
- உதயசங்கர் நடனம்
வங்காள நாட்டில் பல வருஷமாய் வாசம் செய்த ஸ்ரீமதி. விசாலாக்ஷி அம்மாள் (ஸ்ரீ. R.V. சாஸ்திரியின் மனைவியார்) ஒரு சமயம் என்னிடம் சொன்னார்கள். ‘வங்காளத்தில் ஸ்திரீகள் மூன்று ரூபாய் பெறுமான முள்ள சேலையை அழகுபெற உடுத்திக்கொண்டு சுந்தரிகளாகத் தோற்றமளிப்பார்கள். தமிழ்நாட்டில் முந்நூறு ரூபாய்ப் புடவையை என்னமோ போல் கட்டிக்கொண்டு அழகின்றிக் காணப்படுவார்கள்.’ கலைகளின் விஷயத்திலும் இதே வித்தியாசத்தைக் காணலாம். சரக்கு மட்டமாயிருந்தாலும்
அதை நன்றாய் சோபிக்கப் பண்ணுவதற்கு வங்காளிகளுக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் நமது கலைகள் எவ்வளவோ மேன்மையானவைகளாயிருந்தும், அவைகளைச் சோபிக்கச் செய்ய நமக்குத் தெரிவதில்லை.
இந்த விஷயம் உதயசங்கரின் நடனத்தில் இடையிடையே திரைபோடும்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்து கொண்டிருந்தது.
பால ஸரஸ்வதியின் நாட்டியமும் உதயசங்கரின் நடனமும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவை என்பதை அறிவேன். எனினும் பொதுவாக அவை இரண்டையும் ஒப்பிட்டால் பாலஸரஸ்வதியின் கலையில் காற் பங்கு சிறப்புக்கூட உதயசங்கரின் கலைக்குக் கொடுக்க முடியாது. 26ந் தேதி கான மந்திரத்தில் பாலஸரஸ்வதியின் நாட்டியத்தைப் பார்த்த உதயசங்கர், “இது மகா அற்புதம்! இத்தகைய அற்புதம் எதையும் நாளை மியூஸியம் தியேட்டரில் எதிர்பார்க்காதீர்கள்” என்று சொன்னதாகக் கேள்விப் படுகிறேன்.
ஆனால் பாலஸரஸ்வதியின் நாட்டியக் கச்சேரி அரங்கேற எவ்வளவு பணம் கேட்பார்களோ, அவ்வளவு உதயசங்கர் நாட்டியத்தில் முதல்வரிசை பெஞ்சில் உட்கார்ந்திருந்த பத்துபேர் மட்டும் கொடுத் திருப்பார்கள்! இந்த நிலைமைக்குக் காரணம் என்ன?
மியூஸியம் தியேட்டர், விக்டோரியா மண்டபம் இரண்டும் சின்னவையானதால் சுற்றிச் சுற்றி நாலா புறமும் பார்த்தேன். நமது சங்கீத விசுவாசிகள், பாகவத சிரோன்மணிகள், நடிக சிகாமணிகள் யாராவது அங்கு வந்திருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள விரும்பி னேன். இவர்களில் ஒருவரையாவது காணவில்லை.
உலகப் பிரஸித்தி பெற்ற ஒரு கலைஞர் சென்னை யைத் தேடி வந்திருக்கும்போது அவருடைய கலை எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ள நமது வித்வான்கள் யாரும் வரவில்லை. ஆனால் உதயசங்கர் என்ன செய்தார் பாருங்கள்! முதல்நாள் கானமந்திரத் தில் பாலஸரஸ்வதியின் நாட்டியம் பார்த்ததோடு அவர் திருப்தியடையவில்லை. 29ந்தேதி தமக்கென்று பிரத்தியேகமாக பாலஸரஸ்வதியின் நாட்டியம் ஏற்பாடு செய்து பார்த்தார். இதற்காக அவர் நூறு ரூபாய் கொடுத்ததாகவும், அச்சமயம் சிறிய ‘பிலிம்’ எடுக்கப்பட்டதாகவும் அறிகிறேன். இந்த ‘பிலிம்’ தமது சொந்த உபயோகத்திற்காகவென்று கூறினாராம்.
நூறு ரூபாய் செலவில் எடுத்த ‘பிலி’மின் உதவி யினால் அவர் பரத நாட்டியத்தின் சில அம்சங்களைக் கற்றுக்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்தா ரானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஆனந்த விகடன், 10-09-1933
இக்காலத்தில் இந்திய நடனக் கலைஞர்கள் அநேகர் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுக்கும் உதயசங்கருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்றவர்கள் நடனக்கலையைப் பயின்று கலைஞர்கள் ஆகிறார்கள். ஆனால் உதயசங்கரை நடனக் கலையே தேடிச் சென்று அடைந்திருக்கிறது. குயிலுக்கு இசை எப்படி இயற்கையோ அப்படியே உதயசங்கருக்கு நடனக்கலை இயற்கையாகும்.
இப்படி பிறவியிலேயே நடனக் கலைஞராக இருக்கிறபடியால்தான் உதயசங்கருடைய நடனத்தை நமது பாரத தேசத்திலே மட்டுமின்றி அமெரிக்கா முதலிய மேல்நாடுகளிலும் பார்த்தவர்களெல்லாம் போற்றுகிறார்கள்.
நடனம் ஆடி பணம் சம்பாதிப்பதுடன் ‘உதய சங்கரின் கலைப்பிரேமை நின்றுவிடவில்லை. வெண் பனி சூழ்ந்த இமயமலை அடிவாரத்தில் அல்மோரா என்னுமிடத்தில் அவர் ஒரு கலைஞர்கள் க்ஷேத்திரத்தை ஏற்படுத்தி சிறப்பாக நடத்தி வருகிறார்.
கல்கி மார்ச், 1, 1942 (அட்டைப்பட விளக்கம்)
