முனைவர் ந.பாஸ்கரன் /உலகளக்கும் மர அவதாரம்

மேலுலகை அளந்த
பெருமை பேருடலின்
ஊடுருவும் ஆணிவேர்ப் பாதம்
கீழுலகைநோக்கி …

தளிர்களை உச்சந்தலையாக
அரும்பும் பூவரும்புகளைக் கண்களாகப்
பரிணமித்து பரிணமித்து
வானோக்கி ஓங்கி உயரும்
நுனிவேரே.

கரங்களாய் விரல்களாய்
கிளைகளை விரித்து விரித்து
அண்டத்தை அணைத்துச்
செல்லும் வேரின்
வினோதங்களே.

வளரும் பூரிப்பில்
உடம்பின் சிலிர்ப்புகளால்
எங்கெங்கு நோக்கினும்
பொங்கி கிசுகிசுக்கும் பூக்கள்
ஆணிவேரின் பேச்சுக்கள்.

ஆணிவேர் நீரிலும்
அழகிய ப்பூக்கள் தேனிலும்
ததும்பி நிற்கும்
மண்ணின் மகிமைகள்
மரஅவதாரங்கள்.