மஞ்சுளா சுவாமிநாதன்/மேல் பாடி காலி

எங்கள் குடியிருப்பில் புதிதாக ஓர் உடற்பயிற்சி மையம் துவங்கியுள்ளனர். அதன் கட்டணம் உரிமையாளர்கள் கட்டும் பராமரிப்பு வைப்பு நிதியிலிருந்து செல்வதால் அந்த மையத்தை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டேன். நேற்று காலை பயந்து கொண்டே முதல் நாள் சென்றேன். எனக்கு தெரிந்த ஜிம், நடைபயிற்சி செல்லும் ட்ரெட் மில்லும், நின்ற இடத்திலேயே ஓடும் சைக்கிளும் தான்.
அங்கே பெரிய கண்ணாடி தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனை திறக்க எனது பிரத்யேக ஆக்செஸ் கார்டை பயன் படுத்தினேன். கீ என்று ஓர் சத்தமும், பச்சை விளக்கும் வெளியிலிருந்த டப்பா போன்ற கருவியில் தென்பட கதவு திறந்து கொண்டது. சுமார் 10 பேர் ஏற்கனவே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அதில் சிலர் என்னை ஆர்வமாக பார்த்தனர். ஒரு ஆஜானுபாகுவான மாமா குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார் (வார்ம் அப் எக்ஸர்சைஸ்). இரண்டு மூன்று கட்டிளங்காளைகள், சூர்யா மாதிரி, சரத் குமார் மாதிரி, நவீன உபகரணங்கள் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். சிக்கென்று உடல் வாகுடைய இரண்டு பெண்கள் கடமையே கண்ணாயிரம் என்று டம்பெல் வைத்து சாகசம் செய்தனர். அவர்களை பார்த்ததும் சற்று கூச்சம் ஏற்பட்டது.
என்னைப் போலவே தொப்பையுடன் இரண்டு மாமிகள், ஒருத்தி ட்ரெட் மில்லிலும், மற்றொருத்தி தரையில் படுத்தும் உடற்பயிற்சி செய்தனர். அவர்களை பார்த்தவுடன் சற்று தைரியமாக ட்ரெட் மில் நோக்கி நடந்தேன். “ஹை, ஐ ஆம் யஷ், யுவர் டிரெய்னர்,” என்றான் ஓர் யுவன். எனக்கு பாலகனைப் போல தெரிந்தான். பெயர் வேறு யஷ் என்பதால், நானே ஹிந்தி கார பையன் என்று ஊகித்து எனக்கு தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் உரையாடத் துவங்கினேன். உடல் எடை குறைக்க வேண்டுமா? அல்லது , குறிப்பிட்ட பகுதி இளைக்க வேண்டுமா? என்றான். நான் இரு குழந்தைகளுக்கு தாய். வயிறு, இடுப்பு கொஞ்சம் குறைக்கணும், காலில் வலு கூட்டணும் என்றேன் தட்டுத் தடுமாறி. மூன்று நாளா நாம ஒர்க் அவுட் பண்ணலாம், இன்று கார்டியோ, நாளை லோயர் பாடி, மறுநாள் அப்பர் பாடி என்றான் அவன். இன்று இருபது நிமிடம் இதில் நடந்தால் போதும் என்றான். அடடே சுலபமாக இருக்கிறதே, என்று உற்சாகமாக துவங்கினேன்.
மறுநாள் படு உற்சாகமாக சென்று, ‘யஷ் உடற் பயிற்சி செய்ய நான் ரெடி,’ என்றேன். ‘வார்ம் அப் பண்ணுங்க, என்று கூறிவிட்டு நகர்ந்தான். பத்து நிமிடம் கழித்து ‘அண்டர் பாடி எக்சர்சைஸ் ஆரம்பிக்கலாமா,’ என்றேன் ஆர்வமாக. “யூ மீன் லோயர் பாடி?” என்றான் அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. ஆம் என்று அசடு வழிந்தேன். “இருபது ஸ்க்வாட் பண்ணுங்க” என்று கூறி நகர்ந்தான். என் மனம் அண்டர் பாடியிலேயே இருந்தது.
அப்போது தான் கவனித்தேன், யஷ் நன்றாக தமிழ் பேசுகிறான் என்று. உடனே எனது உரையாடலை தமிழுக்கு மாற்றினேன். இப்போது கொஞ்சம் தன்னம்பிக்கை பிறந்தது. அடுத்தடுத்து ‘லெக் லிஃப்ட்’ ‘ ஹிப் பிரிட்ஜ் ‘ என்று தெரிந்த உடற்பயிற்சிக்கு புரியாத பெயர்களைக் கூறினான். ‘நீங்க உங்க ஃபோன்ல இந்த பெயர் எல்லாம் நோட் பண்ணிக்கோங்க. அடுத்த முறை ஈசியா இருக்கும்,’ என்றான். ‘எனக்கு ஃபோன் எல்லாம் வேண்டாம், நான் மைண்டல நோட் பண்ணிக்கறேன்,’ என்றேன் இறுமாப்புடன். நக்கலாக சிரித்துக் கொண்டே நகர்ந்தான். கடைசியில் ‘ ட்ரைசெப்ஸ் புஷ் டவுன்’ என்று ஒன்றை சொல்லிக் கொடுத்தான். நான் மடிந்தேன்.
“இன்றைக்கு இது போதும், நாளை பார்க்கலாம்,” என்று அவன் சொன்னது தான் தாமதம், எனது ஃபோனை எடுத்து அந்த பெயர்களை குறித்துக் கொண்டேன். ‘கடைசியில் என்னப்பா சொன்ன?’ என்று இன்னொரு முறை கேட்டு அந்த ‘ட்ரைசெப்ஸ் ஏதோ ஒன்றையும்’ தெரிந்து கொண்டேன். ஏற்கனவே லோயர் பாடியை, அண்டர் பாடியாக மாற்றிவிட்டேன், நாளை மேல் மாடியையாவது, மன்னிக்கவும், மேல் பாடியையாவது காலிசெய்யாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.

மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “மஞ்சுளா சுவாமிநாதன்/மேல் பாடி காலி”

Comments are closed.