மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம்

வியாழன் கார்த்தால 5:30 மணிக்கு எழுந்து சமைச்சிட்டு இருந்தேன். வழக்கமா என் பின்னாடி வந்து ‘காபி தரியா ‘ ன்னு என்னோட உசரமா, அரும்பு மீசையுடன், உடஞ்ச குரலுடன் எனக்கு தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என் பதினஞ்சு வயசு சீமந்தபுத்திரனை இன்னும் காணலியேன்னு நான் யோசிச்சுட்டு இருந்தேன். அவன் ரூமுக்கு போய் பார்த்தா, மார்கழில கூட ஏசி போட்டுட்டு தூங்கும் அவன் ஃபேனை அனைச்சிட்டு ரெண்டு போர்வை போர்த்தி தூங்கிட்டு இருந்தான். தொட்டு பார்த்தா நல்ல ஜுரம். அவனை வலுகட்டாயமா எழுப்பி dolo 650 கொடுத்து படுக்க வெச்சுட்டு சின்னவளையும், வூட்டுக்காரரையும் எழுப்பி ஸ்கூலுக்கும் ஆபீசுக்கும் அனுப்பினேன். அப்புறம் 10 மணின்னு மகனை எழுப்பி ரசம் சாதம் கொடுத்தேன். இந்த ரூடீன் எனக்கு பழகிப்போன ஒண்ணு.
குழந்தைக்கு ஜூரம்னா முதலில் வைரல் ஃபீவர் ன்னு மூணு நாளைக்கு பாராசிட்டமால் , இலக்ட் ரால், ரசம் சாதம் தான். அப்புறம் சரியா போகலன்னா ஆண்டி பையடிக்ஸ். 103 க்கு கீழ சூடு இருந்தா மருந்தும் ஒத்தடமும் தான். இருந்தாலும் டாக்டர் தட்சணை கொடுக்காம ஜுரம் சரியா போகாது.
வெள்ளிக் கிழமை சாய்ந்தரம் ஸ்கூல்ல இருந்து வரும்போதே சின்னவளுக்கு குளிர் ஜுரம். திரும்ப அதே ரூட்டீன். அவளுக்கு ஒரு ரெண்டு மூணு தடவை தண்ணீர் உத்தடம் கொடுத்தா தான் சரியா போகும்.
இவங்கள கவனிச்சு கிழமை என்னன்னு நான் யோசிக்கும் போது சனிக்கிழமை சாய்ந்தரம் 5 மணி. அப்போ தான் நான் 4 மணிக்கு மைலாப்பூர்ல நடக்கும் ஒரு வரலாற்று சொற்பொழிவுக்கு ரெஜிஸ்டர் பண்ணி இருந்தது நினைவுக்கு வந்தது. 5 மணி ஆனதால் இணையத்தில் அட்டென்ட் பண்ணும் வாய்ப்பும் தவறியது.
சனிக்கிழமை 6 மணியளவில், ‘ எனக்கு தலை பாரமா இருக்கு, குளிருது, ஜுரம் வராப்பல இருக்குன்னு ‘ ஆரம்பித்தார் வூட்டுக்காரர்.
அன்னி ராத்திரிக்குள்ள ‘ அம்ருதாஞ்சன் கொண்டா ‘ ‘ விக்ஸ் தேச்சுவிடு ‘ ‘ வெந்நீர் போடுன்னு ‘ ஓய்வு இல்லாத வேலைகள் வந்துட்டு இருந்தது.
‘ அம்மா ஜுரம் வந்து கொஞ்ச நேரத்திலேயே உன்ன ரொம்ப படுத்தின ரெகார்ட் அப்பாவை சேரும்னு ‘ இப்போ சோஃபாவில் உக்கார்ந்து கலாய்த்தான் என் மகன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல ஜூரமும் ஒரு வட்டம்னு நினைச்சு நானும் அவனோடு சேர்ந்து சிரித்தேன்.
திங்கள் கிழமை காலை தலை பாரத்துடன் தூங்கி எழுந்தேன். மூக்கை உறிஞ்சிக் கொண்டே டோலோ 650 போட்டுக் கொண்டு, வெந்நீர் குடித்தபடி சமைத்தேன். சித்திரைக்கும் மார்கழிக்கும் வித்தியாசம் தெரியாத என் சமையலறையின் கதகதப்பில் இன்று குளிர் தெரியாமல் சமைத்தது ஒரு பிளஸ் பாயிண்ட். அனைவரையும் வழியனுப்பி விட்டு , என் ஃப்ரெண்ட் உடன் அன்று செல்ல இருந்த மார்கழி கச்சேரி நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு ஃபேன் போடாமல் இழுத்து போர்த்தி படுத்துக்கொண்டேன். இன்று எனக்கு ஜுரம்.

One Comment on “மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம்”

Comments are closed.