கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்


  • (1)
    அப்பார்ட்மெண்ட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள் ஸ்வாதி. முகம் முழுக்க சோர்வு. லேப்டாப் பையை மேஜை மேல் உதிர்த்தவள், அலிஷாவை நோக்கி ஒரு களைப்பான “ஹாய்” சொன்னாள்.
    தொலைக்காட்சிப் பெட்டியில் கிரிக்கெட்டோடு ஐக்கியமாகி இருந்த அலிஷா, ஸ்வாதிக்கு சொன்ன பதில் “ஹாய்” ஸ்வாதியினுடையதை விடவும் அதி சோம்பலாக இருந்தது.
    “இன்னிக்கு ஆஃபீஸில் வேலை ரொம்ப அதிகம். சாப்பிட நேரமே இல்லை” புலம்பிய ஸ்வாதி, “ரொம்ப பசிக்குது அலிஷா. கிச்சன்ல சாப்பிட ஏதாவது இருக்கா?” தோழியை நோக்கி கேள்வியை வீசினாள்.
    “இப்போதைக்கு இதுதான் இருக்கு” தான் கொறித்துக் கொண்டிருந்த பாப்கார்னை நீட்டினாள் அலிஷா.
    “யானைப் பசிக்கு சோளப் பொறி? வேணவே வேணாம்”, தலையை பலமாக ஆட்டி மறுத்தாள் ஸ்வாதி. “நான் டைரக்டா டின்னரே சாப்ட்டுக்கிறேன்.”
    “அது மட்டும் யார் சமைப்பா? நீயா?”
    “நான் ரொம்ப டயர்டும்மா இன்னிக்கு நீ சமைச்சிடுறியா?”
    “நான் சமைச்சா உனக்குப் பிடிக்கலையே? என்ன செய்யலாம்? ஸ்விக்கி?”
    “சொமாட்டோ?”
    “சரி. காயின் டாஸ் பண்ணு. ரெண்டில் ஒண்ணு முடிவு பண்ணிக்கலாம்.”
    அவர்களின் அன்றைய அதிர்ஷ்டம், ஆர்டர் செய்த உணவு வழக்கத்தை விட தாமதமாகத்தான் வந்தது.
    பசியில் இருந்த இருவரும் அதன் மேல் பாயும் முன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஜோன்ஸ்.
    “நான் பசியோடு வருவேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும் பெண்களே?” பிஸா மேல் பாய்ந்தான்.
    “ஜோ. டோண்ட். அது உனக்கில்லை. எங்களுக்கு.”
    “என்ன சுயநலம்? எல்லாமும் எல்லாருக்கும்” சமத்துவம் பேசினான் ஜோன்ஸ் பிஸாவை விழுங்கிக் கொண்டு.
    மொத்தத்தில் இருந்ததைப் பகிர்ந்து கொண்ட அவர்களில் யாருக்கும் பசி முழுவதுமாகத் தீரவேயில்லை.
    “ஒரு நல்ல குக் கிடைச்சா நல்லாருக்கும்” ஸ்வாதி சொல்ல,
    “சீக்கிரம் கிடைச்சா ரொம்பவே நல்லாருக்கும்” வழிமொழிந்தான் ஜோன்ஸ்.
    “நீ வந்த நேரம்தான் எங்க குக் வேலையை விட்டுட்டாங்க” அலிஷா குறைசொல்ல,
    ஸ்வாதி, “கமான் அலீஷ். ஜோ பாவம். சின்னப் பையன். விட்டுடு” என்றாள் ஜோன்ஸுக்கு ஆதரவாக.
    “நீயே சொல்லு ஸ்வாதி. நானும் நீயும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா இங்க இருக்கோம். சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பிரச்சனையே இல்லை. ஜோ வந்தான். நாம பட்டினிதான். போதாக்குறைக்கு கூட்றதும் சுத்தம் செய்றதும் நாமதான் டர்ன் போட்டு செய்றோம்.”
    “உன் டர்னும் நான்தான் செய்றேன் அலீஷ்” ஜோன்ஸ் குரலில் ஆதங்கம்.
    “கூல். கூல். பக்கத்து வீட்டு ஆண்ட்டி, எதிர் வீட்டு அங்கிள், சொசைட்டி செக்ரட்டரி, வாட்ச்மேன், வாட்ச் கட்டாத மேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லி வச்சிருக்கேன். சமையலுக்கும் வேலைக்கும் ஆள் வேணும்னு. சீக்கிரம் கிடைச்சிடுவாங்க. ஸோ, டோன்ட் வொர்ரி. நிம்மதியாப் போய் தூங்குங்க. குட் நைட்.” ஸ்வாதி முடித்ததும்தான் தாமதம்,
    “இதை யார் க்ளீன் பண்றது?” அலிஷாவின் கைகள் காலி பிஸாப் பெட்டியைக் காட்டியது.
    “இன்னிக்கு உன் டர்ன்” ஜோ விரல் நீட்ட,
    “இல்லை உன் டர்ன்” அலிஷா முறைக்க,
    “ஓகே. ஓகே. ரெண்டு பேரும் போய்த் தூங்குங்க. நான் பாத்துக்கிறேன்” ஸ்வாதி தீர்ப்பு சொன்னாள்.
    அது ஒரு இரண்டு அறைகள் கொண்ட ஒரு நவீன அப்பார்ட்மெண்ட். ஆரம்பத்தில் அதில் அலிஷா மட்டும்தான் தங்கியிருந்தாள். அவள் வேலை செய்யும் மென்பொருள் நிறுவனத்தில் ஸ்வாதி புதிதாக வேலைக்கு சேர்ந்த சமயம், தங்குமிடம் பிரச்சனையானது. அலிஷா ஸ்வாதிக்கு உதவிக்கு வந்தாள்.
    வாடகை முதற்கொண்டு வாட்ச்மேன் டிப்ஸ் வரை இருவரும் பகிர்ந்து கொண்டதில் இருவருக்குமே லாபமாக இருந்தது.
    அதைவிட அலிஷாவுக்கும் ஸ்வாதிக்கும் ரொம்பவே ஒத்துப் போனது. மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் என தீவிர நண்பிகளாகி விட்டனர் இருவரும்.
    சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் வாட்ச்மேன் மனைவி மல்லிகா வந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
    அப்போதுதான் ஜோன்ஸ் வந்து சேர்ந்தான்.
    ஜோன்ஸ் ஸ்வாதியின் கல்லூரி நண்பனின் தூரத்து உறவினன். நகரத்துக்கு வேலைக்கு வந்த அவன் தங்க இடம் தேடி அலைய, எங்களோடு தங்கிக் கொள்ளட்டும் என்றாள் ஸ்வாதி. அலிஷாவும் ஒன்றும் மறுக்கவில்லை. அவளுக்கு ஸ்வாதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நண்பியின் மேல் அசாத்திய நம்பிக்கை.
    .
    இதோ ஒரே ஒரு துண்டு பிஸாவோடு, வீட்டையும் சுத்தப்படுத்தி விட்டுப் பசியோடு தூங்கப் போகிறாள் ஸ்வாதி.
    அருகில் அலிஷாவிடமிருந்து குறட்டை சத்தம். பழகிப் போன தாலாட்டு. தூங்கிவிட்டாள் ஸ்வாதி.
    தனக்கான அறையில் ராத்திரிப் ப்ரேயருக்காக மண்டியிட்டிருந்த ஜோன்ஸ், கடவுளிடம் வைத்த வேண்டுகோள், “சீக்கிரமா ஒரு சமையல்காரம்மாவை அனுப்பி வை ஆண்டவா.”
    ஆண்டவர் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த வீட்டு ஆண்ட்டி அனுப்பி வைத்தாள் செல்வியை. அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு.
    ஜோன்ஸ்தான் கதவைத் திறந்தான்.
    “சமையலுக்கு ஆள் வேணும்னு கேட்ருந்தீங்களா?”
    “ஆமாம். ஒரு நிமிஷம்” என்றுவிட்டு, “ஸ்வாதீ..!”
    “ஏண்டா அலர்றே?” வந்த ஸ்வாதியிடம்,
    “எம் பேரு செல்வி. சமையலுக்கு ஆள் வேணும்னு சொல்லியிருந்தீங்களாமே? பக்கத்து வீட்டம்மா அனுப்பி வச்சாங்க.”
    “உங்க பேரென்னக்கா?”
    “செல்விம்மா. ரெண்டு வருஷமா உங்களுக்கு பக்கத்து ப்ளாட்டுலதான் வேலை செய்றேன். வேலை சுத்தபத்தமா இருக்கும். பொய் திருட்டு கிடையாது. வேணுன்னா நீ வனஜாம்மாகிட்ட கேட்டுப் பாரு.”
    “வனஜா யாரு?”
    “உங்க அடுத்த ப்ளாட்டு அம்மாதான். அவங்களைக் கேட்டா சொல்வாங்க என் சமையல் பத்தி. எட்டூருக்கு மணக்கும் என் கைப் பக்குவம்.”
    “சமையலோட வீடு கூட்றது, பாத்திரம் தேய்க்கிறது, வாரம் ஒரு தடவை ஒட்டடைன்னு மத்த வேலைக்கும் ஹெல்ப் வேணும்.”
    “எல்லா வேலைக்கும் எல்லா ஹெல்ப்பும் பண்ணுவேன் கண்ணு. மாசத்துக்கு ஒரு நாள் லீவு மட்டும் கொடுத்துடு.”
    “சம்பளம்?”
    “வனஜாம்மா வீட்ல பாத்திரம் தேய்க்கிறது, வீடு பெருக்கிறதுன்னு மேல் வேலை மட்டும் செய்றேன். அஞ்சாயிரம் கொடுக்கிறாங்க.”
    “எங்களுக்கு சமையலும் செய்யணும்.”
    “எல்லாத்துக்கும் சேத்துப் பத்தாயிரம் கொடுத்துடு கண்ணு.”
    “பத்தாயிரம் ஜாஸ்தி” முணுமுணுத்தாள் அலிஷா, ஸ்வாதி முறைப்பதையும் கண்டுகொள்ளாமல்.
    “ரெட்டைப் புள்ளை இருக்கு பாப்பா எனக்கு. ஒண்ணு பொண்ணு. ஒண்ணுப் பையன். ஆறாம்ப்பு படிக்குதுங்க ரெண்டும். அதுங்களுக்கு ஸ்கூல் ஃபீஸு, யூனிபாரம், புத்தகம் அது இதுன்னு செலவு எகிறுது பாப்பா. நீங்கல்லாம் உபகாரம் பண்ணுனாதானே எங்களை மாதிரி உழைப்பாளிங்க வாழ்க்கை ஓடும்?”
    ஸ்வாதி, செல்விக்கு பதில் சொல்லிடும் முன், செல்விக்குப் பின்னால் ஒரு வயதான பெண்மணியின் அரவம்.
    “யாரைப் பாக்கணும்?”
    “ஸ்வாதி..” அந்த முதிய பெண்மணி இழுக்க,
    “நான்தான். என்னம்மா வேணும்?’
    “அது வந்து.. நான் இங்கே..”
    அதற்குள் செல்வியின் போன் சிணுங்கியது. “வர்றேன். வர்றேன். இதோ வந்துட்டேன்” போனுக்கு பதில் சொல்லிக்கொண்டே, “வனஜாம்மாகிட்ட சொல்லி அனுப்பு கண்ணு” என்று விரைந்தாள் செல்வி.
    முடி நரைத்திருந்தது. ஒல்லிய தேகம். உயரம் கொஞ்சம் குறைவுதான். முகம் முழுக்கத் தயக்கம் பரவிக் கிடந்தது அந்த முதியவளுக்கு. கூடவே கொஞ்சம் அச்சத்தின் சாயலும்.

(2)
“சொல்லுங்கம்மா. நான்தான் ஸ்வாதி. என்ன விஷயம்?”
“லோகல் மேகஸீன்ல உங்க விளம்பரம் பாத்தேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு.”
“ஆனா நீங்க, உங்க வயசென்னம்மா?”
“அம்பத்தஞ்சு.”
“இந்த வயசுல நீங்க வீட்டு வேலை..”
“என்னால முடியும்மா. நான் நல்லா ருசியா சமைப்பேன். சம்பளம் ரொம்ப கேக்க மாட்டேன்.”
“ஓய்வெடுக்க வேண்டிய வயசுலே ஏம்மா சமையல் வேலை அது இதுன்னு.”
“வீட்டு சூழ்நிலைம்மா. வேலை தேவைப்படுது.”
செல்விக்குப் பிள்ளைகள் செலவு மாதிரி இந்தப் பாட்டிம்மாவுக்கு என்ன செலவோ?
“சரி பாட்டிம்மா. நாளையிலேருந்து வேலைக்கு வந்துடுங்க” ஸ்வாதி சொன்ன நேரம், அலிஷாவுக்கும் ஜோன்ஸுக்கும் அசாத்திய கோபம்.
“இவ்ளோ வயசானவங்க என்ன வேலை செய்வாங்க?”
“அதில்லை நண்பர்களே. வேற யாரும் இந்த பாட்டிம்மாவுக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. கவனிச்சீங்கல்ல? வீட்டு சூழ்நிலைன்னாங்க. நாம வேலை கொடுப்போமே பாட்டிம்மாவுக்கு? ம்?”
ஸ்வாதியின் விருப்பப்படி பாட்டிம்மாவுக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் பாட்டிம்மாவால் ஒரு வேலையையும் செய்ய முடியவில்லை.
தரையை மாப் போடும்போது பாதியில் இடுப்பு பிடித்துக் கொண்டது. மீதித் தரையை ஸ்வாதி மாப் போட்டு சுத்தம் செய்ய வேண்டி வந்தது.
அடுப்பங்கரையில், நின்றுகொண்டு சமைக்கையில் முட்டியைப் பிடித்துக்கொண்டாள் பாட்டிம்மா. பாட்டிம்மா சோபாவில் அமர்ந்தபடி செய்முறையை சொல்ல, அதைக் கேட்டபடி ஸ்வாதியே மீதி சமையலை முடிக்க நேர்ந்தது.
ஒரு முறை மேஜையை சுத்தப்படுத்தும் போது அதன் மேலிருந்த நாலுங்குல கண்ணாடி புத்தர் கீழே விழுந்து நொறுங்கிப் போனார். உபயம் பாட்டிம்மாவின் வயதான கரங்கள்.
புத்தர், அலிஷாவின் பிறந்த நாளுக்கு ஸ்வாதி ஆசையாக வாங்கிக் கொடுத்தது. கீழே கிடந்த புத்தரின் துண்டுகளைப் பார்த்து சிதறிப் போனாள் அலிஷா. அழுகைப் பொங்கிக் கொண்டு வந்தது. கூடவே ஆத்திரமும்.
சிலையை உடைத்துவிட்டு பயந்து நடுங்கியபடியே நின்று கொண்டிருந்த பாட்டிம்மா மேல் பாய்வதற்கு அலிஷா தயாராக, அவளைக் கண்களாலேயே அமர்த்தினாள் ஸ்வாதி.
“அட்டா! புத்தர் உடைஞ்சிட்டாரா? பரவாயில்லை. பரவாயில்லை. புத்தரே பொறுமைதானே சொல்லிக் கொடுத்திருக்கார். இல்லை அலிஷா? பாட்டிம்மா என்ன வேணுன்னா உடைச்சாங்க? நான் உனக்கு வேற புத்தர் வாங்கித் தர்றேன்” ஸ்வாதி அலிஷாவைக் கொஞ்ச, அவளோ ஸ்வாதியின் கைகளைத் தட்டிவிட்டுப் போனாள், பாட்டிம்மவை முறைத்தபடியே.
அலிஷாவுக்கு புத்தர் சிலை என்றால், ஜோன்ஸுக்கு பென் ட்ரைவ். அதையும் சேர்த்துப் பெருக்கித் தள்ளிக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டாள் பாட்டிம்மா.
நல்ல வேளை ஜோன்ஸின் தீவிரத் தேடலுக்கு அகப்பட்டு விட்டது அந்த அதி முக்கிய பென் ட்ரைவ்.
இந்த முறையும், “பாட்டிக்கு கண் சரியாத் தெரியலை. கண்ணாடி பவர் செக் பண்ணா சரியாகிடும். இல்லை ஜோன்ஸ்?” என்று ஸ்வாதி சமாதானத்துக்கு வர, பாட்டிம்மா முன் மௌனம் காத்த ஜோன்ஸ், அவள் அகன்றதும், ஸ்வாதியிடம் எகிறினான்.
“ரொம்ப வயசானவங்க ஸ்வாதி. அவங்களால எதுவும் முடியலை. பேசாம பாட்டிம்மாவை நிறுத்திட்டு செல்விக்காவை வரசொல்லு ப்ளீஸ்.”
“நீ என்ன கருணை இல்லமா நடத்துற ஸ்வாதி? இந்த வயசான அம்மாவால நமக்கு எவ்ளோ கஷ்டம்? நிறுத்திட்டு வேற ஆளைப் பாரு ஸ்வாதி” அலிஷாவும் ஜோன்ஸுடன் சேர்ந்து போர்க்கொடி பிடித்தாள்.
ஆனால் ஸ்வாதியின் தீர்மானம் மாறவேயில்லை. வயசான பாட்டிம்மா எங்கே போவார்கள்? அவருக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள். நாம் கொஞ்சம் சமாளித்துக் கொள்வோமே என்றாள்.
“பாரு ஜோ. பாட்டிம்மா வந்ததாலே நீயே டீ போட நூடுல்ஸ் செய்யக் கத்துக்கிட்ட இல்லே? நானும் கூட பாட்டிம்மா ரெசிபி எல்லாம் நல்லா சமைக்கிறேன்ல? நம்ம வேலையை நாமளே செஞ்சிக்க கத்துக்கிறோம் இல்லையா?”
“நம்ம வேலையை நாம செஞ்சிக்கிறதுக்கு பாட்டிம்மா எதுக்கு?”
“ஏன்னா என் நண்பர்கள் அலிஷாவும் ஜோன்ஸும் ரொம்ப நல்லவங்க. வயசான பாட்டிம்மாவை பொறுத்துக்கிட்டு அவங்களுக்கு உதவி பண்ணுவாங்க” ஸ்வாதியிடம் கொஞ்சம் அதிகப்படியாகவே செண்டிமெண்ட்.
“நீயும் உன் மதர் தெரெஸா மனசும்” முணுமுனுணுத்தபடியே அலிஷா மாப்பை கையிலெடுக்க,
“எப்படியோ ஒழி” ஒட்டடைக் குச்சியை தேடப் போனான் ஜோன்ஸ்.
“இன்னிக்கு உங்களுக்கு என்ன வேணும் டின்னர்? சைவமா, அசைவமா?” இருவரையும் விசாரித்தது கிச்சனிலிருந்து ஒலித்த ஸ்வாதியின் குரல்.
ஒரு வழியாக அப்பார்ட்மெண்ட்டில் அமைதி நிலவியது. எல்லாம் ஒரு பத்து நாளைக்குதான்.
திடீரென பாட்டிம்மா வேலைக்கு வரவேயில்லை. போனும் எடுக்கவில்லை.
இன்று வந்துவிடுவார்கள், நாளை வந்துவிடுவார்கள் என எதிர்பார்த்தால் பாட்டிம்மா வருவதாகத் தெரியவில்லை.
ஆனால் அடுத்த நாள் பாட்டிம்மா போனை எடுத்தாள்.
“உடம்பு சரியில்லைம்மா. அதான் வர முடியலை.”
“பரவாயில்லை பாட்டிம்மா. அட்ரஸ் சொல்லுங்க. நான் வந்து உங்களைப் பார்க்கிறேன்.”
“வேண்டாம். வேண்டாம். நல்லானதும் நானே வர்றேன்.”
“இல்லை பாட்டிம்மா. உங்களுக்கு சம்பளம் வேற கொடுக்கணும். நான் வர்றேனே? அட்ரஸ் மட்டும் சொல்லுங்க.”
“இல்லைம்மா. வேண்டாம். வேண்டாம். நான் நாளைக்கு வந்துடுறேன். அப்பார்ட்மெண்ட்டுக்கு.”
பாட்டிம்மாவின் குரலில் உடல் நலமின்மையைத் தவிர வேறு ஏதோ பதட்டமும் இருப்பது போல ஸ்வாதிக்குத் தோன்றியது.
வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னால் ஏன் வேண்டாம் என்று தடுக்கிறார்கள்? முகவரியை சொல்ல ஏன் மறுக்கிறார்கள்? ஸ்வாதியிடம் பலத்த யோசனை.
அடுத்த நாள் பாட்டிம்மா அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தபோது ஸ்வாதி எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஒன்றும் பேசாமல் சம்பளப் பணத்தைக் கொடுத்தாள்.
“ஓ..! இதை நான் மறந்தே போயிட்டேன்” என்றபடியே வாங்கிக்கொண்டாள் பாட்டிம்மா.
புறப்பட்டவளிடம், “உடம்பு சரியில்லேன்னா ரெஸ்ட் எடுங்க பாட்டிம்மா. நல்லானதும் வேலைக்கு வந்தாப் போதும்” ஸ்வாதி சொல்ல,
“இப்ப பரவாயில்லம்மா. நான் நாளைக்கு வந்துடறேன்.” சொல்லிவிட்டு பாட்டிம்மா கிளம்ப, அவளின் முதுகுக்குப் பின்னால்,
“ஏய் ஜோ. கிளம்பு. கிளம்பு” பரபரத்தாள் ஸ்வாதி.
“எங்கே?”
“சொல்றேன். பைக்கை எடு முதல்ல.”
“ஒரு நிமிஷம். ட்ரெஸ் மாத்திட்டு..”
“ஒரு மண்ணும் வேணாம். வா. பாட்டிம்மா போயிடுவாங்க.”
அழுக்கு டி-ஷர்ட், அதை விட அதி அழுக்கு ஷார்ட்ஸில் ஜோன்ஸ் பைக்கை ஓட்ட, பில்லியனில் ஸ்வாதி.
பாட்டிம்மா ஏறிய ஆட்டோவின் வாலைப் பிடித்தது பைக்.
(3)
ஆட்டோ சென்று நின்றது ஒரு பெரிய பங்ளாவின் வாசலில். அது இருந்த சாலையிலும் பணக்காரத்தனம். அதன் தோற்றத்திலும் செல்வ செழிப்பு.
ஆட்டோ விட்டு இறங்கிய பாட்டிம்மா பங்களாவின் உள்ளே நுழைந்தாள்.
“இவ்ளோ பெரிய வீட்டில் வேலை செய்றாங்களா? நம்ம பாட்டிம்மா?” ஜோன்ஸ் அதிசயித்தான்.
“வா பாக்கலாம்.”
உள்ளே, பாட்டிம்மா சோர்வாக சோபாவில் சரிந்தாள்.
அருகில், பணிவோடு வந்து நின்றப் பணிப்பெணிடம், “சூடா ஒரு கப் காபி,” ஆணையிட்டாள்.
ஸ்வாதியும் ஜோன்ஸும் அதிர்ந்தார்கள்.
அவர்களைப் பார்த்த பாட்டிம்மா அவர்களை விட அதிக அதிர்ச்சிக்குப் போனாள்.
“ஹலோ ஸ்வாதி. ஹாய் ஜோ.”
“ஏன்?” – ஒற்றை வார்த்தையில் ஒரு கேள்வி ஸ்வாதியிடம்.
“சின்னக் கேள்வி. பதில் ரொம்ப நீளம். நின்னுகிட்டே கேக்க வேணாம். உக்காருங்க.”
“செம காஸ்ட்லி கவுச் ஸ்வாதி” அமர்கையில் ஸ்வாதியின் காதில் கிசுகிசுத்தான் ஜோன்ஸ்.
பாட்டிம்மா, “என் குடும்பம்” சுவற்றில் ஒரு புகைப்படத்தை கை காட்டினாள்.
புகைப்பட காலத்தில் பாட்டிம்மா இளமையாக இருந்திருக்க வேண்டும். “நானும், என் பொண்ணும், என் பையனும்.”
“அவுங்க இப்போ..”
“பையன் ஆஸ்திரேலியாவில். பொண்ணு அமெரிக்கா. கல்யாணமாயிடுச்சி ரெண்டு பேருக்கும். அங்கேயே. வெளிநாட்டில். நான் இல்லாமல்.” பாட்டிம்மாவின் குரல் தட்டையாக ஒலித்தது.
“எனக்குப் பேரன் பேத்தி கூட இருக்காங்க. இதோ” தன் அலைபேசியில் புகைப்படங்களை தடவியது பாட்டிம்மாவின் தோல் சுருங்கிய விரல்கள்.
புகைப்படங்களைப் பார்த்து, “செம ரிச் இல்லை?” மறுபடியும் ஸ்வாதியிடம் கிசுகிசுத்தான் ஜோன்ஸ்.
“திரும்பவும் கேக்கிறேன் பாட்டிம்மா. ஏன்?”
“தனிமை” – இந்த முறை ஸ்வாதியின் கெள்வி சற்று நீளமாக இருக்க பாட்டிம்மாவின் பதில் ஒரே ஒரு தனிச் சொல்லாக அமைந்தது.
“இல்லாம இருக்கிறது சிரமம். இருந்தும் இல்லாம இருக்கிறது கொடுமை.”
பாட்டிம்மா தொடர்ந்தாள்: “எனக்கு குடும்பம், உறவுகள் எல்லாம் இருந்தும் இல்லாத நிலைமை. எங்கூட ரெண்டு வார்த்தை பேச ஆளில்லை. என்ன வேணும், எப்டி இருக்கேன்னு விசாரிக்க யாருமில்லை. யாருக்கும் நேரமில்லை. நான் உயிரோடு இருக்க காரணமே இல்லை” இயந்திரத்தனமாக ஒலிக்கத் தொடங்கி உணர்ச்சிகள் ததும்பலில் தழுதழுத்தபடி முடிந்தது பாட்டிம்மாவின் குரல்.
“பாட்டிம்மா பாவமில்ல?” ஜோன்ஸிடம் மீண்டும் ஒரு கிசுகிசுப்பு.
“பொய் சொல்லிட்டேன். தப்புதான். ஆனா தினமும் உங்களைப் பாக்க வரும்போது, உங்களோட நேரம் செலவு பண்ணும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. உங்க உலகத்துல ஒரு சின்ன இடம் எனக்குன்னு இருக்குங்கிறது ரொம்பவும் உற்சாகமா இருக்கு.”
ஜோன்ஸ் கூட இப்போது எதுவும் கிசுகிசுக்காமல் அமைதியாகவே இருந்தான், ஸ்வாதியைப் போலவே.
உரையாடலற்ற சிறு அமைதிக்குப் பிறகு ஸ்வாதி தன் அலைபேசியை கையில் எடுத்தாள். பேசினாள்.
“ஹலோ. வனஜா ஆண்ட்டி? நான் ஸ்வாதி பேசறேன். ஆமாம். உங்க பக்கத்து ப்ளாட் ஸ்வாதிதான். ஆமாம் ஆண்ட்டி. அது விஷயமாதான். செல்விக்காவை நாளையிலேருந்து எங்க வீட்டுக்கு வேலைக்கு வர சொல்றீங்களா? ஒகே ஆண்ட்டி. தேங்க்யூ ஆண்ட்டி” ஸ்வாதி அலைபேசியை அணைக்க,
பாட்டிம்மாவிடம் பதட்டம். “என்னை வேலையை விட்டு நிறுத்திடாதேம்மா. ப்ளீஸ்.”
“வாய்ப்பே இல்லை பாட்டிம்மா. உங்களை டிஸ்மிஸ் பண்ணி பத்து நிமிஷம் ஆச்சு. நீங்களே கேட்டீங்கதானே? வேற ஆளும் அப்பாயிண்ட் பண்ணியாச்சு.”
“ஸ்வாதி, ப்ளீஸ்! நீயாவது சொல்லேன் ஜோ!”
அதற்கு மேலும் பாவனையான கடுகடு முகத்தைக் காப்பாற்ற முடியவில்லை ஸ்வாதியால். மெலிதான ஒரு புன்னகைக்குப் போனாள் அவள்.
எழுந்து பாட்டிம்மாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் வயதான கைகளைத் தன் இளைய கைகளில் எடுத்துக்கொண்டாள்.
“பாட்டிம்மா. நீங்க இனிமே எங்க சமையல்காரம்மா இல்லை. எங்களின் தோழி. இந்த ஸ்வாதி, அலிஷா, ஜோவோட கவிழாத கப்பலின் நாலாவது சினேகிதி” ஸ்வாதி நெகிழ்ச்சியுடன் பேச, பாட்டிம்மாவின் விழியோரம் ஈரம் அரும்பியது.
“நாங்க யாராவது ஒருத்தர் தினமும் உங்களை வந்து பாப்போம். உங்க ஷாப்பிங், அவுட்டிங், பார்ட்டி, டின்னர், மூவி எல்லாமே இனிமே எங்களோடதான். அப்புறம் ஞாயித்துக் கிழமை நீங்க எங்களைப் பாக்க கண்டிப்பா வந்துடணும். அன்னிக்கு உங்க ரெசிபியில் பிரியாணி ஸ்பெஷல். ஓகே? ஜோவுக்கு மட்டும் தயிர்சாதம்.”
“வொய் மீ?” ஜோன்ஸ் சுணங்க,
“ஜோக் ஜோ. பாட்டிம்மா சிரிக்கணும்ல?”
நிஜமாகவே பாட்டிம்மா சிரித்தாள். ஜோன்ஸ் புன்னகைத்தான். ஸ்வாதி அலிஷாவுக்கு போன் செய்தாள். போன் ஸ்பீக்கருக்கு போனது.
அங்கே நிலவிய அந்த தருணத்து மகிழ்ச்சி ஒரு அழகிய ஆரம்பம்.
அட, வேறென்ன தேவை மனிதனின் மகிழ்ச்சிக்கு? கொஞ்சம் கொஞ்சம் சினேகம் போதாதா என்ன?

11 Comments on “கல்பனா சன்யாசி/கவிழாத கப்பல்”

  1. மென்மையான உணர்வுகளை நெருடிக்கொடுக்கும் மென்மையான கதை. அருமை. கல்பனா அவர்களின் அற்புத படைப்பில் இதுவும் இன்று. நடை சுகமோ சுகம்.

    1. மிகச் சிறந்த எழுத்தாளரான தங்களின் பாராட்டு உற்சாகம் தருகிறது ஷியாமளா மா. நன்றி, நன்றி!

      1. பரிசுகளை அள்ளும் திறமை மிக்க எழுத்தாளரான தங்களின் பாராட்டு உற்சாகம் தருகிறது வசந்தா மா. நன்றிகள்! நன்றிகள்! அன்புடன் – கல்பனா சன்யாசி

    1. சிறந்த எழுத்தாளரான தங்களின் பாராட்டு என் பேனாவின் பாக்கியம். நன்றிகள் சுஸ்ரீ சார்! நன்றி, நன்றி! அன்புடன் – கல்பனா சன்யாசி

  2. மிக அற்புதமாக எழுதப் பட்ட கதை. யாரும் இதுவரையில் தொடாத கற்பனை. மிக சரளமான நடை. பெரிய பரிசுக்குரிய கதை இது. வாழ்த்துகள் மா

    1. தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும், ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ரவி சார்! I really owe you a lot! Loads of gratitude Sir! Thank you!

  3. இன்றைய வயதான , வசதியான பலரின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பணக்கார அனாதைகள். அதற்காக வீட்டு வேலைக்குப் போக அவர் எடுத்த முடிவு அதீதம் என்றால் கவிழாத கப்பலில் அவர்கள் அவரை அணைத்துக்கொண்ட விதம் அழகு. Great writing.

    1. ஹலோ பானு ஜி! அருமையான கதைகளை படைக்கும் திறமையான எழுத்தாளரான தங்களின் பாராட்டு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது தோழி! நன்றி! நன்றி! நன்றி! அன்புடன் – கல்பனா சன்யாசி

Comments are closed.