தீபா ஜானகிராமன் /இயக்குநர் டேவிட் லின்சுக்கு அஞ்சலி

சரியான ஞானக் கிறுக்கன். தன் உள்ளுணர்வின் உந்துதலில் மட்டுமே படமெடுக்கக் கூடிய வாய்ப்பு பெற்றவர்கள் மிக அரிதானவர்கள். ஒரு படம் வெற்றியடைந்தால், பேசப்பட்டால் வரும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதவர்களும் அரிதானவர்கள்.
ERASERHEAD படத்துக்குப் பிறகு இவருக்கு வந்த வாய்ப்புகளில் இவர் தேர்ந்தெடுத்தது THE Elephant Man கதையை. டேவிட் லின்ச் இயக்கிய படங்களில் நான் முதலில் பார்த்த படமும் இது தான். இந்தப் படத்தைப் பார்த்தபோது பல இடங்களில் கலங்கியிருக்கிறேன்.
தான் நம்பும் தத்துவம், உளவியல், கருத்தாக்கங்களை படங்களாகத் தேர்ந்தெடுத்துக் காட்டக்கூடிய கூரிய அறிவு கொண்ட ஒருவர். இப்படியான திறமை கொண்ட பல இயக்குநர்களுக்கும் உள்ள ஒற்றுமை இவருக்கும் உண்டு, அது இவர் ஓவியராகவும் இருப்பது. மிக பிரம்மாண்டமாக, விஸ்தாரமாக சொல்ல வேண்டியதைக் கூட ஒரு ஃபிரேமுக்குள் காட்டிவிடக்கூடிய சாமர்த்தியம் இவருக்கு உண்டு. ஒரு பானைக்குள் யானை நுழைவது போல என்று தோன்றும் இவரது படங்களைப் பார்க்கையில். இசையிலும் மேதமை கொண்டவர்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய THE FABLESMAN படத்தில் இயக்குநர் ஜான் ஃபோர்டாக நடித்திருப்பார். நல்ல காட்சி ஒன்றுண்டு. அந்த பைப்பைப் பற்ற வைத்துவிட்டு பேசுவது. வாய்ப்பு கேட்டு ஒரு பெரிய இயக்குநரிடத்தில் செல்லும் இளைஞனுக்கு ஒவ்வொரு நொடியும் பதற்றமானவை. இந்த மனிதர் குப்குப்பென்று பைப்பினை பற்ற வைத்தபடி இருப்பார். பிறகு அதிரடி தொடங்கும். எனக்குப் பிடித்தக் காட்சிகளுள் ஒன்று.
தொடர்ந்து இவரது படங்களை அடுத்தடுத்துப் பார்க்கலாம் என்று பார்க்க முடிந்ததில்லை. கொஞ்சம் கலவரமாகத் தானிருக்கும். நீண்ட கால இடைவெளிகளில் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். இவருக்கென்று ஒரு உலகத்தை திரையில் சிருஷ்டித்திருக்கிறார். திரும்பவும் ஒவ்வொன்றாக இவரது படங்களையும் தொலைகாட்சித் தொடர்களையும் பார்க்க வேண்டும். ஒருவகையில், இவர் நமது மனநிலையை சோதிக்கத் தரும் பயிற்சியாகவே படங்களை எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
Happy Journey Master LYNCH