திருப்பூர் கிருஷ்ணன்/சி.சு. செல்லப்பா வாழ்வில் சில சம்பவங்கள்…

சி.சு.செல்லப்பா நினைவு தினம்: டிசம்பர் 18:


*செல்லப்பா வாழ்ந்த காலம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான காலம்.
செல்லப்பா ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டாவது ·பாரம் படித்துக் கொண்டிருந்த தருணத்தில் தேசிய ஊர்வலங்களில் பங்கு கொள்ளத் தொடங்கிவிட்டார். காந்தியின் கொள்கைகள் அவரை ஆட்கொண்டன.
எண்ணற்ற தேசியப் பாடல்களை அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அந்தப் பாடல்களைப் பாடியவாறே ஊர்வலங்களில் நடந்தார்.
*சென்னையில் அப்போது சுதந்திரப் போர் மிகுந்த வேகம் கொண்டிருந்தது. ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலிலிருந்து சென்னை மெரினா கடற்கரை வரை ஓர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட செல்லப்பா, உப்பு சத்தியாக்கிரகத்திலும் கலந்துகொண்டார்.
1930 ஜனவரி 26 சுதந்திர தினமாக மகாத்மாவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திரம் அப்போது கிட்டவில்லை. (என்றாலும் ஜனவரி 26 என்ற தேதியை நினைவில் கொண்டுதான் மகாத்மாவின் உணர்வுகளை மதிக்கும் வகையில் பின்னாளில் நேரு குடியரசு தினத்தை அறிவித்தார்.)
1930 ஜனவரி 26 அன்று சுதந்திர தினம் என்று மகாத்மா அறிவித்த காரணத்தால், அப்போது மதுரையிலிருந்த செல்லப்பா தேசியக் கொடியை பல வீதிகளில் கம்பங்களில் கட்டும் பணியை மேற்கொண்டார். செல்லப்பாவும் அவரது தோழர்களும் கடைகளுக்குச் சென்று சுதந்திரக் கொண்டாட்டச் செலவுக்காகப் பணம் வசூல் செய்தனர்.
இரவெல்லாம் கண்விழித்து பலப்பல இடங்களில் கம்பங்களை நட்டுக் கொடியைப் பறக்க விட்டார்கள். வீடுகளில் மாவிலைத் தோரணங்கள் கட்டினார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் என்னென்ன வகையிலெல்லாம் போராட்டம் நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் செல்லப்பா எப்போதும் பேரார்வம் காட்டினார்.
திருப்பூரில் குமரன் கொடியை விடாமல் பிடித்திருந்து சுதந்திர ஊர்வலத்தில் கலந்துகொண்டான். காவல் துறையினர் தடியால் அடித்தபோதும் அவன் கரங்கள் கொடியை விடவில்லை. இரண்டரை சென்டிமீட்டர் மண்டையோட்டுச் சில் உடைந்து அவன் மூளைப் பகுதிக்குள் சென்று அவன் மயங்கி விழுந்தான். சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தான்.
கொடிகாத்த குமரன் உயிர்நீத்த செய்தி வந்தபோது செல்லப்பா மதுரையில் இருந்தார். அவரும் அவரது நண்பர்களும் குமரனின் ஆன்மா சாந்தியடையப் பிராத்தனை செய்தார்கள்.
*செல்லப்பாவின் நண்பரான ஆர்யா என்கிற பாஷ்யம் ஒரு சிற்பி. ஓவியர். அவர் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கம்பத்தில் நள்ளிரவில் யாரும் அறியாமல் ஏறி யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, இந்தியாவின் மூவண்ணக் கொடியை ஏற்றினார்.
அவர் எப்படி இந்த சாகசத்தைச் செய்தார் என்ற வியப்பு செல்லப்பா உள்ளிட்ட அவரது நண்பர்களிடம் ஏற்பட்டது. ஆனால் அவ்விதம் சாகசச் செயலைச் செய்தவர் ஆர்யா என்பது ரகசியமாகவே இருந்தது.
*1934 ஜனவரி நாலாம் தேதி செல்லப்பாவின் இலக்கிய வாழ்வில் ஒரு முக்கியமான நாள். அன்றுதான் அவர் எழுதிய முதல் சிறுகதை பத்திரிகையில் பிரசுரம் கண்டது. சங்கு வாரப் பதிப்பின் மார்கழி மலரில் அந்தக் கதை வெளியிடப்பட்டிருந்தது.
செல்லப்பாவுக்குத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டது அதிலிருந்துதான். மணிக்கொடி இதழில் சி.எஸ். செல்லப்பா என்ற பெயரில் அவரது புகழ்பெற்ற சரசாவின் பொம்மை சிறுகதை வெளிவந்தது.
1935 இல் செல்லப்பாவுக்குத் திருமணம் ஆயிற்று. அப்போது செல்லப்பாவின் வயது 23. தன்னைவிட ஒன்பது வயது இளைய பெண்ணான 14 வயது மீனாட்சியை அவர் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமானதால் குடும்பத்தை நடத்தப் பொருளீட்ட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருந்தது. சென்னை சென்று ஏதேனும் ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கவே அவர் மனம் விரும்பியது.
கும்பகோணம் சென்று அங்கிருந்த கு.ப. ராஜகோபாலனையும் ந. பிச்சமூர்த்தியையும் சந்தித்து ஆசிபெற்றார். பின் சென்னைக்குப் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார்.
பல பத்திரிகைகளுக்கு அவர் எழுதலானார். ஜெயபாரதி, பாரத தேவி போன்ற இதழ்கள் அவர் எழுத்துக்களைப் பிரசுரித்தன. எழுத்தில் வந்த சொல்ப வருமானத்தில் குடித்தனம் நடத்தவேண்டியிருந்தது.
1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் அவர். கைதாகி ஆறுமாதம் வேலூர்ச் சிறையில் அடைக்கப்பட்டார். பின் பெல்லாரி ஜில்லாவில் இருந்த அலிபூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இரண்டாவது தடவையாகவும் செல்லப்பா கைது செய்யப்பட்டார். இரண்டாம் முறை விடுதலை ஆனபோது காந்தியப் பாதையில் தன் இலக்கியப் பணிகளைத் தொடருவதில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். தன் சிறை அனுபவங்கள் பலவற்றை அழகிய வடிவ நேர்த்தியுடைய சிறுகதைகளாக வடித்தார்.
க.நா.சுப்பிரமணியம் ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சந்திரோதயம் பத்திரிகையில் தன் படைப்புக்களை எழுதலானார். அவரது புகழ்பெற்ற வாடிவாசல் குறுநாவல் சந்திரோதயத்தில் தான் வெளிவந்தது. செல்லப்பா சென்னையில் திருவொற்றியூரில் தங்கியிருந்து சந்திரோதயம் பத்திரிகையில் வேலை பார்க்கத் தொடங்கினார்.
1947 ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் செல்லப்பா கண்ட கனவு பலித்த நாள். நாடு சுதந்திரம் பெற்ற நாள். தாம் வசித்த திருவொற்றியூர்ப் பகுதியில் கொடியேற்றி மகிழ்ந்தார். இனிப்புகளை அனைவருக்கும் வாரி வாரி வழங்கினார்.
கிராம·போனை வாடகைக்கு எடுத்து, டி.கே. பட்டம்மாள் பாடிய ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே! என்ற பாடலைக் காற்றில் ஒலிக்க விட்டார்.
தினமணி நாளிதழில் துணையாசிரியராக வேலை தேடிக் கொண்டார். தொடர்ந்து ஆறு ஆண்டுகள் தினமணியில் பணியாற்றினார். பின் 1953 ஆம் ஆண்டு வேலையை உதறிவிட்டு மறுபடி கிராமத்திற்குச் சென்றுவிட்டார்.
மறுபடியும் சென்னைக்கே வந்து சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகைகளுக்கு அவ்வப்போது கதைகள் எழுதினார்.
1948 ஜனவரி முப்பதாம் தேதி மகாத்மா கோட்சேயால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது தொடர்ந்து இரண்டு நாட்கள் செல்லப்பா உணவேதும் உட்கொள்ளவில்லை. அளவற்ற துயரத்தில் அவர் மனம் ஆழ்ந்தது.
பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டியதுதான் என்ற உண்மையை அவர் உணர்ந்திருந்தாலும், தம் வாழ்வை பற்றற்ற தத்துவப் பார்வையுடனேயே அவர் நடத்தி வந்தாலும், காந்தி உலகிலிருந்து விடைபெற்ற முறை அவரைப் பெரிதும் வருத்தியது.
அகிம்சையைத் தொடர்ந்து போதித்தவர், வன்முறையால் கொல்லப்பட்ட முரண் அவர் நெஞ்சைப் பலகாலம் வருத்திக் கொண்டிருந்தது.
பிப்ரவரி 12 ஆம் தேதி ராஜாஜி ஹாலில் காந்தியின் அஸ்திக் கலசம் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அஸ்திக் கலசத்தை தரிசிக்கச் சென்ற செல்லப்பாவின் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
1954 தொடங்கி அவர் எழுத்துலகில் தீவிரமாக இயங்கலானார். சிறிது காலம் நடுவே அவர் எழுதாமலிருந்ததும் உண்டு. ஓர் உத்வேகம் தோன்றினால் தான் எழுத முடியும் என்பது அவர் நம்பிக்கை.
அப்போது ஒரு நண்பர் என்ன கொஞ்ச காலமாக எழுதவே இல்லையே? என விசாரித்தார். அதற்குச் செல்லப்பா சொன்ன பதில் அவரை அதிர வைத்தது.
நான் நிறைய எழுதின காலத்தில் என்ன நிறைய எழுதுகிறீர்களே என்று நீ விசாரித்தாயோ? எழுதாமல் இருக்கும்போது மட்டும் வந்து விசாரிக்கிறாயே? உனக்காக நான் எழுதவில்லை. எனக்குத் தோன்றினால் எழுதுவேன்! என்றார் செல்லப்பா!
கல்கி, சுதேசமித்திரன், ஆனந்த விகடன் போன்ற பல இதழ்களில் செல்லப்பாவின் கதைகள் அடுத்தடுத்து வெளிவந்தன.
1959 செல்லப்பா வாழ்வில் முக்கியமான ஓர் ஆண்டு. அந்த ஆண்டில்தான் அவர் தற்காலத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த எழுத்து என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.
1965 இல் தாம் பெரிதும் மதித்த இலக்கியவாதியான பி.எஸ். ராமையாவுக்கு சென்னையில் ஓர் இலக்கிய விழா எடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு வத்தலக்குண்டு கிராமத்திலும் பி.எஸ். ராமையாவுக்கு ஒரு விழா நடத்தினார்.
தமிழின் முன்னோடி நாவல்களில் ஒன்றான கமலாம்பாள் சரித்திரத்தை எழுதிய பி.ஆர். ராஜம் ஐயர்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் செல்லப்பா.
1967 இல் எழுத்து பத்திரிகை மூலமே பண உதவி கேட்டுச் சேகரித்து பி.ஆர். ராஜம் ஐயருடைய நூற்றாண்டை விமரிசையாகக் கொண்டாடினார். செல்லப்பாவின் தந்தை வழிச் சொந்த ஊர் சின்னமனூர். தாய்வழிப் பாட்டி ஊர் வத்தலக்குண்டு. செல்லப்பாவுக்கு வத்தலக்குண்டு மேல் விசேஷமான பாசம் இருந்தது.
பி.ஆர். ராஜம் ஐயரும் வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் தான். ராஜம் ஐயரின் பெருமையை வத்தலக்குண்டு ஊர் மக்கள் சரிவர உணரவில்லை என்ற வருத்தம் செல்லப்பாவுக்கு இருந்தது. எனவே வத்தலக்குண்டு மக்கள் உணர்கிற வகையில் ராஜம் ஐயரின் நூற்றாண்டை வத்தலக்குண்டு ஊரிலேயே நடத்தினார்.
வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், தீபம் நா. பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட கோலாகலமான விழாவாக அது நடைபெற்றது.
ராஜமய்யர் வாழ்ந்த இல்லம் என்றொரு கல்வெட்டும் அவர் வாழ்ந்த வீட்டில் பொறிக்கப்பட்டது.
குமுதம் வைர மோதிரப் பரிசுக் கதை என்றொரு கதை வரிசையைத் தொடங்கியது. எழுத்துலகச் சாதனையாளர்களிடம் கதைகேட்டு ஒரு வைர மோதிரத்தைப் பரிசாக வழங்கியது அந்த ஜனரஞ்சக இதழ். தீபம் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் வைர மோதிரக் கதை எழுதினார்கள்.
அப்படிக் கதை எழுதியவர்களில் செல்லப்பாவும் ஒருவர். பெண்டிழந்தான் என்பது அவர் எழுதிய வைர மோதிரக் கதையின் தலைப்பு. தான் எழுதியது எழுதியபடியே வெளியாக வேண்டும் என்று நிபந்தனை விதித்துத்தான் கதையைக் கொடுத்தார்.
சற்றே நீண்ட கதையாக இருந்தாலும் குமுதம் செல்லப்பாவுக்கு மதிப்புக் கொடுத்து அந்தக் கதையை அப்படியே வெளியிட்டது.
கண் பார்வையில் சிறு கோளாறு ஏற்பட்டது. அந்தக் கோளாறையும் பொருட்படுத்தாமல் என் சிறுகதை பாணி என்ற குறிப்பிடத் தக்க திறனாய்வு நூலை எழுதினார். சுதந்திர தாகம் என்ற பிரம்மாண்டமான நாவலையும் எழுதி முடித்தார்.
தம் இறுதிக் காலத்தில் பி.எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி என்ற ஆராய்ச்சி நூலையும் எழுதினார்.
அதிகம் மருத்துவமனைக்குப் போயறியாத செல்லப்பா வாழ்வின் இறுதிக் காலங்களில் பலமுறை மருத்துவமனைக்குப் போய்வந்தார். முதுமையின் தாக்கத்தை அவர் உடல் காட்டத் தொடங்கியிருந்தது.
1998 டிசம்பர் 18ஆம் தேதியன்று செல்லப்பா தம் இலக்கியப் படைப்புகளை நிரந்தரமாகத் தமிழின் சொத்தாக வழங்கிவிட்டு இந்த மண்ணுலகை நீத்தார்.
………………..