அழகியசிங்கர்/சி சு செல்லப்பா…..

நான் சந்தித்த இரு முக்கிய இலக்கிய ஆளுமைகளைப் பற்றி இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒருவர் க.நா.சு. இன்னொருவர் சி சு செல்லப்பா. இவர்கள் இருவரையும் நான் சந்திக்க முடியுமென்றோ உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரைத் தவிர இன்னொரு படைப்பாளியையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர் சிட்டி. இவர்கள் மூவரும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.
க.நா.சுவும், சி.சு செல்லப்பாவும் இருதுருவங்கள். இருவரும் நேர் எதிரான இலக்கியக் கொள்கை உடையவர்கள். க.நா.சு ரசனை அடிப்படையில் தன் விமர்சனக் கொள்கையை வகுத்துக்கொண்டவர். சி சு செல்லப்பா புத்தக விமர்சனத்தைப் பகுத்துப் பார்க்கும் கொள்கையைக் கொண்டவர்.
ஏன் இவர்களைப் பற்றி சொல்கிறேனென்றால் இவர்கள் மூத்தத் தலைமுறை படைப்பாளிகள். க.நா.சுவை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டில் சந்தித்தேன். அவரைச் சந்திக்க எழுத்தாளர்கள் பட்டாளமே அன்று சென்றது. ஆனால் அந்தச் சந்திப்பு ஒரு இனிமையான அனுபவம்.
சி.சு.செல்லப்பா பெங்களூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேனே தவிர, பெங்களூரில் உள்ள என் உறவினர் வீட்டிற்குச் சென்றாலும், அவரைச் சந்திக்க எந்த முயற்சியையும் நான் செய்ததில்லை சி. சு செல்லப்பாவை நான் முதன் முதலில் சந்தித்தது க.நா.சு இரங்கல் கூட்டத்தில்தான். அதேபோல் க.நா.சுவை முதன் முதலில் சந்தித்தது கூட மௌனியின் இரங்கல் கூட்டத்தில்தான்.
இலக்கியம் குறித்து க.நா.சுவின் கண்ணோட்டம் வேறு, சி.சு செல்லப்பாவின் கண்ணோட்டம் வேறு. இருவரும் நண்பர்களாக இருந்தாலும்.
ஒருமுறை க.நா.சு சொன்னதாக சி சு செல்லப்பா ஒன்றைச் சொல்லியிருக்கிறார். “நாம்தான் படைப்பிலக்கியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் படைப் பிலக்கியவாதியான நாமே புத்தக விமர்சனமும் செய்ய வேண்டும்.”
அதைக் கேட்டு ரசனை அடிப்படையில் க.நா.சு ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்தார். இந்த விமர்சனத்தில் எந்தவித பின்புலமும் கிடையாது. ஒரு புத்தகத்தைப் படித்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதைக் குறிப்பிட்டுவிடுவார். ஒருமுறை சா கந்தசாமியின் நாவல் ஒன்றைப் படித்துவிட்டு க.நா.சு குறிப்பிட்டது Dropouts பற்றிய நாவல் என்று. அவர் குறிப்பிட்டது அந்த நாவலைப் பற்றிய முக்கிய அம்சம்.
ஆனால் சி சு செல்லப்பா அப்படியெல்லாம் கிடையாது. அவர் ஒரு படைப்பை நன்றாக ஆராய்ச்சி செய்து அதை தியரி மாதிரி மாற்றி விடுவார். இதற்காக அவர் மேல் நாட்டு அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து இருக்கிறார்.
சி.சு செல்லப்பா அவருடைய ‘என் சிறுகதைப் பாணி’ என்ற புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘தரமான இலக்கியப் படைப்புகளைச் சோதனை முயற்சிகளை இனம் காணத் தெரியாத, இயலாத ஒரு வாசகப் பரம்பரை இன்று பரவலாகிவிட்ட நிலையில், இலக்கியத்தை ரசித்து தராதரம் அறியாத தர விமர்சன அறிவு சேமிக்காத அரைகுறை இலக்கிய அபிப்பிராயக்காரர்கள் விருப்பு வெறுப்பு மட்டுமே கொண்டவர்கள் மலிந்து விட்ட நிலையில் படைப்பாளியே பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது,’ என்கிறார்.
இங்கு சி சு செல்லப்பாதான் க.நா.சுவை மறைமுகமாகச் சாடுகிறார்.
நான் முதன்முதலாக சி சு செல்லப்பாவை க.நா,சு இரங்கல் கூட்டத்தில் சந்தித்தேன். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் நடந்ததாக ஞாபகம். எழுத்தாளர் சங்கக் கட்டடத்தில். சி சு செல்லப்பா எளிமையான தோற்றத்தில் கதர் வேஷ்டி கதர் சட்டை அணிந்திருந்தார்.
எழுத்தாளர்களிடையே மதிப்பை உருவாக்கியவர் ஜெயகாந்தன் என்று என் நண்பர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சி சு செல்லப்பாவைப் பார்த்தபோது அவர் சாதாரணமாகத் தென்பட்டார். ஆனால் அவர் குரல் அழுத்தமாகவும் சத்தமாகவும் இருந்தது. க.நா.சுவின் இரங்கல் கூட்டத்தில் அவர் க.நா.சு மீது உள்ள கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ என்று தோன்றியது.
சி.சு செல்லப்பாவிற்கு விளக்கு விருது வழங்க முன்வந்தபோது, அதை முதலில் மறுத்தார். வெளி ரங்கராஜன் முயற்சியால் பரிசுத் தொகையை மறுத்தாலும், அந்தத் தொகையில் அவருடைய புத்தகம் வருவதை ஏற்றுக்கொண்டார். சி சு செல்லப்பா பரிசுக்கெல்லாம் ஏங்காதவர். பரிசு கொடுக்கும் நோக்கத்தையும் சந்தேகப்படுவார். வேடிக்கையான மனிதர்.
‘என் சிறுகதை பாணி’ என்ற சி சு செல்லப்பாவின் புத்தகம் அப்படித்தான் உருவானது. அந்தப் புத்தகத்திற்கான கூட்டம் ஒன்று மயிலாப்பூரில் நடந்தது. சிறு பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூட்டமாக அதை மாற்றினார் சி சு செல்லப்பா.
60வாக்கில் எழுத்து என்ற சிற்றேட்டை சி சு செல்லப்பா கொண்டு வந்தார். எழுத்து என்ற பத்திரிகை கவிதைக்கும், விமர்சனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பத்திரிகை.
30களில் முயற்சி செய்த புதுக்கவிதை உருவம் எழுத்து பத்திரிகை மூலமாக உறுதிப் பெற்றது. எழுத்து என்ற சிற்றேடு மட்டும் இல்லாமலிருந்தால், இப்போது வந்து கொண்டிருக்கும் கவிதையின் உருவம் எப்படி மாறிப் போயிருக்குமென்று தெரியாது. சி சு செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியதாக உள்ளது.
சி சு செல்லப்பாதான் வெகு ஜன இதழ்களுக்கும் சிறு பத்திரிகைக்கும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டார். எழுத்து பத்திரிகை வந்த சமயத்தில் கல்கிக்கும் மணிக்கொடிக்காரர்களுக்கும் பெரிய சண்டையே நடந்தது. இப்போது அது உடைந்து போய்விட்டது.
இன்றைய நிலையோ வேறு மாதிரி. ஒரு வெகுஜனப் பத்திரிகையே சிறு பத்திரிகையை எடுத்து நடத்துகிறது. மணிக்கொடி இதழ் சிறுகதைகளுக்காகவே ஒரு காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று சிறுகதைகளே தேவை இல்லை. பத்திரிகைகளின் தன்மைகளும் மாறி விட்டன. மருத்துவத்திற்காக ஒரு இதழ். வணிகத்திற்காக ஒரு இதழ் சினிமாவிற்கென்று ஒரு இதழ் என்று பல பிரிவுகளில் பலதரப்பட்ட பத்திரிகைகள் வெளி வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் சி சு செல்லப்பாவால் எங்கே பொருந்தி நிற்க முடியும். எழுத்து மாதிரி ஒரு பத்திரிகையைத் திரும்பவும் எடுத்து நடத்த முடியுமா ? சந்தேகம்தான்.

(18.12.2024 அன்று சி.சு.செல்லப்பா நினைவு நாள்)