் முகத்தில் விழித்தாலே பண்ணிய பாவங்கள் தீரும் என்று நம்புகிறாள். புண்ணியத்துக்கும் பாவத்துக்கும் இடையே ஊசலாடும் நெஞ்சம் உடையவள். கன்றுக்குப் பால்விடாவிட்டால் பாவமாயிற்றே என்று பால்விடுகிறாள். அதிகமாக விட்டுவிட்டால் கணவனுக்கு இழப்பாயிற்றே என்றும் பார்க்கிறாள்.
ராஜுதான் அன்பிலும் பாசத்திலும் ஊறியவன். பசுவைத் தோப்பில் தன் கையில் பிடித்துக்கொண்டவுடன் உள்ளம் நெகிழ, ஊன் உருக அதன் கழுத்தைச் சேர்த்துக் கட்டிக்கொண்டான்.
“கௌரி” என்று அழைத்தான். வேறு எத்தனையோ பெயர்கள் இருக்கின்றன. அவனுக்கு அந்தப் பெயர் பிடித்தது. ஐந்தறிவுடைய அந்தப் பசு அவன் அன்பை நொடியில் புரிந்துகொண்டது. பரிவுடன் தன் கழுத்தை அவன் தோளிலே தேய்த்துக்கொண்டது.
பாலை அன்றிரவு அவன் தாய் காய்ச்சி எடுத்துவந்து அவனிடம் கொடுத்தவுடன், கொல்லைத் தாழ்வாரத்தில் நிற்கும் கன்றின்மேல் அவன் பார்வை செல்லுகிறது.
“பாவம்! மாலை ஐந்து மணிக்குப் பால் குடிச்சிதே. இப்ப அதுக்குப் பசிக்காதா அம்மா?”
‘பசிக்காது தம்பி. அதுக்குத் தான் வைக்கல் கடிக்கத் தெரிஞ்சு போச்சே. பொழச்சுக்கும்…”
ராஜுவின் நெஞ்சில் சர்க்கரை போட்ட பால் கசப்பாகத்தான் இறங்குகிறது.
“நல்லா இருக்கா தம்பி ?… எப்படியோ உன் உடம்பு தேறினாப் போறும்…”தாய்க்கு மகன்மீதுதான் கவலை, பாசம், அன்பு
எல்லாம்.
ராஜு புரியாத ஒருவித ஏக்கத்துடன் படுக்கச் சென்று விட்டான். இந்த உலகம், பெரியவர்களின் செயல்கள், இதெல்லாம் அவனுக்குப் புரியவில்லை.
கௌரி இப்பொழுது அவனுக்கு உற்ற தோழியாக வளர்ந்து வந்தது. அதன் கன்று? அதுதான் போய்விட்டதே? நாலு தினங்கள் தாயின் மடியில் வாய் வைத்து அதற்கு உண்ணத் தெரியவில்லை. ஒருவித மயக்க நிலையில் அது தள்ளாடி தள்ளாடி விழுந்தது, “வயிற்றிலே பூச்சி இருக்கும்” என்று சிலர் சொன்னார்கள். ராஜு புட்டியில் பாலை ஊற்றி அதற்குப் புகட்டினான். “கௌரி, கௌரி, உன் குழந்தையை நான் எப்படியாவது காப்பாற்றிவிடுகிறேன்” என்று அதன் காதில் அவன் கூறியவற்றைக் கேட்டு அது காதுகளைச் சிலிர்த்துக்கொண்டு அவன் கழுத்தை நக்கியது.
ஆனால், நம்மால் முடியாத ஒன்று இருக்கிறது என்பதைச் சிறுவனாகிய ராஜுவினால் எப்படி உணரமுடியும்?
அன்று கால்நடை ஆஸ்பத்திரியிலிருந்து அவன் மருந்தும் கையுமாக திரும்பியவுடன் அந்தக் கன்று உலகத்தைவிட்டே போய்விட்ட செய்தியைக் கேட்டு விக்கி விக்கி அழுதான்.
வாயில்லாத சீவனாகிய அது என்ன பாவத்தைச் செய்திருக்க முடியும்? அதற்கு ஏன் இந்தச் சிறு வயதிலேயே இவ்வளவு பெரிய தண்டனை ? அதன் எதிர்காலம் எவ்வளவு வெளிச்சமாக இருந்திருக்கும் ? பச்சையான வயல்கள், அதன் வரப்பில் படர்ந்து சிலிர்த்து நிற்கும் புற்கள், இளந் தளிர்களையுடைய மரங்கள், எங்கு பார்த்தாலும் இருக்கின்றன. இவற்றைத் தின்று அது உற்சாகத்துடன் உயிர் வாழ்ந்திருக்கக்கூடாதா?
போய்விட்டது. இனிமேல் அதைப்பற்றி யார் நினைத்து உருகப்போகிறார்கள், ராஜுவைத் தவிர.
மாட்டுக் கொட்டிலின் அருகில் சென்று, “கௌரி” என்று அழைத்தான். அது அவனைத் திரும்பிப் பார்த்தது. மை படிந்த அதன் கண்களில் ஒருவித ஏக்கம் காணப்பட்டது.
“கௌரி! நான் என்ன செய்வேன்? உன் குழந்தை…”
அதற்குமேல் ராஜுவால் பேச முடியவில்லை. கன்னங்களின் வழியே கண்ணீர் வழிந்தது.
அதோ மாட்டுக்காரன் வந்துவிட்டான் பால் கறக்க! முத்தம்மாவுக்குக் கன்று செத்த மாடு தன் கைக்குப் பால் கறக்குமோ கறக்காதோ என்று சந்தேகம். மாட்டுக்காரனை அழைத்து வந்துவிட்டாள்.
“நல்லா மூணு படி கோதுமை ‘பாலிஷ்’ போட்டுக் கொண்டாங்க. ருசி மேலே சொரந்துடுங்க…”
கௌரி தவிட்டைத் தின்னாமலேயே சுரந்துவிட்டாள். “நல்ல மாடுங்க இது… பாதி மாடுங்க லேசிலே சொரந்துடுமா?…” என்று நற்சாட்சிப் பத்திரம் படித்தான் மாடு கறப்பவன்.
ராஜு நினைத்தான், கௌரி அவன் பால் சாப்பிடுவதற்காகத்தான் துக்கத்தை ஒதுக்கிவிட்டுப் பாலைச் சுரந்து கொடுத்திருக்கிறாள் என்று.
ஆனால், அவனுக்கு அன்று பாலே சாப்பிடப் பிடிக்கவில்லை.
மாயை சூழ்ந்த இந்த உலகத்தில் துன்பத்தை மறக்கும் ஆற்றலைக் கடவுள் அளித்திருக்கிறான்.
கௌரி அதன் பின்பு இரண்டு கன்றுகளை ஈன்றுவிட்டது. கன்றுகள் நன்றாக வளர்ந்தன. ராஜுவே தன் நண்பர்களுக்கு அவற்றைக் கொடுத்தான்.
கௌரி வளர்ந்துவந்ததைப்போல ராஜுவும் பெரியவனாகத்தான் வளர்ந்துவிட்டான். சுப்பையா வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டுவிட்டார். பட்டணத்திலே விற்கிற விலைவாசியில் அவர் குடும்பம் நடத்த விரும்பவில்லை.
“கிராமத்துக்கு நானும் உன் அம்மாவும் போயிடறோம் தம்பி. நீ மாத்திரம் ஹாஸ்டல்லே இருந்து படிச்சுக்க. நிலத்தைப் பாத்துக்கிட்டு சிக்கனமா காலந்தள்ள முடியும்.”
சுப்பையா மகனிடம் அறிவித்தார். “அப்ப கௌரியை என்னப்பா செய்யறது?’
‘வித்துடப் போறேன் தம்பி. ஊரிலே எங்க இரண்டு பேருக்கும் இவ்வளவு பால் எதுக்கு ? உம் படிப்பு முடிஞ்சப்புறம் உனக்கு வேலை எங்கே கிடைக்குதோ? அப்புறம் ஒரு மாட்டை வாங்கறது…”
“கௌரியை விக்கப்போறீங்களா, அப்பா?” ராஜு உணர்ச்சிவசப்பட்டுக் கத்தியேவிட்டான்.
“ஆமாம் தம்பி. இப்ப வித்தாத்தான் நாம போட்ட முதலுக்கு மோசம் இல்லாமக் கிடைக்கும். அதுக்கும் வயசாயிட்டா விலை கொறஞ்சுதானே போகும்?…”
அப்பா வியாபாரத் தந்திரத்தில் ஊறியவர். அவர் எண்ணத்தையும் செயலையும் மாற்ற முடியாது என்பதை ராஜு நன்றாகத் தெரிந்துகொண்டான்.
கௌரியை இன்னொருவர் கையில் பிடித்துக்கொடுக்கும் போதோ, அதை அவர் ஓட்டிப்போகும்போதோ, ராஜு அந்த வீட்டில் இல்லை. சாலை ஓரமாக அது மெதுவாகத் தன் புது எஜமானனுடன் செல்வதை ராஜு தொலைவில் நின்றே பார்த்தான். சுமக்க முடியாத பெரும் பாரத்தைச் சுமப்பதுபோல் அவன் இதயம் அந்தப் பிரிவுச் சுமையால் அழுந்தியது.
தாயும் தந்தையும் அவனைச் சென்னையிலேயே விட்டுவிட்டுக் கிராமத்துக்குச் சென்றுவிட்டனர்.
அந்த வருடம் தேர்வு முடிவுகள் வெளியானதும் ராஜு” கால்நடை வைத்தியக் கல்லூரியில் படிப்பதற்குச் சேர்ந்தான். பிள்ளைப் பிராயத்திலிருந்து மாட்டிடம் வைத்திருந்த பாசம் அவனை அப்படிப்புக்குச் சேரத் தூண்டியது.
தெருவிலே எந்த மாட்டைப் பார்த்தாலும் நின்று பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு ஒன்று விடுவான்.
கௌரியுடன் அவன் கழித்த அந்த பால்ய நினைவுகள் பசுமரத்தாணிபோல் அவன் இதயத்தின் ஆழத்தில் பதிந்திருந்தன.
தன் வாழ்க்கையில் என்றேனும் ஒரு நாள் கௌரியைச் சந்திப்போம் என்கிற எண்ணம் மட்டும் நிலைத்து நின்றது.
‘வெள்ளையும் சிவப்புமாக, வளைந்த கொம்புகள், மை படிந்த அழகிய விழிகளுடன், மடி நிறைய அமுதமேந்திப் பரிவுடன் பார்க்கும் அவள் …?’ என்று அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறான் பல முறைகள்.
அன்பு முதிர்ந்து பழமாகும் போது அங்கே தெய்வ அருளாகிய கனி பழுத்துக் காணக்கிடைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள்:
கிராமத்தில் சுப்பையாவும் முத்தம்மாவும் இந்த ஐந்தாறு வருடங்களில் முதிர்ந்துவிட்டார்கள். முத்தம்மாவுக்கு வீட்டு வேலைகளில் அலுப்புத் தட்ட ஆரம்பித்துவிட்டது.
“ஒருத்தனும், ஒருத்தியுமா இதென்னங்க வாழ்க்கை ! ராஜுவுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு, அவனோட போயிடு வோம். வாங்க… அவனும் பாஸ் பண்ணிட்டு வேலைக்குப் போயிருக்கான்.
“அதான் புள்ளே சொல்ல வந்தேன். இன்னிக்கிக் காலம்பற பேப்பரிலே நம்ப ராஜுவை, செங்கல்பட்டு மாவட்டத்துக்குக் கால்நடை அதிகாரியா போட்டிருக்காங்கன்னு போட்டிருக்கு நல்ல இடமாகப் பாத்து முடிச்சுட
வேண்டியதுதான்…”
தந்தை பெருமையும், களிப்பும் பொங்கக் கூறினார் மனைவியிடம்.
ராஜு செங்கல்பட்டு வந்ததும் பலர் அவனுக்கு அறிமுகமானார்கள். பெரிய அரசாங்க அதிகாரி அல்லவா? அடுத்த நாளே தாயும் தந்தையும் வந்து பார்த்து மகிழ்ந்தார்கள். மகிழ்ச்சி அவர்கள் மனத்தை மட்டும் ஆட்டி வைக்கவில்லை. ராஜுவின் இதயம் அன்று விடிந்தவுடன் காரணமின்றிக் களிப்படைந்தது. நெடுநாள் காத்திருந்த ஒன்று கைகூடி வருகிறாற்போல் எண்ணங்கள் மனத்தில் எழுந்தன. வெளியிலே ஆளரவம் கேட்டது.
கதிரவன் அன்றொரு நாள் குணதிசையில் எழுந்தவுடன் தன் தந்தையுடன் மாட்டுச் சந்தைக்குப் போய் நின்ற காட்சியை நினைத்துக்கொண்டே ராஜு வெளியே எழுந்து வந்தான்.
“வணக்கமுங்க…” என்று பெரியவர் ஒருவர் எழுந்து நின்று வணங்கினார்.
“வணக்கம். என்ன செய்தி?” என்று கேட்டான் ராஜு.
“நம்ப மாட்டுக்கு ராவுலேந்து ஒடம்பு சொகமில்லீங்க. எழுந்திருக்க முடியாம படுத்துக்கிடக்குது… வந்து பார்த்தீங்கன்னா தேவலை…”
ராஜு கிளம்பிவிட்டான். அந்த வீட்டின் கொல்லைப் பக்கத்தில் ஒரு வேப்ப மரத்தடியில் மாடு படுத்திருந்தது. இருள் பிரிந்து கதிரவனின் ஒளி பரவி வரும்வேளை. மாட்டின் அருகில் சென்று குனிந்து பார்த்தான் அவன்.
‘கௌரி’-கௌரியா அவள்? அந்த கௌரி எங்கே? இவள் எங்கே?’
மேனியில் கை பட்டால் சறுக்குமே அப்போது ! அப்படியொரு பளபளப்பு!
கெளரி தன் பழைய நண்பனைப் புரிந்துகொண்டுவிட்டாள். கண்களை மலர்த்தி ஆவலுடன் அவனைப் பார்த்தாள்.
“கௌரீ!” ராஜு அழைத்தான். ஊசி போட்டான். ஆனால், அவள் பிழைத்து வாழ்வாள் என்கிற நம்பிக்கைமட்டும் அவனுக்கு இல்லை.
கொட்டிலில் சின்னஞ்சிறு கன்று ஒன்று காணப்பட்டது. கௌரியின் கன்றுதான்.
“எத்தனை மாதத்துக் கன்று அது?” என்று அவரிடம் விசாரித்தான் அவன்.
“மூணு மாசம் ஆவுதுங்க. அது பொறந்தப்புறமே மாட்டுக்குச் சீக்குதாங்க… கிழ மாடுன்னு சொல்றாங்க…”
கௌரியா கிழம்? அவள் இருந்த அழகு எங்கே! வாளிப்பெங்கே?
“ஏங்க மாடு பொழக்குமா?…
“சொல்ல முடியாதுங்க… நல்ல மருந்து கொடுத்திருக்கேன். பார்க்கலாம்…”
ராஜுவுக்கு அங்கே நிற்க முடியவில்லை. கௌரியை அவன் பார்த்த நிலை? அதையா விரும்பிக் காத்துக் கிடந்தான் அவன் ! அன்று மாலையே அந்த மாட்டுக்காரர் ராஜுவின் வீட்டுக்கு வந்தார்.
“என்னங்க? மாடு எப்படி இருக்கிறது?”
“போயிட்டுதுங்க…” சாதாரணமாக கூறினார் அவர்.
‘அதாலே எனக்கு நஷ்டம் ஒண்ணும் இல்லீங்க. இந்த அஞ்சாறு வருஷத்திலே மூணு கண்ணு போட்டுது… நல்லாக் கறந்தது. லாபம் தாங்க… கிழமாயிடிச்சு பாருங்க….”
“ஹும்…” எங்கோ சூன்யத்தைப் பார்த்தபடி நின்றான் ராஜு”, “உங்களுக்கு பீஸ் கொடுக்கணுங்க… அதக்குப் பதிலா அதன் கன்றைக் கொடுத்துப்பிடறேன். நல்ல சீமை ஜாதிங்க…”
ஏக்கப் பெருமூச்சுடன் ராஜு அவரைத் திரும்பிப் பார்த்தான். “வேண்டாம் ஐயா… எனக்கு நீங்க ஒன்றும் தர வேண்டாம்…” வந்தவர் திகைத்து வந்த வழியே திரும்பினார்.
உலகமே லாபத்திலும் நஷ்டத்திலும் உருண்டு நிமிர்ந்து வாழ்கிறதுபோலும்.
மாடு இறந்தாலும் தனக்கு இழப்பில்லை, லாபமென்கிறார் மாட்டுக்காரர்.
உண்மையில் நஷ்டமடைந்தவன் ராஜுதான். இரு உயிர்களின் அன்புப் பிணைப்பிலிருந்து ஓர் உயிர் பிரிந்து சென்றுவிட்டதென்றால் மற்றதற்கு இழப்பே அல்லவா?

சரோஜா ராமமூர்த்தி/அம்மாவின் அன்பளிப்பு – விருட்சம் நாளிதழ்

One Comment on “சரோஜா ராமமூர்த்தி/கௌரி”

Comments are closed.