விஞ்ஞானி/ பெரும் ஆசை

கையளவு உள்ளத்திலே 
கடலளவு ஆசையென்றான் 
ஊரறிந்த கவிஞன்

நானோ
கடலளவு ஆசைக்கிங்கே
கையளவு வாய்ப்புமின்றி
கரையோரம் அலைகிறேன்
கவிஞனாய் ஆக

பிறக்கும் மன கற்பனைக்கு
ஆயிரம் சிறகுகள் முளைக்க
பறக்க இடமின்றி ஆகாயம் 
கூட சுருங்கி போவதை
கண்டு மயங்கி போகிறேன்

காணும் கனவினில் நூறு
நதிகள் பிறக்கையில்
ஓட தடமின்றி பூமியும் 
இங்கே சிறுத்து போவதை
கண்டு வெறுத்து போகிறேன்

உருவாகும் பெரும் ஆசை
கருவாகும் முன்னமே
கலைந்து போவதை
கண்டு மலைத்து போகிறேன்

என்றுதான் எப்படிதான்
கவிதை ஒன்று
எழுத போகிறேன் நான்.