
- எழுத்து 1960-61 கவிதைகள்
‘எழுத்து’வின் இரண்டாவது ஆண்டு புதுக்கவிதையின் தரமான, வளமான, வளர்ச்சிக்கு வகை செய்தது. பிச்சமூர்த்தியின் கட்டுரையும், தலையங்கமாக வந்த செல்லப்பாவின் கருத்துக்களும் பல எதிரொலிகளைப் பெற்றன. அதே சமயத்தில், கவிதை உள்ளமும் கற்பனை வீச்சும் உணர்வோட்டமும் உடைய உற்சாகிகளைக் கவிதை எழுதத் தூண்டின. புதிய நோக்குடன் சிந்தனை விழிப்போடும் சோதனை ரீதியில் கவிதை எழுதும் உற்சாகத்தைச் சிலருக்குத் தந்தன.
கவிதை பற்றிய கட்டுரைகளும் அதிகம் தோன்றின. கவிதைக் கலை பற்றி முருகையனும், கவிதை வளம் சுயேச்சா கவிதை பற்றி தருமசிவராமுவும் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவை.
ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கனமான கட்டுரைகளை ‘எழுத்து’ வில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த தரும சிவராமு 1960-ல் உணர்வு அனுபவங்களும் கற்பனை வளமும் நிறைந்த கவிதைகளை எழுத முற்பட்டார். அவருடைய முதல் கவிதை ‘நான்’-த.சி.ராமலிங்கம் என்ற பெயரில்-எழுத்து 13-வது ஏட்டில் பிரசுரமாயிற்று.
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்று மற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெல்லாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
இப்படிப் பிறந்து வளர்வது அக்கவிதை.
தரும சிவராமுவின் இரண்டாவது கவிதை ‘பயிர்’ 23வது இதழில் வந்தது. அவருடைய கவித்துவத்துக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு அது.
வேலிகட்டா வானத்தில்
வெள்ளிப் பயிர் வளர்க்க
தாலிகட்டிச் சக்தியினை
ஈர்ப்பென்ற நீர்பாய்ச்சிக்
காலமெல்லாம் காத்திருக்க
வைத்துவிட்டய்; வைத்துமென்ன?
ஊழியென்ற பட்சி அவள்
அயர்ந்திருக்கும் வேளையிலே
வேலிகட்டா வானத்தில்
வெள்ளி விதைகளெல்லாம்
அள்ளி விழுங்குவரை
நீர்பாய்ச்சி என்ன பயன்
வேர்முளைக்கக் காணோமே!
முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய கி.கஸ்தூரி ரங்கன் ‘கற்பனைப் பெண்’ என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்கொண்டார். அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு.
மஞ்சம் ஒழிந்திருக்கப்
பஞ்சணைகள் பூத்திருக்க
கன்னம் செவ செவக்கக்
கற்பனையே பெண்ணே
நீ
நெஞ்சில் துயிலுவதேன்-என்
நெஞ்சில் துயிலுவதேன்?
உதயம் ஒளித்திசையில்
உருவாவ தறியாமல்
இதயம் துடித்திசைக்கும்
இன்பத்தா லாட்டுக்களில்
கதையாம் கவிதைகளாம்
கனவுகளாகக் கண்டு கொண்டு
கண்ணில் உறங்குவதேன்-என்
கண்ணில் உறங்குவதேன்?
நெஞ்சோ முட்படுக்கை! என்
கண்ணோ கனலிருக்கை!
பஞ்சோ பொறியருகில்?
மலரோ முள்ளின் மேல்?
நஞ்சோ அமுதமாகும்?
நானோ(உ)ன்னருள் பெற்றேன்!
வேறு சிலரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினார்கள். எனது கவிதைகள் இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ) 16-வது இதழில் இடம் பெற்றன.
பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இணைத்து அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, போலி, திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங்களில் ‘எழுத்து’ ஏடுகளில் பிரசுரமாயின.
ஜெகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீயார் – எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது.
நீ யாரென்றேன்
அழுக்கு என்றாய்
பேரேதென்றேன்
பொய் என்றாய்
ஊரே தென்றேன்
இருள் என்றாய்
ஒளியே
உயிரே
உயர்வே, வா!
அழுக்கின் உருவே அருகில் வா-உனை
அணைத்துக் கொள்வேன் அஞ்சாதே
உலகின் அழுக்கைச் சுமந்தாலும்
உள்ளத் தழுக்கில்லா உருவே
அழுக்கைக் கடந்து வந்துவிட்டாய்-நீ
அழுக்கின் உருவம் கொண்டுவிட்டாய்
பொய்யின் உருவே அருகில் வா உனைப்
புரிந்து கொண்டேன் ஓடாதே
உலகின் பொய்யைச் சுமந்தாலும்
உள்ளப் பொய்மையில்லா-உருவே
பொய்யைக் கடந்து வந்து விட்டாய்-நீ
பொய்யின் உருவம் கொண்டுவிட்டாய்.
இருளின் உருவே அருகில் வா-நாம்
இணைவோம் ஒன்றாய் விலாகதே
உலகின் இருளைச் சுமந்தாலும்
உள்ளத் திருளில்லா உருவே
இருளைக் கடந்து வந்து விட்டாய் – நீ
இருளின் உருவம் கொண்டு விட்டாய்.
அழுக்கின் உருவே உன்னிதழில்
அமுதம் ஊறுவதெப்படியோ?
பொய்யின் உருவே உன்னகத்தில்
புனிதம் ஒளிர்வதெப்படியோ ?
இருளில் உருவம் உன் விழியில்
அருளொளி வீசுவதெப்படியோ ?
தி.சோ. வேணுகோபாலனும், டி.கே. துரைஸ்வாமியும் தங்கள் சோதனைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர்.
வேணுகோபாலன் வாழ்க்கைத் தத்துவங்களை சாதாரண நிகழ்ச்சிகளோடு பொருத்திக் காட்டி எளிய முறையில் கவிதைகள் இயற்றினார். உதாரணத்துக்கு ‘ஞானம்’ என்பதைக் கூறலாம்.
சாளரத்தின் கதவுகள், சட்டம்
காற்(று) உடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்
கறையான் மண்வீடு கட்டும்.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை
கந்தைத் துணி, கட்டைத் தூரிகை!
அறப்பணி ஓய்வதில்லை,
ஓய்ந்திடில் உலகம் இல்லை!
‘ஸட்டயர்’ ஆக– பரி்காசத் தொனியோடு எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். ‘விசாரணை’ என்பது இந்த ரகத்தைச் சேரும்.
தத்துவந்தானே? வெங்காயம்!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி! முடிவா?
உரித்தால் மேலும் உரித்தால்
கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்!
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!
உனக்கும் எனக்கும்
முடிந்தால்
இதயத்திற்கு மருந்து!
அனேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!
என்று மேலும் வளர்கிறது அது.
‘இலக்கிய அனுபவம்’ என்பதும் நல்ல கிண்டல்தான்.
சொல்வ திரண்டு வகை
சிந்தித்துச் சொல்லல்!
சிந்தை இலையாதல்!
கரகம் அல்லது
கண்கட்டு;
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கலைஞன்!
முழிப்பவன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!
டி. கே. துரைஸ்வாமி சோதனைக்காகவே சோதனை என்ற தன்மையில் கவிதை முயற்சிகளில் தீவிரமாக முனைந்தது போல் தோன்றுகிறது. படிப்பவரைக் குழப்பமுற வைப்பது அவரது கவிதைகள் சிலவற்றின் முக்கிய நோக்கம் என்று எண்ண வேண்டியிருக்கிறது. க.நா.சு. புதுக்கவிதைக்கு வகுத்த இலக்கணத்தை-’கவிதை சிக்கலும் சிடுக்கும் நிரம்பியதாக இருக்கவேண்டும். தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால் சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச் சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும். அதேசமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது’ என்பதை அப்படியே பின்பற்ற ஆசைப்பட்டவர் துரைஸ்வாமி என்று எனக்குப்படுகிறது.
‘வர்ணபேதம்’ என்ற கவிதையை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
கற்புக்கு முல்லை;
கட வுளுக்குத் தாமரை;
காமத்துக்கு அல்லி;
என்று சொன்னால்;
முல்லைக்கு வெள்ளை;
தாமரைக்குச் சிவப்பு;
அல்லிக்கு இருட்டு;
என்று சொன்னால்
முல்லை மலர
அல்லி சோரும்
தாமரை மலர
முல்லை சோரும்;
அல்லி மலர
என்ன சொல்ல?
என்று சொன்னால்;
எங்கு சென்றால்,
என்ன செய்தால்
அல்லி முல்லையாக,
முல்லை மரையாக,
மரையும் அல்லி மலராக
மாற்றத்தில் மாற்றமுற.
ஏகம் அநேகமாக
அநேகம் ஏகமாக,
வருவது உண்டோ?
செய்வது அரிதோ?
என்று சொன்னால்?
இதில் ஏதோ மர்மம், பொருள், தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு மூளைக்கு வேலை கொடுக்க அவதிப் படட்டுமே என்பதுதான் கவிஞரின் அந்தரங்க நோக்கமாக இருக்கமுடியும்!
வசனத்தையே கவிதை என்று தருவதும் துரைஸ்வாமியின் சோதனை முயற்சிகளில் ஒன்று. ‘அறியாதவர் ஒருவருமில்லை’ என்பது கவிதையாம்.
“சுவரொட்டியாகவும் சீவனற்ற முதலையாகவும் அசட்டுத் தவிட்டு நிறம் பூண்டு, சந்தடி செய்யாது தன் இரைமீது பதுங்கிப் பாய வரும் வீட்டுப் பல்லியை அறியாதவர் யாருமில்லை.
எச்சிலால் வலை பின்னி, அதன் நடுவே தன் எண்கால் பரப்பி வந்து சிக்கும் ஈக்கும் பூச்சிக்கும் சலனமற்றிருக்கும் சிலந்தியை அறியாதவர் ஒருவருமில்லை.
மண்டையெல்லாம் கண்ணாக, அழுகல் சிவப்பு முகமும், புழுவுடலும், சிறு இறகும், விஞ்ஞானம் ஆவிர்ப்பளித்த பேயாகவும், சுத்தா சுத்தமறியாத அபேதவாதியாகவும் மொய்த்துச் சலிக்கும் ஈயென்ற வொன்றை அறியாதவருமில்லை.
கூட்டமாக அணிவகுத்து, அசட்டுக் கடுஞ்சிவப்பு நிறந் தாங்கிச் சிந்திய ரௌத்திரத் துளிகள் போல் தடுத்தோரைக் குதறித் தள்ளி அடுத்த நிமிஷம் சாவதற்கு விரையும் இக் கட்டெறும்புக் கூட்டத்தையும் நாம் அறிவோம்.”
இது கவிதை (புதுக் கவிதை) என்று சொல்வதானால், லா.ச. ராமாமிர்தம் எழுதியுள்ள கதைகள் அத்தனையும் மணி மணியான கவிதைகளே என்று ‘சத்தியம் பண்ண’ வேண்டியதுதான்1
துரைஸ்வாமியின் ‘காத்திருந்தேன்’ நல்ல கவிதை. ஒருவனது வருகை நோக்கிக் காத்திருக்கும் ஒரு நபரின் தனிமையை, மன உளைச்சலை, உணர்ச்சி சுழிப்புகளை விரிவாகச் சொல்லுகிறது இது.
‘திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க, ஒரு தரம் படிப்பவருக்கும் ஒரு வேகம், ஒரு எதிரொலிக்கும் தன்மை, விடாப்பிடியாக உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் ஒரு குணம் இருக்க வேண்டும் புதுக் கவிதையிலே’ என்று க.நா.சு. வகுத்துள்ள இலக்கணத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளது. ‘கொல்லிப் பாவை.’
‘திரௌபதி அவள்
வந்து போகும் அர்ச்சுனன் நான்’
என்ற வரிகள் விளக்கம் கூறப்பெற்று, திரும்பத் திரும்ப ஒலிக்கின்றன இக்கவிதையில்,
‘பேதாபேதம்’ என்றொரு கவிதை. இது வேறு ரகமான சோதனை.
மண்புழு
மண்ணைப்
பொன்னாக்கும்!
இலைப்
புழு
பட்டு நெய்யும்!
மனிதரில்
சிலந்தியும்
பெண்டிருட்
சிதலும்
உண்டு.
‘அலங்காரம்’ என்றொரு சொல்லடுக்கு.
மயிற்கண்
முலைப்பால்,
நெடுவேனில்
கார்காலம்
சென்று தேய்ந்திறுதல்,
கொல்லிப்பாவை;
மன்னுமிவ்வுலகு.
இப்படிப்பட்ட சோதனைகளினால் புதுக் கவிதைக்கு வளம் சேர்க்க முயன்ற பெருமை துரைஸ்வாமிக்கு உண்டு.
1960-61 ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் அறிமுகமாகி வளர்ச்சி பெற்ற கவிஞர்களில் முக்கியமானவர் சி.மணி.
இவரது முதல் கவிதை ‘குகை’ 15-வது ஏட்டில் பிரசுரமாகியுள்ளது. ஏதோ இருள் மனக் குகை ஓவியம். அதிலும் ஒரு வசீகரம் இருக்கிறது. அடுத்து, 18-வது இதழில் வந்த ‘அரக்கம்’ உலக இயல்பைக் கூறுகிறது.
வாடிய பூக்களில் வீழ்ந்து ஒழிந்தாலும்
விழித்த மலர்கள் சிரித்து மினுக்கும்;
ஈன்ற வாழை இளைத்துச் சாய்ந்தாலும்
உயிர்த்த கன்று முகிழ்த்து மிளிரும்
வீசிய விண்மீன் சரிந்து அணைந்தாலும்
மிகுந்த மீன்கள் விரித்துச் சிமிட்டும்;
ஊட்டிய அன்னை உழைத்து ஓய்ந்தாலும்
எஞ்சிய குமரன் குமரியைப் பிடிப்பான்.
சி. மணியின் ‘மறுப்பு’ (எ. 19) மனக்குகையின் இருள் காட்சியாகத் தான் ஒளியிடுகிறது. ஸர்ரியலிஸ ஓவியம் மாதிரி இருக்கிறது இதில் வர்ணிக்கப்படுகிற காட்சி.
ஓடிந்த அநாதை நிலா
தொழுநோய்க் கூனனாக
பிரேதக்களை ஓளிர
மருந்து தேடித்தேடி அலைய,
வழிந்த சீழ் உருண்டோடி
மஞ்சற் கட்டியாகி
நெஞ்சு வலியாய்த் துடிக்க,
சீ முனையில் வெடித்த பல முகில்கள்
மனக் குகையின் இருள் வடிவாய்
பேய்க்கணமாய் ஆந்தையாய்ப் பரவி
வானுக்குக் கிழிந்த திரை போட
என்று மேலே மேலே போகிறது கவிதை. அதெல்லாம் ஏன் ஏற்பட்டது?
இளமைக் குவியலாய்
இன்ப நுகர்ச்சியாய்
ஆடிப் பாடிய நான்
ஓரே கணத்தில்
விரக்தி வடிவாகி நரைக்கக்
காரணம். கன்னி ஒருத்தி அவன் ஆசையோடு நெருங்கி கேட்டபோது, அவள்
‘தனி ஊசல் போல
இடவலமாய் தலையசைத்’ததுதான்!
காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின் வாழ்க்கைச் சூன்ய நோக்கை இக்கவிதை சித்திரிக்கிறது.
‘இருளின் நிழல்’ என்பதும்
சாக்காட்டு உலகில்
என்னை விட்டு
கூடு விட்ட பறவையென
ஓடி மறைந்த ‘பெண்ணை எண்ணிப் பித்துற்ற மனசின் விரக்திப் புலம்பல்தான். ‘கதவை மூடு’ வேறு தொனியில் அமைந்துள்ளது. ஆயினும், இதிலும் விரக்தியே மேலோங்கி நிற்கிறது.
கதவை மூடு
வீங்கி விரிந்த மாநிலம்
துவண்டு விழுந்தால் ஆறடி
வாழ விட்ட பூமகள்
சாய்ந்ததும் செரித்திடுவாள்;
அபூர்வமாய் பெற்ற மகனாய்
நீ வளர்த்த நாயும் கடிக்கும்;
நோய் பிடிக்க கடனேற
நீயே
உனக்கு எதிராவாய்;
கதவை மூடு, கதவை மூடு
நகையாய் வெறுத்த உடை
நலிந்தும் கூடையிலே;
பூவையர் குழல் பூச்சரம்
வாடியதும் குப்பையிலே
விளங்க வந்த மனைவிக்கு
மாத முடிவில் மூலையிலே;
வானுக்கு உயிரூட்டி
சிரித்தேகும் எரிகல்
உதிர்ந்ததும் ஒன்றுமில்லை
காற்றேன்? மூச்சேன்?
கதவை மூடு, கதவை மூடு,
கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து விட்டார்கள். இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும், நிலவை ரசிப்பதிலும் வியந்து பாராட்டுவதிலும் மனித மனசுக்கு அலுப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.
நிலவை புதியதோர் கோணத்தில் பார்த்து (புதுக்)கவிதை செய்தார் எஸ். வைதீஸ்வரன் அருமையான படைப்பு. ‘எழுத்து’வில் வந்த அவருடைய முதல் கவிதை இதுதான். 34-35 என்று இரட்டை இலக்கமிட்ட ஏட்டில் பிரசுரமாயிற்று.
கிணற்றில் விழுந்த நிலவு
கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோய விடு
நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு
கலைமேவும் அவள் குழலைக் காற்றிலே கோதி விடு
அலைக்கும் அவள் மார்பை அல்லிக்கொடி அணைக்க விடு
மருண்ட முகம் தெளியத் திருமஞ்சள் பூசி விடு
ஈதனைத்தும் செய்து விட்டு இதமான கவிதைகளால்
ஒத்தடங்கள் கொடுத்து விடு
உடலெங்கும் தேன் பூசிப் பத்திரமாய்ப் பெண்ணிவளை
வான் முனையில் கொண்டு விடு
இருட்டு முடியுமுன்னே, இரவு முடியுமுன்னே
திருஷ்டி கழித்தவளைத் திருப்பி யனுப்பி விடு
இவ்வாறு இன்னும் பல வரிகளைக் கொண்டது இக்கவிதை. இதற்கு ‘ஒட்டு’ம் ‘வெட்டு’ம் ஆக இரண்டும் கவிதைகள் எழுதினார் தி.சோ. வேணுகோபாலன்.
கற்பனை விரிவும் கருத்தாழமும் உணர்வோட்டமும் கொண்ட கவிதைகள் அவை. நிலவைக் கற்பரசியாகக் கொண்டும் நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் ஒட்டும் வெட்டும் படைக்கப்பட்டுள்ளன இவை ‘எழுத்து’ 36-ம் ஏட்டில் இடம் பெற்றன.
‘எழுத்து’ 36-வது இதழ் அருமையான கவிதைகள் பலவற்றுடன் விளங்கியது. வேணுகோபாலனின் ‘ஒட்டும் வெட்டும்’ டி.கே. துரைஸ்வாமியின் பேதாபேதம், அலங்காரம் சிலேடை ஆகிய ‘மூன்று கவிதைகள்’ இவற்றுடன் டி.சி. ராமலிங்கம் (தரும சிவராமு) கவிதைகள் ஐந்தும் இதில் வெளிவந்தன.
படிமச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகப் பலரால் பல இடங்களில் கையாளப் பெற்றுள்ள ‘விடிவு’ இவ்வைந்து கவிதைகளில் ஒன்று.
பூமித் தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்
தின்னும் கிருமி
வெளிச்சச் சிறகில்
மிதக்கும் குருவி
தரும சிவராமுவின் கவிதையாற்றலின் வளர்ச்சியைக் கூறும் படைப்புகள் இவை. விடிவு, மாலை, நிழல்கள், சைத்ரீகன், மறைவு ஆகியவை கற்பனை நயத்தையும் சிந்தனைச் செறிவையும் விளக்கும் கவிதைகள். ‘எழுத்து’வின் ‘மூன்று ஆண்டுகள்’ வளர்ச்சி குறித்து 36-வது இதழில் வந்துள்ள தலையங்கம் கவிதைகள் பற்றியும் பேசுகிறது–
‘எழுத்து’வில் சுமார் 90 கவிதைகள் வந்திருக்கின்றன. எழுத்துவில் வெளியான கவிதைகள் பொருள் விளங்காத சொற்கள் பலவற்றால் பிணைத்துக் கட்டப்பட்ட கரடு முரடான கதம்ப மாலைகளாக உள்ளவை என்ற ஒருவாசகர் கருத்தை புதுக்கவிதை பற்றி ஓங்கியடித்துச் சொல்லும் பாதகமான ஒரு அபிப்பிராயத்தின் பிரதிநிதித்துவக் குரலாக கருதுகிறோம். இந்த இடத்தில் அதைப் பற்றி விவாதிக்க இடம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இந்த மாதிரி கருத்துக்கள் கிணற்றுத் தவளை வாழ்வினால் ஏற்படுவது. இலக்கியச் சிறப்பான உலகத்து பல்வேறு மொழிகளிலும் தற்காலக் கவிதைநிலை எப்படி இருக்கிறது என்பதை உணர முடிந்தவர்கள்தான் இந்த புதுக்கவிதை வளர்ச்சியைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். அன்றைய பாரதியையே கவியாக இன்னும் உணரமுடியாத சூழ்நிலையில் இன்றைய புதுக்கவிதை சோதனைக்கார முதல்வன் பிச்சமூர்த்தியையும், எழுத்து மூலம் முளைவிட்டு வரும் இளம் கொழுந்துகளையும் புரிந்துகொள்ள, புதுக் கவிதைகளின் தன்மைகளை உணர கொஞ்சம் போகவேண்டும். எழுத்து மூன்று ஆண்டுகளாக, சலிக்கும்படி கேட்க ஏற்பட்ட இது போன்ற கருத்துக்களைக் கண்டு ஆத்திரப்படாது. இந்த கருத்து மாறச் செய்யும் முயற்சியாக வழிவகைகளை ஆராய்ந்து செல்வது மூலம்தான் பாரதிக்குப் பின் இந்த புதுக் கவிதை பிறப்பு காலகட்டத்தை செழிப்பாக்க முடியும்.”
