
ஒரு முக்கியமான தொடரின் பாதியில் ரிடையர்மெண்ட் முடிவை எடுப்பது மிகக் கடினமான ஒன்று. அஷ்வினின் இந்த முடிவை நாம் அனைவரும் மதித்து ஏற்றுக் கொண்டாலும், இதன் பின்னணி குறித்து சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. வெளிநாட்டு போட்டிகளில் இனி நமக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று நினைத்து இந்த முடிவை எடுத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அதற்கான எல்லா வாய்ப்பும் உள்ளது.
தோணி தலைமையில் வெளிநாடுகளில் தொடர் தோல்விகளை சந்தித்த பொழுது அணியில் அஷ்வினும் இருந்தார். அதை மறுப்பதற்கில்லை. அந்த சமயத்தில் நமக்கு சரியான பந்து வீச்சாளர்களும் இல்லை. சேனா நாடுகள் என்று அழைக்கப்படு தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளில் அஷ்வினின் பர்பாமன்ஸ் குறைவு தான் என்று குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் சேனா நாடுகளுக்கு முதல்முறையாக செல்லும் வீரர்கள், உடனடியாக பர்பாமன்ஸ் செய்வது கடினம். குறைந்தபட்சம் 2 தொடர்கள் விளையாடிய அனுபவம் இருக்க வேண்டும். முதல் முறையாக சேனா நாடுகளுக்கு சென்றவுடன் ரன்கள் குவித்தவரோ, விக்கெட்கள் எடுத்தவரோ இங்கு மிகமிக குறைவு.
அஷ்வினைப் பொறுத்தமட்டில் அவர் அனுபவம் பெற்ற பிறகு சேனா நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் வெளியே உட்கார வைக்கப்பட்டார். முக்கியமாக கோஹ்லியின் கேப்டன்ஷிப்பில் அணியில் அவரது இடம் கேள்விக்குறியானது. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் அஷ்வின் இல்லாத அணியை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் வெளிநாடுகளில் அஷ்வினின் அனுபவம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டது என்பது தான் உண்மை.
இத்தனைக்கும் இங்கிலாந்தில் அவர் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். மற்ற நாடுகளில் மிக மோசம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அணியில் அவருக்கு இடம் இல்லை என்பது தொடர்ச்சியாக அவரை பாதித்திருக்கிறது.
கடந்த சில வருடங்களில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த ரெக்கார்ட்களை வைத்திருப்பவர் அஷ்வின். பேட்டிங்கிலும் அதிரடி அணுகுமுறையை கொண்டு வந்திருந்தாலும், வெளிநாடுகளில் அவருக்கு இடம் இல்லை என்ற நிலை அவரை காயப்படுத்தியிருக்கும். மிக மோசமான பேட்டிங் பார்மில் இருக்கும் கோஹ்லி, ரோகித் போன்றவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் போது, மேட்ச் வின்னர் அஷ்வின் பெஞ்சில் உட்காரும் நிலை தான் இந்திய அணியில் இருக்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்று தாரளமாக சொல்லக்கூடிய ரெக்கார்டை வைத்திருப்பவருக்கு பேர்வெல் போட்டி நடத்தி வழியனுப்பி இருக்க வேண்டும்.
இந்திய அணியில் விளையாடிய பல லெஜண்டுகள் மனதளவில் காயத்துடன் தான் வெளியேறி இருக்கிறார்கள். கங்கூலி, சேவாக், லக்ஷ்மண், ட்ராவிட், கும்ப்ளே, ஜாகீர்கான் என பல வீரர்களுக்கு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்ற வருத்தம், அனைத்து ரசிகர்களுக்கும் உண்டு. அஷ்வினுக்கும் இது தொடர்கிறது.
இந்திய அணி நிர்வாகம் இது தொடர்பாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்திய வீரராக மட்டுமே அஷ்வின் ரிடையர் ஆகியிருக்கிறார். ஆனால் கிரிக்கெட் தான் அவரது மூச்சு. எப்போதும் அவர் கிரிக்கெட்டில் தான் இருப்பார்.
