
காலவன் (ஆர்க்கே)/ஜன்னல் மரம்
(கவிதை திறந்தது கதவு என்ற ஆர்.கே.இராமநாதனின் கவிதைத் தொகுதி நேற்று வெளியிட்டார்கள்.
அதிலிருந்து ஒரு கவிதையை இங்குக் குறிப்பிட்டுள்ளேன்.
இந்தக் கவிதைப் புத்தகம் புத்தகக் காட்சியில் அரங்கம் 675 ல் கிடைக்கும். விலை ₹ 150)
பரபரவென்று
அணில்
இங்குமங்கும் ஓடுகிறது.
சின்னஞ்சிறு
சிட்டொன்று
கிளை விடுத்து
இலை தவிர்த்து
பூவின் மென்மையில்
அமர்ந்தாடுகிறது.
எறும்புகளும்
தேனீக்களும்
மலர்த்தேன் உண்கின்றன.
அந்தன்
நாகலிங்க மர உயரம்
அடுத்த மாடிக்கும் நீள்கிறது.
இளஞ்சிவப்பு
சிவலிங்கம் போல
அதன் மலர்
மேல்பட நாகக் கவிவாய்
அதன் ஒற்றை இதழ்.
உதிர்ந்த மலர்கள்
மரத்தின் காலடியில் வீழ்ந்து
தாங்கிய பூமிக்கு
நன்றி சொல்கின்றன.
யாரோ பேசியபடியே
வீழ் மலர்களை
சிவனுக்காய்
எடுத்துச் செல்லும்
காலடிச் சத்தம்.
நோயுறை உடலுடன்
வாடிய மனதுடன்
மருத்துவ மனையின்
மூன்றாம் மாடி
மூலையில்
கிடக்கும் எனக்கு
இந்த
ஜன்னல் மரத்தை விட்டால்
வேறேன்ன
புற உலகத் தரிசனமிருக்கு?!

உருக்கமான ஆனால் அழகியலோடு இணைந்த கவிதை. ஆரக்கே ஓர் அருமையான கவிஞர் என்பது மீண்டும் நிரூபணமாகிறது!
கடைசி வரி …. கண்ணீருடன்
உருக்கம்.