எல்.ரகோத்தமன்/அவர்


அவர் ஒரு அறிவார்ந்த மனிதர். ஆனால் அசாதாரண மனிதர் அல்ல. ஏனெனில் அவர் என் நண்பர்.  டில்லியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.  அதீதமாக பொருளாதாரம் பற்றி பேசுபவர்.  செஸ் விளையாட்டில் தனி ஆர்வம் கொண்டவர். அலாதியான ஆங்கில புலமை கொண்டவர். பேசும்பொழுது நிறைய ஆங்கில சொற்களே நுனி நாக்கில் வந்து விழும்.
டில்லியில் மத்திய அரசின் பொருளாதாரத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்.  ஒரு நாள் தன் ஆபீஸ் நண்பர் ஒருவரின் தந்தை இறந்துவிடுகிறார்.  அவர் இதுவரை எந்த சாவு வீட்டிற்கும் சென்றதில்லை. ஏன் சாவையே பார்த்ததில்லை. ஒன்றை மட்டும் தெரிந்து வைத்திருந்தார். சாவு வீட்டிற்கு சென்று வந்தால் குளிக்க வேண்டும் என்று.  அந்த வாய்ப்பு இன்று தான் ஏற்படும்  போலிருப்பதை எண்ணி சிறிதே தயக்கம் அவருள் தொக்கி நின்றது. நண்பர்பளின் அழைப்பை தட்டிக்கழிக்க முடியாமல் அந்த சாவு வீட்டிற்குச் சென்றார்.  அங்கே நண்பனின் தந்தையை கிடத்தியிருப்பதை கண்டதும் உடலெலெலாம் வியர்தெதுவிட்டது அவருக்கு. அசைவற்று நெடுஞ்சான் கிடையாக கிடப்பதற்கு பெயர் தான் மரணமா? அன்று தொற்றிறிக்கொண்டது அவருள் மரணம் பற்றிய சிந்தனை.  மரணித்துப் போவதற்குத்தான் வாழ்கிறோமா? அசைவற்றுப் போவதுதான் வாழ்க்கையா! இப்படி அவர் மரணத்தின் மூலம் எதையோ தேடுவதையே தன் அறிவை செலுத்த்தத் தொடங்கினார்.
ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தன் வேலையை ஒரு ஒற்றை கடுதாசியில் முறித்துக் கொண்டார். காரணம் மேலதிகாரியுடன் மோதல்.  அன்றிலிருந்து அவர் வாழ்க்கை வேறு  திசையில் பயணிக்க ஆரம்பித்தது. வேலையற்ற வாழ்க்கை. சரியாகச் சொல்லப் போனால் வேலை செய்ய பிடிக்காத வாழ்க்கை. அதனால் குடும்பத்தில் பிணக்கு. வேறு வழியின்றி மனைவியின் சகோதரர்களின் அழுத்தத்தால் சென்னைக்கு வரவேண்டிய சூழல்.   சென்னையில் சில நாட்கள் டூடோரியல் பள்ளியில் மாணவர்களுக்கு பொருளாதாரம் கற்பித்தார்.  அத்தோடு ஒரு சிறு தொகையை ஒதுக்கி சென்னை செஸ் கிளப்பில் சேர்ந்தார்.  மாணவர்களுக்கு பாடம் எடுத்துவிட்டு வரும்பொழுதோ அல்லது எடுக்கப் போகும் முன்போ செஸ் விளையாடச் சென்றுவிடுவார். தன் மூளையை எப்பொழுதும் கூர்மையாக வைத்துக்கொள்ள செஸ் உதவுவதாகச் சொல்வார்.  கேட்டால், தாஸ்தாவெஸ்கி செஸ் விளாயாட்டின் மூலம் தன் அறிவை கூர்மையாக வைத்திருந்ததாகச் சொல்வார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
ஒரு நாள் என் வீட்டு வாசலில் வந்து அழைத்தார். யாரோ என்று அவசரமாக வந்து பார்த்தேன். இவர்.  என்னை கடற்கரைக்குச் செல்ல அழைத்தார். அப்போது மணி இரவு எட்டு.  வீட்டில் கடற்கரை என்று சொல்லாமல் “ இதோ வந்துவிடுகிறேன் “ என்று உரைத்துவிட்டு அவருடன் கடற்கரைக்குச் சென்றேன். அன்று முழுக்க முழுக்க அவரேதான் பேசிக்கொண்டிருந்தார்.
தனது சரியான வருமானமின்மை. இன்லாஸ்களின் தொல்லை. குழந்தைகளிடம் மதிப்பிழந்த தனமை …இப்படி எல்லாவற்றையும் விடமால் பேசித்தள்ளினார்.  அப்போது  கடலின் மேலே ஒரு விமானம் தாழப்பறந்து சென்றது. அதை கண்டதும்,  “  ஃபூல்ஸ்…இந்த அலுமினிய டப்பாவை நம்பி எத்தனை பேர் போறாங்க பாரு “ என்று சட்டென வாழ்வின் நிலையாமைக்கு தாவிவிட்டார். நேரம் பத்தரை ஆனதால் இருவரும் வீடுபோய் சேர்ந்தோம்.
 
இந்த கடற்கரை சந்திப்பிற்கு பிறகு நானும் அவரும் ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு டீ கடையில் சந்தித்தோம்.  தனக்கு ஒரு வாரமாக தலைவலிப்பதாகவும் எல்லா தைலமும் சோதித்து விட்டதாகவும். எதுவும் கேட்கவில்லை என்றார்.
“ டாக்டரை பார்க்க வேண்டியது தானே “ என்றேன்.  பார்க்கலாம். ஆனால் அதற்கும் இன்லாஸைத்தான் அனுகவண்டும். அதற்குத்தான் யோசிக்கிறேன் என்றார்.
 
இந்த டீக்கடை சய்திப்புத்தான் எங்களின் கடைசி சந்திப்பு. ஏனெனில் அடுத்த மூன்று நாட்களில் இவ்வுலகை துறந்து விட்டார் அவர்.
 
இந்த அற்புதமான என் நண்பர் வேறு யாருமல்ல.  “ இடைவெளி “ என்ற அற்புதமான குறுநாவலை படைத்த திரு சம்பத் அவர்கள்.
 
                                                                   *