ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)

சன்னதித் தெரு, வளையல் கடைகள், வாழைப்பழத்தோல் தின்னும் மாடுகள், இலவசமாக செருப்பு பார்த்துக்கொள்ளும், அர்ச்சனைத் தட்டு விற்கும் கடைகள் என எதுவும் இல்லாத அமைதியான மண் கப்பித் தெரு! கோயில் வாசலில் ஒன்று, எதிரில் ஒன்று – இரண்டே கடைகள், மரப்பெட்டிகளின் மேல் தொடுத்த துளசியும், கொஞ்சம் கதம்பமும் விற்றுக்கொண்டிருந்தார்கள்! ஓரத்தில் ஆடு ஒன்று புல்லைத் தேடிக்கொண்டிருந்தது.
புதிதாக வண்ணமடிக்கப்பட்ட பொம்மைகளுடன் ஒரு சிறிய கோபுரம் – தசாவதாரங்கள், பாகவதக் காட்சிகள், நாரதர், பிரம்மா, சிங்கம், சங்கு, சக்கரம் – எல்லாப் பொம்மைகளும் பளிச் சென்றிருந்தன. சங்கு, சக்கரம், கையில் கதையுடன் வாசலின் இரு பக்கங்களிலும் துவாரபாலகர்கள் (சாபத்தினால் மூன்று ஜென்மங்களாக அசுரர்களாகவே பிறந்து, பின்னர் திருமாலுக்குச் சேவை செய்பவர்களாம் இவர்கள்!) ஆயுதபாணிகளாகக் காட்சியளிக்கின்றனர்! கோயிலின் உச்சியில் புறாக்கள் மேகங்களைப் பார்த்தபடி, சோகத்துடன் அமர்ந்திருந்தன.


அ/மி (அருள்மிகுவேதான்) ஶ்ரீ வானமுட்டி பெருமாள் (என்கிற) ஶ்ரீ ஶ்ரீனிவாசபெருமாள் திருக்கோவில், கோழிகுத்தி, சோழன்பேட்டை என்ற போர்டு நுழைவாயிலில் நம்மை வரவேற்கிறது. துவஜஸ்தம்பத்தைச் சுற்றி உள்ளே சென்றால் சுமார் 15 அடி உயர வானமுட்டிப் பெருமாள் – விஸ்வரூப தரிசனம் – மலர் விழிகளுடனும், சிவந்த உதடுகளுடனும், கவச குண்டலங்களுடனும் அருள்பாலிக்கிறார். இடது கையில் கதை, வலது கை ‘அபய ஹஸ்தம்’, பின் கைகளில் சங்கு, சக்கரம்! ப்ரம்மாண்டமாய் நிற்பதால், வானமுட்டிப் பெருமாள்! அருகிலேயே தாயார் சேர்ந்தே சேவை சாதிக்கிறார். பிப்பலர் மகரிஷிக்கு விஸ்வரூப தரிசனம் காட்டியதால், வானமுட்டிப் பெருமாள் என அழைக்கப்படுகிறார் என்ற தலவரலாறு உள்ளது.


தனது வியாதிகள் தீர, காவிரிக்கரையில் உள்ள தலங்களை தரிசித்து வருகிறான் குடகுமலையைச் சேர்ந்த நிர்மலன் என்ற அரசன். பல தலங்களுக்குப் பிறகு, கோழிக்குத்திக்கருகில் காவிரியில் நீராடிய போது, பிணிகள் நீங்கி, நாராயணனின் வானளாவிய தரிசனமும் கிடைக்கிறது. கோடி பாவங்களையும் உடனே நீக்கியதால் இந்த இடம் ‘கோடிஹத்தி’ எனப் பெயர்பெற்றது. நாளடைவில், கோடிஹத்தி பாப விமோசனபுரம், மருவி, ‘கோழிகுத்தி’ ஆகிவிட்டது!
அத்தி மரத்தில் வடிக்கப்பட்ட பெருமாள், கிழக்கு நோக்கி உள்ளார். அத்தி மரத்தின் வேர்கள் பெருமாளின் திருவடிகளாக உள்ளன. சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்று கூறப்படுகின்றது. அபிஷேகம் கிடையாது; மூலிகை தைலம், சாம்பிராணி ஆராதனை மட்டுமே. அபிஷேக ஆராதனகள் அருகில் யோக நிலையிலுள்ள நரசிம்மருக்குத்தான் நடத்தப்படுகின்றன. இங்குள்ள தீர்த்தம் பிப்பல மகரிஷித் தீர்த்தம். கோயிலின் பிரகாரத்தில், இக்கோயிலைப் பற்றிய கல்வெட்டுகளின் ஆதாரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டு (உத்தம சோழன் காலம்), 11 ஆம் நூற்றாண்டு (முதற் குலோத்துங்கன் காலம்), 12/13 ஆம் நூற்றாண்டு (துண்டுக் கல்வெட்டு) காலத்தியக் கல்வெட்டுக் குறிப்புகள் இவை. மூன்றாம் குலோத்துங்கன் இக்கோயில் திருப்பணிகள் செய்துள்ளதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
எங்களைப் பார்த்தவுடன், பக்கத்தில் அமர்ந்து ‘செல்’ பார்த்துக்கொண்டிருந்த பட்டர், உடனே எழுந்துவந்து, தீபாராதனை செய்தார். சுறுக்கமான தல வரலாற்றைச் சொன்னார். கை நிறையப் பூப்பிரசாதம் கொடுத்தார். ‘துலா ஸ்நானமா? எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?’ கேட்டுப் புன்னகைத்தார்.
காஞ்சீபுரத்தில் அத்திவரதரைப் பார்க்க, கொடுக்கப்பட்ட சிரமங்களை நினைத்துக்கொண்டேன். இங்கே அத்தி மரத்தில் உருவான ஶ்ரீனிவாசப் பெருமாள், அமைதியாக அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர், திருப்பதி ஶ்ரீனிவாசப் பெருமாள், நரசிம்மர் மூவரையும் வழிபட்டப் புண்ணியம், கோழிகுத்தி வானமுட்டி ஶ்ரீனிவாசப் பெருமாளை சேவித்தால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இருக்கிறது. வரதராஜப் பெருமாள், சக்கரத்தாழ்வார், சப்தசொரூப ஆஞ்சனேயர், விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி ஆகியோரின் சன்னதிகள் இக்கோயிலில் உள்ளன.


மிகுந்த மனநிறைவுடன், வெளியே வந்தோம். மயிலாடுதுறை பைபாஸ் சாலையில் பாண்டிச்சேரி நோக்கி விரைந்தோம் – புதிய பாலங்கள், சாலைகள் மயக்கத்தில், பாண்டிச்சேரி திருப்பத்தைத் தாண்டி 15 நிமிடங்கள் பயணித்தபோதுதான் உணர்ந்தோம், நாங்கள் விழுப்புரம் அருகே வந்துவிட்டோம் என்பதை! மீண்டும் திரும்பி, இரண்டு மணிக்குப் பாண்டி அன்னை, அரபிந்தோ ஆசிரமம் வந்து, சிறிது தியானம் செய்து, வெளியே வந்தோம். வானம் வெளுத்திருந்தது.
திண்டிவனம் வந்து, சென்னை வரும் வழியில் மீண்டும் மழை. திருவண்ணாமலை செல்லும் சாலையின் முனையில் இருக்கும் உணவகத்தில், சூடாக பஜ்ஜி, காப்பி குடித்து, விரைவாக கூடுவாஞ்சேரி வந்து, பின்னர் மிக மெதுவாக ஊர்ந்து மாலை ஆறரை மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்!
துலா ஸ்நானமும், ‘வானமு’ட்டிப் பெருமாளும், இடையிடையே வான் மழையும் மனதையும் உடலையும் ஈரமாக்கிப் பரவசப்படுத்தின!
(முற்றும்).

One Comment on “ஜெ.பாஸ்கரன்./துலா ஸ்நானமும் வானமுட்டிப் பெருமாளும்! (3)”

Comments are closed.