விஞ்ஞானி/டீத்தண்ணி

இந்த குளிருக்கு சூடா
டீத்தண்ணி குடிச்சா
என்று இழுத்த குரலுக்கு
உடனே எழுந்து ஓடி போய்
அடுப்பை பற்ற வைத்தாள்

கன மழையை தன்னால்
முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது குடிசை

பழகி போனதால் குடும்பம்
பாதுகாப்பான இடம் செல்ல
தயாராகவே இருந்தது.

அடுப்பில்
கொதிக்கும் தண்ணீரில்
டீத்தூளை போட்டுவிட்டு
கட்டி வைத்த மூட்டையில்
சர்க்கரையை தேடும் போது

காவா தண்ணி‌ கரையை
தாண்டி வருது சீக்கிரமா
எல்லாரும் போயிடுங்க
என்ற எச்சரிக்கை குரல்
கேட்டது

மூட்டை முடிச்சுடன்
எல்லோரும் ஓட
அவளும் கொதிக்கும்
டீத்தண்ணியை எடுத்து
எரியும் அடுப்பில் ஊற்றி
தீயை அணைத்து விட்டு
அவர்கள் பின்னால்
ஓடினாள்