
நம்ம பையன் சண்டை போட்டு வென்றுள்ளான்.. பின்வாங்கும் எண்ணமே இல்லை.. விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு!
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் குகேஷ் வென்றது பெருமை அளிப்பதாக இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். அவரின் தொடர் முயற்சியால் மட்டுமே டிங் லிரன் இதுபோன்ற தவறை செய்ததாக கூறிய அவர், வரும் தலைமுறையினர் குகேஷ் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி இந்தியாவின் டி குகேஷ் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலமாக மிக இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பின் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 14வது சுற்றில் சீனாவின் டிங் லிரன் அவரது 55வது நகர்த்தலில் செய்த தவறு, தமிழக வீரர் குகேஷ்-க்கு 58வது நகர்த்தலில் வெற்றியை தேடி கொடுத்தது. இதன்பின் டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறிய போது, செஸ் போர்டில் மொத்த காய்களையும் வரிசையாக வைத்து இறுதியாக அதனை வணங்கி ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் குகேஷ் வெளிப்படுத்திய உணர்வு இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் குகேஷ் விடவும் அதிக மகிழ்ச்சியை விஸ்வநாதன் ஆனந்த் வெளிப்படுத்தியுள்ளார். 4 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், சென்னையில் 2013ஆம் ஆண்டு நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் கார்ல்சனிடம் தோல்வியடைந்தார்.
அந்தப் போட்டியில் கண்ணாடி திரை வழியாக பார்த்து கொண்டிருந்த குகேஷ், 12 ஆண்டுகளுக்கு பின் வென்று புதிய சரித்திரம் படைத்துள்ளார். இதுகுறித்து இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த பேசுகையில், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 15 நிமிடங்களுக்கு முன்பு கூட ஆட்டம் டிராவில் முடியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் குகேஷ் கொஞ்சம் கூட சலிக்காமல் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.
குகேஷின் முயற்சி தொடர்ந்ததால் தான் டிங் லிரன் அந்த தவறை செய்தார். அதன்பின் குகேஷின் உணர்ச்சியை பார்க்கவே பெருமையாக இருந்தது. கிட்டத்தட்ட குகேஷ் கண்ணீர் சிந்துவிட்டார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றது அசாத்தியமான சாதனை. ஒவ்வொரு சுற்றுக்கு பின்னரும் குகேஷ், இன்று இல்லை என்றாலும் நாளை முயற்சிப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.
கொஞ்சம் கூட சளிக்காமல் சண்டை போட்டதன் மூலமாகவே குகேஷ் வென்றுள்ளார். அவரின் முயற்சிக்கு தான் இந்த பரிசு கிடைத்துள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஏராளமான சுற்றுகள் டிராவில் முடிவடைந்தன. சில சுற்றுகளில் இருவருக்கும் வெல்ல வாய்ப்புகள் அமைந்தது. டிங் லிரன் வழக்கமாக இப்படியான தவறுகளை செய்ய மாட்டார். இதற்கு குகேஷின் முயற்சி தான் காரணம்.
குகேஷின் சாதனையால் வரும் தலைமுறையினர் பலரும் செஸ் பக்கம் திரும்புவார்கள். இந்த வெற்றி பலருக்கும் ஊக்கம் கொடுக்கும். அதேபோல் செஸ் பக்கம் பலரின் கவனமும் திரும்பும். ஃபிட்னஸ், செஸ், உடல்மொழி என்று அத்தனை விஷயங்கள் குறித்தும் பேசி சவால் கொடுப்பார்கள். அனைத்தையும் கடந்து வெற்றியை பெற்றுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
