
கடந்த ஆண்டுகளில் நான் சில ஆங்கிலப் புத்தகங்களை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. அதிலே ஒன்று Bill Bryson எழுதிய புத்தகம். அவருடைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க எனக்கு வியப்பு அதிகமாகும். இவர் தன் மனதுக்குத் தோன்றிய எந்த விஷயமாயிருந்தாலும் அதைப்பற்றி எழுதுவார். சாதாரண வாசகருக்கு ஒரு சாதாரண எழுத்தாளர் எழுதும் எழுத்து. இதில் பெரிய ஆழமான ஆரய்ச்சிகள் ஒன்றும் இல்லை. வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், ஒரு புதுக் கதவை திறந்துவிட வேண்டும். அவ்வளவுதான். ஆனால் வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். முன்னுரையில் தொடங்கி புத்தகத்தின் கடைசி வரி வரும்வரைக்கும் கீழே வைக்க முடியாது.
இவர் தவிர இன்னும் சிலரையும் படித்தேன். இவர்களும் இதே போல எழுதினார்கள். வாசிப்புத்தன்மை நிறைந்த எழுத்துக்கள். அடம் ஹஸ்லெட் என்று ஒருத்தர், மற்றவர் ஸ்டீபன் லீகொக். ஒருவர் புதியவர், மற்றவர் பழையவர். இவர்கள் தங்கள் பாண்டித்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகரை அசத்தவோ எழுதுவதில்லை. பகிர்ந்துகொள்வதுதான் அவர்களுடைய முக்கியமான நோக்கம்.
ஆனால் எழுத்து இலக்கியத்தரமாக இருக்கும். இன்னொரு அசத்தல்காரர் டேவிட் செடாரிஸ். எந்த ஒரு சிறு அனுபவத்தையும் எடுத்து அதை சுவையான கட்டுரையாக்கிவிடுவார். அது சிறுகதைக்கும் கட்டுரைக்கும் நடுவான ஒரு வடிவத்தில் நின்று படிப்பதை ஒரு இன்ப அனுபவமாக உங்களுக்கு மாற்றிவிடும். இவர் ஒருபால் விருப்பக்காரர் ஆனபடியால் இவருடைய எழுத்துக்கள் இன்னும் வினோதத்தன்மையுடன் இருக்கும். இவரைப் படிக்கும் போதெல்லாம் ‘அட, இது எனக்கு முன்பே தோன்றாமல் போனதே!’ என்று அடிக்கடி வருத்தப்படுவேன். அந்த மாதிரி எழுத்து.
நாலு வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி அவர்களை சந்தா குரூ
ஸில் சந்தித்தேன். ‘நீங்கள் கட்டுரை எழுதலாம். நீங்கள் படித்து ரசித்த ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யலாம். உங்கள் அனுபவங்களை, நேர் காணல்களைப் பதிவு செய்யலாம்’ என்று சொன்னார். நான் அதை அப்போது பெரிதாக எடுக்கவில்லை. மேற்சொன்ன புத்தகங்களைப் படித்த பிறகு நாமும் அப்படி தமிழிலே எழுதினால் என்னவென்று தோன்றியது. இப்படி வேறு யாரும் தமிழில் செய்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படி செய்திருந்தாலும் நான் படித்ததில்லை. சு.ராவுக்கு முதலில் என் நன்றி. அவரே என் மூளையில் இந்த விதையை ஊன்றியவர். நண்பர் ஜெயமோகன் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது தன் கருத்துகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். அவரையும் நினைத்துக் கொள்கிறேன். மற்றும் நண்பர்கள், வாசகர்கள் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் எனக்கு தந்த ஊக்குவிப்பு மறக்கமுடியாதது. அவர்களுக்கும் நன்றி. இந்த எழுத்துக்கள் காலச்சுவடு, தீராநதி, காலம், உயிர்மை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் திண்ணை, உலகத்தமிழ், மரத்தடி, திசைகள் போன்ற இணைய தளங்களிலும் வெளியானவை. இந்த ஆசிரியர்களுக்கு நான் கடமைப் பட்டவன். மற்றும் இந்த தொகுப்பை சிறப்பாக வெளியிடும் நண்பர் வசந்தகுமாருக்கும், அழகாக அட்டைப் படம் அமைத்த கனடா அன்பர் (நந்தா கந்தசாமி) ஜீவனுக்கும் என் நன்றி.
அ.முத்துலிங்கம்
கனடா,
26 செப்டம்பர் 2004
I. கனடா வாழ்க்கை
- கனடாவில் கடன்
கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை . கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மரியாதை இருப்பது எனக்கு அன்றுவரை தெரியாது.
எந்த அங்காடியிலோ, சந்தையிலோ, கடையிலோ என்ன பொருள் வாங்கினாலும் கடன் அட்டை இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் காசை எடுத்து எண்ணிக் கொடுப்பதை விநோதமாகப் பார்த்தார்கள். நூறு டொலர் தாளை நீட்டினால் அதை மேலும் கீழும் சோதித்து, என்னை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி உள்ளே சென்று அதை உற்று நோக்கி உறுதிசெய்தார்கள். ஒரு அங்காடியில் கத்தைக் காசை எண்ணி வைக்கும்போது, கடன் அட்டையில் கணக்கு தீர்த்தால் 10% தள்ளுபடி என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. இந்த நாட்டில் கடனாளிகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுகொண்டேன். அன்றே தீர்மானித்தேன், ஒரு கடன் அட்டை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்று.
Visa, American Express, Master Card என்று தொடங்கி குட்டி தேவதை நிறுவனங்கள் வரை சகல கடன் விண்ணப்ப பாரங்களையும் நிரப்பி, நிரப்பி அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரே மாதிரியான பதில்கள்தான் வந்தன. உங்களுக்கு இந்த நாட்டில் கடன் மதிப்பு இல்லை. மறுக்கப்பட்டது.
எப்படியும் மிகவும் மதிப்புக்குரிய ஒரு கடன்காரனாகி விட வேண்டும் என்ற என்னுடைய வைராக்கியம் இப்படியாக நிலைகுலைந்து போனது. மாணவர்களும், பச்சிளம் பாலகர்களும் வழுவழுப்பான வண்ண அட்டைகளை விசுக்கிக் காட்டினார்கள். சுப்பர் மார்க்கட்டில் தள்ளுவண்டியில் சாமான்களை நிரப்பிவிட்டு காசுத்தாள் சுருள்களை பிரித்துப் பிரித்துக் கொடுக்கும்போதும், மீதிச் சில்லறையை எண்ணி எடுக்கும்போதும், பத்து சதத்துக்குப் பதிலாக ஒரு சதத்தை கொடுத்து தடுமாறும்போதும், இளம் பெண்கள் பளபளக்கும் அட்டைகளை மின்னலாக அடித்தபடி என்னைக் கடந்து சென்றார்கள். எனக்கு அவமானமாக இருந்தது.
என்ன செய்யலாம் என்று நாடியில் கைவைத்து மூளைத் தண்ணீர் வற்ற யோசித்தேன். கடைசி முயற்சியாக விசா நிறுவனத்து மெத்த பெரியவருக்கு ‘மிக அந்தரங்கம்’ என்று தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தேன்.
பெருமதிப்பிற்குரிய தலைமையாளர் அவர்களுக்கு,
இந்த நாட்டுக்கு வந்த நாளில் இருந்து எப்படியும் பெரும் கடனாளியாகிவிட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் படுதோல்வியடைந்து கொண்டே வருகின்றன. என்னுடைய சகல கடன் அட்டை விண்ணப்பங்களும் ஈவிரக்கமில்லாமல் நிராகரிக்கப்பட்டு விட்டன. அதற்கு காரணம் எனக்கு இந்த நாட்டில் கடன் சரித்திரம் இல்லாததுதான் என்கிறார்கள். அப்படி வந்த மறுப்புக் கடிதங்களில் ஒரு கட்டை இத்துடன் இணைத்திருக்கிறேன். எப்படியும் ஒரு வாரத்திற்குள் அவற்றை தாங்கள் படித்து முடித்துவிடுவீர்கள்.
எனக்கு கடன் வரலாறு கிடையாது. ஏனென்றால் நான் இந்த நாட்டுக்கு வந்து சொற்ப நாட்களே ஆகின்றன. இது என்னுடைய பிழை அன்று. தாங்கள் கடன் அட்டை தரும் பட்சத்தில் நான் எப்படியும் முயன்று ஒப்பற்ற சரித்திரத்தை படைத்து, மதிப்புமிக்க கடனாளியாகி விடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
குருவி சேர்ப்பதுபோல என் வாழ்நாள் எல்லாம் சிறுகச் சிறுக சேர்த்து முழுக்காசும் கொடுத்து நான் ஒரு வீடு வாங்கியிருக்கிறேன். அதை தாங்கள் பார்க்கலாம். கடன் வைக்காமல், கைக்காசு கொடுத்து லிட்டருக்கு 20 கி.மீட்டர் ஓடும் சிக்கனமான ஒரு கார் வாங்கி யிருக்கிறேன். அதையும் தாங்கள் பார்க்கலாம். எனக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் 1% குறைவான பாலில், கோதுமை சக்கைய கலந்து காலை உணவாகவும், ஏனைய உணவாகவும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன். அதைக்கூட தாங்கள் பார்க்கலாம்; உணவிலும் பங்கு கொள்ளலாம்.
ஆனால் துரதிர்ஷடவசமாக இன்னும் ஒரு கடனும் எனக்கு ஏற்படவில்லை. எவ்வளவு கடன் தொல்லை இருந்தால் தாங்கள் எனக்கு ஒரு கடன் அட்டை கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே சொன்னால் நான் எப்படியும் முயன்று அந்த இலக்கை அடைந்துவிடுவேன். ஆனால் அதற்கு ஒரு கடன் அட்டை மிகவும் முக்கியம் என்று எனக்கு படுகிறது.
தாங்கள் எனக்கு இந்த உதவியை செய்வீர்களாயின் நான் எப்படியும் முயன்று என் கடன் ஏத்தும் திறமையை தங்களுக்கு நிரூபித்துக் காட்டுவேன்.
இப்படிக்கு,
என்றும் தங்கள் உண்மையான,
கீழ்ப்படிந்த, தாழ்மையான, நிலத்திலே புரளும்…
இந்தக் கடிதத்தை நான் அனுப்பி சரியாக மூன்றாவது நாள் கூரியர் மூலம், ஒரு இணைப்புக் கடிதம்கூட இல்லாமல், ஒரு கடன் அட்டை என்னிடம் வந்து சேர்ந்தது. அதன் மழமழப்பும், மினுமினுப்பும் என் கண்ணில் நீரை வரவழைத்தது. அந்தக் கணமே முழுமூச்சாக கடன்படுவதற்கு என்னை தயார் செய்துகொண்டேன்.
மிக நீளமான பட்டியல்கள் போட்டுக்கொண்டு சுப்பர் மார்க்கட்டுக்கும், பல்கடை அங்காடிக்கும் அடிக்கடி சென்றேன். வட்டமான பெட்டிகளிலும், தட்டையான அட்டைகளிலும் அடைத்து விற்கும் சாமான்களை வாங்கினேன். வாங்கிவிட்டு அவற்றை எப்படி, என்ன உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதை கற்றுக் கொண்டேன். சிலவற்றை திருப்பினேன்; மீண்டும் வாங்கினேன். என் கடன்களை கருணை இல்லாமலும், கண் துஞ்சாமலும் கூட்டினேன். கடன் அட்டை உரசி உரசித் தேய்ந்தபோது, கடனும் ஏறியது. மறுபடி கணக்கு தீர்த்தேன்; மறுபடியும் ஏறியது.
இப்படி நான் பாடுபட்டு தேடி வைத்த கடன் புகழ் வீணாகவில்லை. ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது. அதில் சொல்லியிருந்த வியத்தை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அப்பட்டமான பொய் என்று என்னை அலட்சியப் படுத்தாதீர்கள். முற்றிலும் உண்மை; பொய்யென்றால், நீருக்கு வெளியே, நின்ற கோலத்தில் பெண்ணைப் புணர்ந்தவன் போகும் நரகத்துக்கு நானும் போவேன்.
இந்தக் கடிதம் விசா தலைமை அலுவலகத்தில் இருந்து வந்திருந்தது. என்னுடைய கடன் தீர்க்கும் திறமையை இது மெச்சியது. என்னுடைய தகுதிக்கும், சாமர்த்தியத்திற்கும் ஏற்ற ஒரு கடன் சுமையை மேலும் தருவதற்கு அந்த நிறுவனம் தயாராக இருந்தது. இலையான் பறந்ததுபோல கையொப்பமிட்ட அந்தக் கடிதத்தில் இருந்த வாசகம் இதுதான்.
அன்புடையீர்,
நீங்கள் எங்களிடம் வாடிக்கையாளராகியதில் நாங்கள் மிகவும் திருப்தியும், பெருமிதமும் கொண்டிருக்கிறோம். உங்கள் கண்ணியத்திலும், நம்பிக்கைத் தன்மையிலும் நாங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பில் ஒரு சிறு பகுதியை காட்டும் முகமாக நாங்கள் இத்துடன் $2000க்கு ஒரு காசோலையை இணைத்திருக்கிறோம். இது அன்பளிப்பில்லை;
கடன்தான். இதை நீங்கள் மாதாமாதம் $10 க்கு குறையாத ஒரு தொகையில் கட்டித் தீர்க்கலாம்.
தங்கள் உண்மையுள்ள,
இணைத் தலைமையாளர்.
என் கடன் சுமைகள் விரைவில் தீர்ந்துவிடக்கூடும். அதற்கு பிறகு நான் என்ன செய்வேன் என்று அவர்கள் கருணை உள்ளம் கவலைப் பட்டிருக்கக்கூடும். நல்ல காரியத்தை நான் தள்ளிப் போடுவதில்லை. ஆகையால் வெகு சீக்கிரத்திலேயே ஒரு பதில் அனுப்பினேன்.
அன்புள்ள ஐயா,
தங்கள் அன்பும், கரிசனமும் என்னை உருக்குகிறது. தங்களுடைய விசா கடன் அட்டை என் வாழ்வில் இன்றியமையாத ஒரு அம்சமாகி விட்டது. நான் எங்கே போனாலும் அதைக் காவியபடியே செல்கிறேன். என் இருதயத்துக்கு பக்கத்தில் அது கொடுக்கும் இனிமையான சத்தத்தை கேட்டுக்கொண்டே, இந்த அட்டை வசிக்கிறது. எனக்கு வேண்டியவற்றையும், என் உற்றாருக்கு வேண்டாதவற்றையும் அதைக் கொடுத்தே வாங்குகிறேன். அதன் ஸ்பரிசம் எனக்கு சந்தோசத்தை தருகிறது. அதன் பாரம் காசுத் தாள்களிலும் பார்க்க லேசானதாக இருக்கிறது.
ஆனாலும் எனக்கு ஒரு அல்லல் உண்டு. என்னுடைய அட்டையின் கடன் எல்லை $10,000 என்று நிர்ணயிக்கப்பட்டு இருப்பது தங்களுக்குத் தெரியும். இந்த அட்டையைக் கொடுத்து கடைக்காரன் அதை உரசும்போது அதன் எல்லையை எட்டிவிட்டேனோவென்று வயிறு எரிகிறது; நெஞ்சு அடைக்கிறது. அதை திருப்பி வாங்கி பையில் வைக்கும்வரை இருப்பு கொள்ளாமல் அலைகிறேன். கடைக்காரனின் முகக்குறிப்பில் இருந்து அவன் என்னை நிராகரித்துவிட்டானோ என்பதை ஆராய்கிறேன். அந்த வினாடி செத்து செத்து உயிர் எடுக்கிறேன். என்னுடைய துரிதமான கடன் அடைக்கும் திறமையிலும், ஆயுளின் கெட்டியிலும் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கும் தாங்கள் அந்த நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி என் கடன் உச்சத்தை $100,000 என்று ஆக்குவீர்களாயின் நான் தங்களுக்கு என்றென்றும் மிகவும் கடன் பட்டவனாக இருப்பேன். அப்போதுதான் என் கடன் பளுவை நான் கடல்போல பெருக்கி அதில் ஆனந்தமாக நீந்தமுடியும். ஆகவே இந்த $2000 காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புகிறேன்.
தங்கள் மேலான கடாட்சத்தை கோரும்…
மேற்படி கடிதத்துடன் பிணைந்தபடி காசோலை திரும்பிப்போனது. அதற்கு இன்றுவரை பதில் இல்லை. இது என்ன பெரிது! எனக்கும் American Express க்கும் இடையில் நடந்த ருசியான கடிதக் கொண்டாட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
அது இன்னொரு முறை.
