கல்கி வளர்த்த கலைகள்

வீணை தனம்மாள்

ஜகந்நாத பக்தசபையில் நடந்த தனம்மாள் இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். பக்க வாத்யம் எதுவும் கிடையாது. வீணையை வைத்துக் கொண்டு அம்மாள் மட்டும் பாடினார். அவருடைய புதல்வி விஜயம்மாள் சற்று இடை இடையில் துணையாகப் பாடினார். அவ்வளவுதான். கச்சேரியைக் கேட்டபிறகு யாருக்கும் சங்கீதத்துக்குப் அந்தக் பக்கவாத்தியங்கள் அவசியந்தானா என்ற சந்தேகம் தோன்றாமல் போகாது. பல்லவி பாடுவதைப் பற்றி ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் அபிப்பிராயத்தை
ஆமோதிக்கலாமென்றும் தோன்றக்கூடும்.

சங்கீதக் கருவிகளுக்குள்ளே சிறந்தது வீணை என்று சொல்லவே வேண்டியதில்லை. பாரத தேசத்தின் சங்கீதத்துக்குச் சின்னமாக விளங்குவது வீணைதான். சங்கீத தேவதை பயிலக்கூடிய வாத்தியம் உண்டானால் அது வீணையாகத்தான் இருக்க
வேண்டும். தனம்மாள் வீணை வாசிக்கும்போதோ சங்கீத தேவதை நமது எதிரில் வந்து உட்கார்ந்து வாசிப்பது போலவே பிரமை கொள்கிறோம்
ஆனால் அம்மாள் பாடும்போது இந்த பிரமை நீங்கிவிடுகிறது, என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வயது கொஞ்சமா, நஞ்சமா? அறுபதுக்கு மேலல்லவா ஆகிறது? சாரீரத்தில் இனிமை போய் விட்டது. எனவே வீணையின் இனிமையை மிகைப் படுத்திக் காட்ட அம்மாளின் சாரீரம் பகைப்புலனாகப் பயன்படுகிறதென்றே சொல்லலாம். அவருடைய பாட்டு! எத்தகைய பாட்டு! என்ன ஆனாலும் பிடிப்பு! என்ன அழுத்தம்! என்ன கமகம்!

ஒருவருடைய ஹிருதய உணர்ச்சி முழுவதும் பாட்டின் வழியாக வெளிப்படக்கூடுமானால் அது தனம்மாளின் பாட்டிலேதான். அம்மாளுக்கு இரண்டு கண்ணும் தெரியாது. ஆனால் அவர் பாடும்போது சிற்சில சமயம் அவருடைய கண்களிலிருந்து ஓர் அற்புத ஒளி வெளியாவதைக் காணலாம்.

  • ஆனந்த விகடன்,
    1-9-1933

One Comment on “கல்கி வளர்த்த கலைகள்”

Comments are closed.