தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஜனநாயக முறையில் ஆலய நிர்வாகம்

(டாக்டர் ச மெய்யப்பன் நூலிலிருந்து)

தர்ம சாஸ்திரத்தில் சிவனுக்கு வேத விதிப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்றும் சிவ பூசைக்குச் சம்பளம் வாங்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்படி நடக்கும் கோயில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒன்றே. இத் திருக்கோயிலில் வேத விதிப்படியே பூசை நடக்கிறது.
தீட்சிதர்கள் முற்காலத்தில் அவரவர் பூசை முறையில் இரவு சந்நிதானக் கதவு பூட்டும் போது சுவர்ண கால பைரவர் திருவடியில் செப்புத் தகட்டை வைத்து விட்டுச் செல்வர். காலையில் கதவு திறந்து பார்க்கையில் பைரவர் அருளால் செப்புத் தகடு தங்கத் தகடாக இருக்கும். அதை வைத்து அடுத்த பூஜை முறை வரும் வரை தம் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவர். இப்படி தீக்ஷிதர்கள் வேறு வருவாய் முறையில் ஆசைப் படாமல் சிவ பூஜையில் ஈடுபடுவர்.

செப்புத் தகடு தங்கமாய் மாறுவது எந்தக் காலத்தில் எதனால் நின்றது என்று தெரியவில்லை. இந்தக் கோயிலுக்கென்று சொந்தமாக நிலம் எதுவும் இல்லை. ஆறு கால பூஜைகளும் விஷேச பூஜைகளும் திருவிழாக்களும் பல்வேறு கட்டளைகள் நிலமாகவோ சொத்தாகவோ ஏற்படுத்தப்பட்டு அந்தக் கட்டளைகள் உபயமாகவே தீட்சிதர்கள் பூசை செய்து வருகின்றனர். தீட்சிதர்கள் குடும்பச் செலவுகளும் அந்தக் கட்டளைகள் மூலமாகவே நிறைவேற்றப்படும்.

“ஜனநாயக முறைப்படி ஒரு ஆலய நிர்வாகம் நடக்கிறது என்றால் அந்த அதிசயம் தில்லைக் கோயிலுக்கு மட்டுமே உண்டு” என்று வியப்படைகிறார் பழைய தென்னாற்காடு ஆட்சியர் ஜே எச் காரஸ்டின் (1878).