நடேசனார் தலைமையில் வேகமான பணிகள்!
1912இல் ஐக்கிய சங்கத்தை ஏற்படுத்தியவர்கள், தங்களுக்கு ஒரு தலைவர் தேவை என்று தேடினார்கள்.
அந்த நாட்களில் சென்னை நகரில் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர். நடேசமுதலியாரைச் சந்தித்தார்கள்.
டாக்டர் நடேசமுதலியார் மகிழ்ச்சியோடு அச்சங்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதன் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
மருத்துவத் துறையில் எல்.எம்.எஸ். பட்டம் பெற்ற டாக்டர் நடேசனார், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
சேரி மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்த்து, அவர்களின் அன்புக்குரியவராக விளங்கினார்.
பஞ்சைப்பனாதிகளாக, பகல்பட்டினிகளாக, சோகத்தின் பிம்பங்களாக நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்க,
தங்கமும் வைரமும் பளபளக்கப் பார்ப்பனர்கள் பகட்டான வாழ்வு வாழ்கிறார்களே- எப்படி?
புகழின் உச்சியில் வாழ்ந்த தமிழன் வறுமையில் வாடி வதைகிறானே- ஏன்? எதனால்? இப்படி யெல்லாம் சிந்தித்துத் தெளிவு பெற்றவர் அவர்.
மக்களின் அறியாமை இருளைப் போக்கி, அவர்கள் வாழ்வில் மறுமலர்ச் சியை ஏற்படுத்த வேண்டும் என்ற துடிப்போடு வாழ்ந்து வந்தவர்.
டாக்டர் நடேசனாரின் முன்னோர்கள், சென்னையை அடுத்த பான்னேரியைச் சேர்ந்த சின்னக் காவணம் என்ற கிராமத்தைச் சேர்த்தவர்கள்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக் கேணியில் குடியேறினார்கள். பெரிய தெரு என்று வழங்கப்படும் வீரராகவ முதலித்தெருவில் வசித்துவந்தனர்.
நடேசன், கிருஷ்ணசாமி முதலியாரின் மகனாக 1875ஆம் ஆண்டு பிறந்தார். அவர் சிறுவயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார்.
அவருக்குத் தெலுங்கு அ, ஆ, வன்னாதான் சொல்லித் தரப்பட்டது. தமிழ்ப்பள்ளி அருகில் இல்லாததால், தெலுங்குப் பள்ளியில் அவரைச் சேர்த்திருந்தனர்.
தொடக்கப்பள்ளியில் தெலுங்கு படித்த நடேசனார், உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் தெலுங்கு மொழியையே விருப்பப் படமாக எடுத்துக்கொண்டார். பல்கலைக்கழகப் பட்டத்தையும், அம்மொழியிலேயே பெற்றார்.
அதன் பின்னர் அவர் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். பெரிய பெரிய பட்டங்களைப் பெற்ற மருத்துவர்களை விட, அவர் பெயர் பெற்ற வல்லுனராக விளங்கினார். ஏழை எளியவர்களிடம் அவருக்குத் தனிப்பற்று. பணம் வாங்கமாட்டார். பார்ப்பனர், பார்ப்பனல்லாதார் என்ற வேறுபாடு இல்லாமல், எல்லோருமே அவரிடம் வந்தார்கள். “கைராசிக்கார டாக்டர்” என்று மக்கள் அவரைப் பற்றிப் பாராட்டிப் பேசுவார்கள்.
மருத்துவத் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு, பித்தாபுரம் மகாராஜா கல்லூரியில் விரிவுரையாளராகவும், பின்னர் சென்னை யில் பிரபலமாக இருந்த கார்டன் உட்நாம் கம்பெனியில் உதவி துபாஷாகவும் அவர் பணியாற்றினார். அந்த வேலைகள் அவருக்கு மனநிறைவைத் தராததால், மருத்துவத் தொழிலை மேற்கொண்டு, தாம் செய்த சேவையால் பேரும், புகழும், செல்வமும் அடைந்தார். நடேசனார் செயலாளராகப் பொறுப்பேற்று நடத்தி வந்த சென்னை ஐக்கிய சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.
